பனையூரில் திடீர் பதற்றம்… அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக்கம்பம் அகற்றம்..!

 பனையூரில் திடீர் பதற்றம்… அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக்கம்பம் அகற்றம்..!

நள்ளிரவில் பாஜகவினருக்கும், இஸ்லாமியர்களுக்கும், கொடிகம்பம் அகற்றுவதில் நடந்த மோதலால், சென்னையிலுள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் வீட்டருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு இருக்கிறது.. இவரது இல்லத்துக்கு அருகில், சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனவே, பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்..

அத்துடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. இந்த விஷயம் தெரிந்ததுமே அங்கிருக்கும் பாஜகவினரும் ஒன்று திரண்டு வந்துவிட்டனர். இரு தரப்பிலும் ஒன்றாக கூடிவிட்டதால், பதற்றமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டது. இதனிடையே, அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் கொடிகம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும் மற்றும் இஸ்லாமியர்களும் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

இதற்கு பிறகு, போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.. தாம்பரம் மாநகர கமிஷனர், சம்பவ இடத்துக்கே உடனடியாக வந்தார்.. பாஜகவினருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமூகமான உடன்பாடுகளும் ஏற்படவில்லை. பிறகு, போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்களிடமும் பேச்சுவார்த்தையை நடத்தினர்.,

ஆனால், நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினார்கள்.. இதற்கு பிறகு, கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜேபிசி வாகனத்தை வரவழைத்தனர்.. இந்த ஜேசிபியை பார்த்ததுமே, பாஜகவினர் ஆவேசமாகிவிட்டார்கள்..

உடனே ஜேசிபி கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள்.. இதனால், போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது.. இந்த கைகலப்பில் ஒருவரின் மண்டை உடைந்தது… இதில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு பிறகு, கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவினரும் பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றார்கள். ஆனால், அதற்குள் அவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.. நீலாங்கரை, பனையூர் பகுதியில் இருக்கிற தனியார் திருமண மண்டபங்களில் அவர்களை அடைத்து வைத்துள்ளனர். இறுதியில் கொடிக்கம்பமும் போலீசாரால் அகற்றப்பட்டது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...