உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய மீண்டும் கையெழுத்து இயக்கம்…
நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி திமுகவின் அடுத்த அதிரடி ஆரம்பமாகி உள்ளது. அந்தவகையில், திமுக இளைஞரணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும், மாபெரும் கையெழுத்து இயக்கம் ஆரம்பமாக உள்ளது.
நீட் தேர்வு குறித்த மரணங்களும் அதிகரித்தபடியே வருவதால், நீட் தேர்வு குறித்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது..
அந்தவகையில், கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று திமுக சார்பில் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், திமுக இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது.. அதனால்தான், இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க போவதாக 2 நாட்களுக்கு முன்பே அறிவித்தது.
இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணி செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ, மாணவர் அணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். இதற்கு பிறகு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்திலும் இதனை உறுதி செய்திருந்தார்.
தமிழ்நாட்டின் கல்வி உரிமையையும் – நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவையும் சிதைத்து வருகிற நீட் தேர்வுக்கு முடிவு கட்டிட திராவிட மாடல் அரசும், தி.மு.கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்திய உண்ணாநிலை அறப்போரை தொடர்ந்து, நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கவுள்ளோம்” என்று அறிவித்திருந்தார்.
அந்தவகையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி 50 நாட்களில், மாணவர்கள் பேராசிரியர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெற திமுக முடிவு செய்துள்ளது.
திமுகவின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் மற்ற நிலைகளில் உள்ள அமைப்பாளர்கள் மூலமாக கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்தி 50 நாட்களுக்குள் பணியை செய்து முடித்திடவும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.