ஆந்திராவில் இரு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து.. பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு…
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிஷாவின் ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் மற்றொரு பயணிகள் ரயில் மீது நேற்று இரவு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 19 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் இதுவரை 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்ற பயணிகள் ரயில் கண்டகப்பள்ளி என்ற ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென மோதியது. இந்த பயங்கர விபத்தில் 5 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்கள் மோதியதால் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டு இருள் சூழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்தில் தற்போது வரை மொத்தம் 19 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு விஜயநகரம் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆந்திராமாநில அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒடிஷாவின் பாலசோரில் அண்மையில் நிகழ்ந்த நாட்டையே உலுக்கிய ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 280 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அதே போல ரயில் விபத்து ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. இத்தகைய ரயில் விபத்துகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தைத் தொடர்ந்து அந்த ரயில் மார்க்கத்தில் செல்லும் மொத்தம் 12 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரயில்கள் புறப்படும் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.