டிரான்ஸ்பர்
காவல்துறை உயர் அதிகாரியைச் சந்திக்க காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார். உதவியாளர் உள்ளே போக அனுமதி தந்ததும் உள்ளே சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார்.
”என்ன விஷயம்…!” கேட்டார் உயர் அதிகாரி.
”சார்…எனக்கு தஞ்சாவூருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு, இன்னும் ஒரு வாரத்துல டூட்டியில ஜாயின் பண்ணணும்…!”
”டிரான்ஸ்பர்ல விருப்பம் இல்லையா…?”
”அப்படி எதுவும் இல்ல சார்…அரசு ஊழியர்ன்னா மூணு வருஷத்துக்கொரு தடவ டிரான்ஸ்பர் ஆகுறது சகஜம் தான். என் டிரான்ஸ்பர நான் சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்..!”
”சரி…எதுக்காக இப்போ என்ன பார்க்க வந்தீங்க…? கேட்டார் உயர் அதிகாரி.
”சார்…இப்போ என் மூத்த மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான், இரண்டாவது பொண்ணு ஆறாவது படிக்குறா…ஸ்கூல் தொறந்து ஒண்ணரை மாசம் ஆகுது, இந்த நேரத்துல அவங்க டிசிய வாங்கி தஞ்சாவூர்ல கொண்டு போய் சேர்க்கணும். ஏற்கனவே எல்லா ஸ்கூல்லயும் அட்மிஷன் முடிஞ்சிருக்கும், ஏதாவது ஒரு ஸ்கூல்ல தான் அட்மிஷன் கிடைக்கும், அங்க தரமான கல்வி கிடைக்குமாங்குறது சந்தேகம் தான், இனிமே டிரான்ஸ்பர் குடுக்கிறதா இருந்தா ஏப்ரல் அல்லது மேய் மாசத்துல குடுங்க, அத சொல்லீட்டு போகத்தான் வ்ந்தேன்..!”
ஒரு கணம் யோசித்த உயர் அதிகாரி அவரது டிரான்ஸ்பரை அடுத்த ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உத்தரவிட்டபோது ம்கிழ்சியோடு வெளியேறினார் சாந்தகுமார்.