புத்தகம்
எழுத்தாளர் ஏகாம்பரம் தனது சம்பாத்யம் முழுவதையும் புத்தகங்கள் வெளியிடுவதிலேயே கரைத்துக்கொண்டிருந்தார்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகனுக்காக ஒரு அழகான வீட்டைக் கட்டி எந்த கடனும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தார்.
அவரது நண்பர் நகுலன் அப்படியல்ல, சொத்துக்கள் வாங்குவதிலேயே குறியாக இருந்தார். அன்று அவரைப் பார்க்க வந்திருந்தார்.
”ஆவடி பக்கத்துல ஒரு கிரவுண்ட் இடம் இப்பத்தான் கிரயம் பண்ணினேன்,,,!”
”ரொம்ப சந்தோசம்…!” மகிழ்ந்தார் ஏகாம்பரம்.
”நீயும் இருக்கியே…எப்பப் பாத்தாலும் புத்தகம் வெளியிட்டு காச கரியாக்குற…!”
”நீ வாங்கின சொத்த எல்லாம் நீயே இருந்து ஆண்டு அனுபவிக்க முடியுமா…?”
”நான் அனுபவிச்சதுக்கப்பறம் என் மகன், அப்பறம் என் பேரன், அதுக்கப்பறம் என் கொள்ளு பேரன் இப்பிடி தலைமுறை தலைமுறையா சொத்து இருந்துட்டே இருக்கும்…!”
”உன் கொள்ளுப் பேரனுக்குத் தெரியுமா இது நீ சம்பாதிச்ச சொத்துன்னு…அவன் உன் பேரன் சம்பாதிச்சதுன்னு நினைப்பான், ஆனா புத்தகம் அப்பிடியில்ல, தலைமுறை தாண்டி என் பேரு நிலைச்சிருக்கும்.!” ஏகாம்பரம் சொன்னபோது வார்த்தைகளற்று மவுனமானார் நகுலன்.