விண்ணில் பாய்ந்தது ககன்யான் சோதனை ராக்கெட்..!
மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை இன்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து அடுத்தடுத்த சோதனைகளுக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது.
இந்தியா சொந்தமாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த கனவை சாத்தியப்படுத்த தயாரிக்கப்பட்டதுதான் ககன்யான் திட்டம். எதிர்வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி நிலையம் கலைந்து போக இருக்கிறது. ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்கு என தனியான விண்வெளி மையத்தை உருவாக்க இருக்கிறார்கள். விண்வெளி துறையை பொறுத்த அளவில் ரஷ்யா, இந்தியாவுக்கு நெருங்கிய நண்பன் என்பதால் இந்த விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்களை தங்க வைக்க நாம்மால் கோர முடியும். ஆனால் அதற்கு நமக்கு முதலில் சில அனுபவங்கள் தேவைப்படுகிறது.
அதில் ஒன்றுதான் சொந்தாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திறன். இந்தியா சார்பில் ராகேஷ் சர்மா கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளியில் பறந்தார். அவரை பறக்க வைத்தது சோவியத் ரஷ்யா. எனவே இந்தியா இந்த முறை எந்த நாடுகளின் உதவியின்றி தங்களது வீரர்களை விண்ணில் பறக்க வைக்க முடிவெடுத்திருக்கிறது. இதற்காக போடப்பட்ட ககன்யான் திட்டம் வரும் 2025ம் ஆண்டு செயல்படுத்தப்படும். அதற்கு முன்னதாக இந்த திட்டத்தின் முதல்கட்ட சோதனை இன்று நடைபெறுகிறது.
அதாவது, மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் ராக்கெட்டிலிருந்து மனிதர்கள் இருக்கும் கலனை பூமியில் பத்திரமாக தரையிறங்க வைக்கும் மிஷன் இன்று பரிசோதனை செய்து பார்க்கிறது இஸ்ரோ. இதற்காக இஸ்ரோ தனியாக ஒரு ராக்கெட்டை வடிவமைத்திருக்கிறது. இந்த ராக்கெட்டின் உச்சியில் மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் மாதிரி கலன் (Crew Module) இருக்கும். இந்த கலனை ஏந்திக்கொண்டு ராக்கெட் 17 கி.மீ உயரத்திற்கு ஒலியை விட 1.5 மடங்கு வேகத்தில் பறக்கும்.
அங்கிருந்து மாதிரி கலன் மட்டும் தனியாக பிரிந்து வங்கக்கடலை நோக்கி வரும். கடலுக்கும் கலனுக்கும் சுமார் 2 கி.மீ தொலைவு இருக்கும் போது கலனில் உள்ள பாராசூட் விரிந்து கலனின் வேகத்தை குறைக்கும். இவ்வாறு வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் பாதுகாப்பாக இந்த கலன் தரையிறங்கும். அங்கு கடற்படையினர் இந்த கலனை மீட்டு கரைக்கு கொண்டு வருவார்கள்.
இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த இந்த சோதனை, வானிலை மாற்றம் காணரமாக 30 நிமிடங்கள் தள்ளி போனது. அதன் பின்னரும் ராக்கெட் ஏவப்படாமல் 15 நிமிடங்கள் தள்ளி போனது. பின்னர் பேசிய இஸ்ரோ தலைவர், இந்த சோதனை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். ஆனால் எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை. ககன்யான் என்பது இந்தியாவின் கனவு திட்டம். இந்த திட்டத்தின் முதல் கட்ட சோதனையே ஒத்தி வைக்கப்பட்டது ஏமாற்றமளித்தது.
இதனையடுத்து 30 நிமிடங்கள் கழித்து திடீரென ககன்யான் சோதனை கலன் விண்ணில் ஏவப்பட்டது. அதேபோல ஏவப்பட்ட கலன், ராக்கெட்டிலிருந்து பிரிந்து வங்கக்கடலில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதா இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.