JEE, NEET தோ்வுகளுக்கான  பயிற்சி வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை..!

 JEE, NEET தோ்வுகளுக்கான  பயிற்சி வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை..!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகளில் மாலை நேரத்தில் ஜேஇஇ,  நீட் போன்ற போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி மாலை நேரத்தில் வழங்கப்படவுள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டு தொடங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில்,  அரசு பள்ளி மாணவா்களுக்கு நீட்,  ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.  இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையே,  நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அண்மையில் தெரிவித்திருந்தாா்.
அதன்படி பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்களில் ஜே.இ.இ., நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு எழுத விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.
  • பெரும்பாலான மாணவர்கள் நுழைவுத் தேர்வு பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது.
  • மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்க,  அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் முதுகலை பாட ஆசிரியர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும்.
  • நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னார்வத்துடன் செயல்படவல்ல ஓய்வு பெற்ற ஆசிரியர்களையும் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களையும் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் இருப்பின் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம்.
  • அனைத்து வேலைநாட்களிலும் பாடவாரியாக மாலை 4 மணி முதல் 30 மணி வரை பின்வருமாறு ஜே.இ.இ., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் தாவரவியல், கணித பாடங்கள் திங்கள்கிழமை,  இயற்பியல் பாடம் செவ்வாய்க்கிழமை,  விலங்கியல் மற்றும் கணித பாடங்கள் புதன்கிழமையும் வேதியியல் பாடம் வியாழக்கிழமையும் , மீள் பார்வை மற்றும் சிறு தேர்வு வெள்ளிக்கிழமையும் கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.
  • பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள் வார இறுதி நாளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநிலக்குழு உதவி புரியும்.
  • மேலும்,  அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படும். அதுசார்ந்து அவ்வப்போது வாட்ஸ்அப்பில் பகிரப்படும்.

இப்படியாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...