விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆனார் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்!
நடிகர் சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இன்று விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார். யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றினார்.
பின்னர் அவருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டது. ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
கடந்த சில நாட்களாக பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக முகமை திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ், இன்று கூடுதல் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் ஏற்கனவே பணியாற்றிய திருப்பூர் மாவட்ட மக்கள், அவரை மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.