அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு…

 அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு…

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று காஸாவில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியானதாக காஸா சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்தது. மேலும் இதனை நடத்தியது இஸ்ரேல் ராணுவம் தான் எனவும் குற்றஞ்சாட்டியது. காஸா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனியர்கள் ஏவிய ராக்கெட், வழிமாறி தவறுதலாக மருத்தவமனை மீது விழுந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் எனவும் கூறியது.

இவ்வாறு இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே 13 நாட்களாக தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உடனடியே போரை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அக்டோபர் 27-ம் தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில், வரும் 27ம் தேதியன்று, உலக அமைதிக்கான பிரார்த்தனை, தவம் மற்றும் நோன்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலக அமைதியை விரும்பும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கலாம் என்றும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். மேலும், எந்த பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என்று குறிப்பிட்டுள்ள அவர், காஸாவில் மனிதாபிமான பேரழிவை தவிர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என உலக மக்களை வலியுறுத்தி உள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...