நட்பு சூழ் உலகு
விடிகாலை உறக்கம்
கலைகிறேன்
வேப்பமரத்துக் குயிலின்
சினேகமான குரலோசையில்.
வீதியிலிருந்தே
விசிறி அடிக்காமல்
செய்தித்தாளைக்
கரங்களில் கொடுத்துவிட்டு
காலை வணக்கம்
சொல்லிப் போகிறான்
பகுதி நேர வேலை பார்க்கும்
பள்ளிச் சிறுவன்
மூன்றாவது மாடி ஏறிவந்து
மூட்டு வலி எப்படிமா இருக்கு ?
அக்கறையான விசாரிப்போடு
பால் ஊற்றிப் போகிறார்
பல்லுப் போன தாத்தா
தொட்டிச் செடில மொதல்ல
பூத்தப் பூவும்மா
பாப்பாவுக்கு வச்சுவுடுமா
ஆசஆசையாய்
கீரையோடு ரோசாப்பூவையும்
வைத்து விட்டுப்போகிறார்
வெள்ளாயிப் பாட்டி
நகரத்து மனிதர்களும்
நட்பு பாராட்டுவார்கள்
இவர்களின்
நட்பு சூழ் உலகில்தான்
ஒவ்வொரு நாளும் நகர்கிறது
எனக்கு.