வேப்ப மரத்துப் பூக்கள் – 14 | ஜி ஏ பிரபா
அத்தியாயம் – 14
முன்னேறிச் செல். பாதை எவ்வளவு கடினமாக
இருந்தாலும் குறிக்கோள் தெளிவாக இருந்தால்
எதைப் பற்றியும் கவலைப் பட வேண்டியதில்லை.
வீடு கல்யாணக் களை கட்டியிருந்தது.
வாசலில் இருபுறமும் வாழைமரம். மாவிலைத் தோரணம். மிகப் பெரிய கோலம். சுற்றிலும் செம்மண் பூசி, நடுவில் விளக்கு வைத்திருந்தது. வீடு முழுதும் செம்மண் பூசிய மாக்கோலம் வளைந்து, வளைந்து போனது.
கௌசல்யா வந்திருந்தாள். அவள்தான் கோலம் போட்டது. மனதில் ஒரு மகிழ்ச்சி. அவளிடம் மட்டும் ரகுராமன் சில உண்மைகளைச் சொல்லியிருந்தார். அது அவளுக்கு உற்சாகத்தைத் தந்தது. ஓடி, ஓடி ஆரத்தி கரைத்து, பின்னாடி சமையல் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
மணிதான் அன்றைய சமையல் வேலையை ஏற்றுக் கொண்டிருந்தார். உடன் பத்மாவும். ஆட்களை அதட்டி, வேலை வாங்கியபடி கம்பீரமாக அலைந்தவளை எரிச்சலுடன் பார்த்தாள் பிரேமா.
அவளின் கற்பனைகள் எல்லாம் களைந்து போவதை அவளால் தாங்க முடியவில்லை. கல்யாணி வந்து விட்டால் அந்த வீட்டில் அவளின் இருப்பு தேவையில்லை என்றாகி விடும். அவளின் அதிகாரம் போய், கல்யாணியின் அதிகாரத்துக்கு அடி பணிய வேண்டியிருக்கும்.
மௌனிகா தன் மகனைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க மாட்டாள் என்று அவள் உறுதியாக நம்பினாள். பல சமயங்களில் பாலுவை அவள் அலட்சியப் படுத்தி விட்டுப் போவதை அவள் கண்டிருக்கிறாள். அப்படி மௌனிகா மறுத்தால் அவளை மசிய வைக்க வேறு ஆதாரம் ரெடி செய்திருந்தாள்.
பாலுவிடம் மட்டும் சொல்லி வைத்திருந்தாள்.
“இதோ பாருடா, கல்யாணி வந்தால் அதிகாரம் பூரா அவகிட்டதான் போகும். மாமாவோட சொத்து பூரா மௌனிகாவுக்குப் போயிடும். அவளை யார் கல்யாணம் செஞ்சுக்கப் போறாங்களோ அவனுக்குத்தான் சொத்து முழுதும் போகும். முழிச்சுக்கோ.” என்று பயமுறுத்தியிருந்தாள்.
ரகுராமனின் சொத்து மேல்தான் அவர்களின் கண்.
இந்த வீடு, பெருங்களத்தூரில் ஒரு வீடு இருக்கிறது. கிராமத்தில் ஒரு வீடு. அத்துடன் வங்கியில் டெபாசிட் லட்சக் கணக்கில் இருக்கிறது. தொழில் செய்ய பணம் அளித்து அதிலும் லாபம் வருகிறது.
அத்தனையும் விட மனசில்லை. அவள் அம்மாவை ரெடி செய்தாள்.
ஆனால் அம்மா நோயில் வாடி இருந்தாள். மௌனிகா தன் பேத்தி என்று தெரிந்த பின் அவளின் மனோ நிலைமை மாறி விட்டது. கல்யாணியையும், மௌனிகாவையும் பார்க்க விரும்பினாள். தன்னை பார்த்துப் பார்த்து கவனித்த கல்யாணி நினைவில் வந்து போனாள்.
எத்தனை அக்கறையும், அன்புமாகக் கவனித்தாள்.
பிரேமாவின் பேச்சைக் கேட்டு எவ்வளவு முட்டாள் தனமாக நடந்து விட்டோம் என்று தனக்குள் குமைந்தவள், இப்போது ஒரு தெம்போடு நிமிர்ந்து நின்றாள்.
ஆனால் ரகுராமனிடம் எதையும் கேட்கத் தயக்கமாக இருந்தது.
ஆனால் அம்மாவின் முகத்தைப் பார்த்து ரகுராமனே சொன்னார்.
“கல்யாணியும், மௌனிகாவும் நாளை இங்கு வருகிறார்கள்.”
“பாலுவுக்கு அவளை கட்டித் தரப் போறியா?”
“மௌனிகாவும் விரும்பினால் மட்டுமே”
“வேண்டாண்டா. அது அருமையான ரோஜாப்பூ. அதை இந்தச் சைத்தான் கைல ஒப்படைக்காதே.”
ரகுராமன் வாய் விட்டுச் சிரித்தார். “எந்தச் சைத்தானுக்கு எந்தச் சைத்தான்னு இனிதானே தெரியும். பாக்கலாம்.”
“நான் கல்யாணிகிட்ட மன்னிப்பு கேட்கணும்டா. இவ பேச்சைக் கேட்டு நானும் கல்யாணியை தப்பா பேசிட்டேன்.”
“தப்புன்னு உணர்ந்திட்டீல்ல. அதே போதும்.”
“அண்ணா, நம்ம உறவுகள் எல்லாம் டிபன் சாப்பிட்டு வந்தாச்சு.” கௌசல்யா.
“எல்லோரையும் ஹால்ல உட்கார வை. கல்யாணி, மௌனிகாவை ரூம்ல இருக்கச் சொல்லு. நான் இதோ வரேன்.” என்றவர் சில பேப்பர், ரசீது என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார்.
ஹாலில் உறவுகள் கேள்விகளுடன் அமர்ந்திருந்தது. முன்னறையில் கல்யாணியும், மௌனிகாவும் இருந்தார்கள். ரகுராமன் அவர்கள் முன் சென்றார்.
எழுந்து நின்ற கல்யாணி இருகை கூப்பி வணங்கினாள். அந்தக் கையை தன் கைகளுக்குள் இழுத்து பொத்திக் கொண்டார் ரகுராமன்.
“இதை நான் விட்ருவேன்னு நினைச்சியா கல்யாணி?”
“- – – – – – – – – – – – – – – – – – – – – “
“என்னை நம்பாம என் குழந்தையைக் கூட என் கண்ல காட்டாம போயிட்டியே? உன்னை நான் சந்தேகப் படுவேனா கண்ணம்மா?”
கல்யாணி தாங்க முடியாமல் உடைந்து அழுதாள். அவளை அனைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தார் ரகுராமன். மௌனிகாவை ஒரு கையில் அனைத்துக் கொண்டு அவர்களை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்.
“எல்லோருக்கும் இது என் மனைவி கல்யாணின்னு தெரியும். இது என் மகள் மௌனிகா.”
“உன் மகளா?” உறவு ஜனம் கிசு கிசுத்தது. ஹால் முழுதும் சலசலப்பு.
“ஆமாம் இவ என் மகள். எனக்கும் கல்யாணிக்கும் பிறந்தவள். எங்க ரெண்டுபேரையும் பிரிச்சு வைக்கனும்னு ஜோசியத்தைக் காரணம் காட்டி பிரித்து வைத்தாள் பிரேமா. ஆனா நான் யாருக்கும் தெரியாம கல்யாணியைப் போய்ப் பார்த்துவிட்டு வருவேன். அதுல ஜனித்தவள் மௌனிகா. என் ரத்தம். என் உயிர். என் வாரிசு.”
கல்யாணி சிலிர்த்தாள். போதும், இந்த நிமிஷம், இந்த வார்த்தையை எதிர்நோக்கித்தான் இத்தனை காலம் காத்திருந்தது. இந்த இடத்தில் செத்தாலும் கவலையில்லை என்று உள்ளம் பொங்கியது.
ரகுராமன் மௌனிகாவை தன் அருகில் இழுத்து நிறுத்தினார்.
அவளை அருகில வைத்துக் கொண்டு எல்லா விவரங்களையும் சொல்லச் சொல்ல ஜனம் கொதித்துக் கொந்தளித்தது. ச்சீ என்று பிரேமாவை வெறுப்புடன் பார்த்தது.
“என் அக்கா, எனக்கு நல்லதுதான் செய்வாள் என்று நம்பினேன். நான் அன்பை மட்டுமே யாசித்தேன். ஆனால் அவள் விஷத்தை, துரோகத்தை எனக்குத் தந்தாள். அம்மாவைப் பார்த்துக் கொள்வாள் என்று நம்பித்தான் இந்த வீட்டில் அவளை வைத்தேன். ஆனால் அவ அம்மா பெயரைச் சொல்லி பணம் பிடுங்குவாள் என்று நினைக்கவில்லை.”
“பொய்” பிரேமா கூவினாள். “நான் ஒண்ணும் உன் பணத்தில் வாழலை.”
“அப்போ இத்தனை நாள் இந்த வீட்டில் வாடகை இல்லாமல் வாழ்ந்தது, உன் பையனுக்கு படிப்புக்கு பணம் கட்டியது, திருச்சியில் வயல் வீடு வாங்கினது எல்லாம் யார் பணம்? சத்தியமா என் பணம் இல்லை. ஏன்னா உன்னைக் கல்யாணம் செஞ்ச நாள் முதலா நான் எந்த வேலைக்கும் போகலை. உனக்கு புருஷனா வேலை பாத்துண்டு இருக்கேன்.”
முதல் முறையாக பெரிய மாமா வாய் திறந்தார்.
“எனக்கு சம்பாதிக்க வக்கு இல்லைன்னு நான் இத்தனை நாளா வாய் மூடி இருந்தேன். ஆனா நீ ஒரு பொண்ணுங்கறதை மறந்து மௌனிகாவுக்கு தீங்கு நெனைச்ச உடனே நான் மாறிட்டேன்.”
மாமா பேசப் பேச பிரேமா ஆடிப் போனாள். இப்படி ஒரு மாற்றத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. திகைப்புடன் முகம் முழுதும் கலவரம் அப்ப திகைத்து நின்றாள்.
“அப்பா, இப்ப என்ன பேசறே நீ. பைத்தியமாட்டும்.”
பாலு சீறினான். “உனக்கு எதையும் புத்திசாலித்தனமா பேசத் தெரியாது.”
“ஆமாம்டா, அதான் நீங்க அயோக்கியத் தனம் செய்யறீங்க. புத்திசாலிகள். ரகு இவங்க என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா?”
“எத்தனையோ செஞ்சிருக்காங்க. இப்போ என்ன?”
“மௌனிகா பாலுவ கட்டிக்க சம்மதிக்கலைனா அவளைப் பற்றி அவதூறு வீடியோ வெளியிட ஏற்பாடு செஞ்சிருக்காங்க. மௌனிகா இங்க வந்து அம்மாவுக்கு வைத்தியம் செய்யறப்போ அவளை படம் எடுத்து அதில் அவளை அசிங்கமா, நாளைந்து ஆண்களோடு இருக்கற மாதிரி செட் செஞ்சிருக்காங்க. இதுக்குப் பிறகும் இவங்களை நீங்க இந்த வீட்டுல வச்சிருக்கப் போறியா?”
“இல்லை” கடினமான குரலில் கூறினார் ரகுராமன்.
“என்னைப் பற்றி என்ன வேணாலும் சொல்லு. என் மகளுக்கு ஒரு கெடுதல் நினைச்ச பிறகு நீ என் உறவே இல்லை.” குரல் இறுகக் கூறினார்.
“சரிப்பா, ஒருவேளை மௌனிகா அவனை விரும்பினா?” ஒரு சித்தப்பா.
“அம்மாடி.”- ரகுராமன் மௌனிகாவை ஏறிட்டார். “உன் மனம் யார் மேல?”
“அப்பா,” குரல் கனியக் கூப்பிட்டாள் மௌனிகா. “அப்பாங்கர உறவுக்கும் அந்த அழைப்புக்கும்தான் நான் ஏங்கினேன். என் அஸ்திவாரம் நீங்க. என்னை நிறுத்தி நிலையாக வைக்க வேண்டியது உங்க கடமை. அதுக்கு தலையசைக்க வேண்டியது என் கடமை. எனக்கு எது நல்லதுன்னு உங்களுக்குத் தெரியும். நீங்க எனக்கு என்ன சொன்னாலும் சரி. அப்பான்னு நீங்க எனக்கு வேணும்.”
“இவனைக் கட்டிக்கோன்னு சொன்னா?”
“சம்மதம்.”
“உனக்கு இவனைப் பிடிச்சிருக்கா?”
“இல்லை.” உறுதியாகச் சொன்னாள் மௌனிகா.
“எனக்கு இவரைப் பிடிக்கலை. கம்பீரம், புத்திசாலித் தனம் இல்லாத குள்ளநரி. ஆனா நீங்க விரும்பினா நான் இவரைக் கல்யாணம் செஞ்சுக்கச் சம்மதிக்கறேன். எனக்கு நீங்கதான் முக்கியம், இவர் இல்லை.”
மகளை தாவி அனைத்துக் கொண்டார் ரகுராமன்.
“இந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டாமா? என் மகளை சிறப்பான இடத்துல வாழ வைக்கணும். ஒரு தகப்பனா அது என் கடமை. அவளுக்கு யார் கணவன்னு நான் முடிவு செய்துட்டேன்.”
“யாருடா?”-சித்தப்பா.
“டாக்டர் கேசவ். அவர் மௌனிகாவை விரும்பறார். என்கிட்டே சொன்னார். அவருக்கு கல்யாணியையும் தெரியும். அவருக்குத்தான் நான் மௌனிகாவை கல்யாணம் செய்து தர விரும்பறேன். என் மகள் அதற்கு சம்மதிப்பாள்னு தெரியும். என்ன மௌனிகா?”
அவரை வியப்போடு ஏறிட்டாள் மௌனிகா. லேசான குழப்பம் அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் நாணமாக மாறியது. புன்சிரிப்புடன் தலையைக் குனிந்து கொண்டாள். கல்யாணி நம்ப முடியாத அதிசயமாய் அவரைப் பார்த்தபடி நின்றாள்.
பெருமையும், பூரிப்புமாய் அவரையே பார்த்தாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு ரகுராமன் பேசினார்.
“இது நாடகமேடை இல்லை. வாழ்க்கை. ஆனா எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது. இது ஒரு நோட் புத்தகம். பிறப்பும், இறப்பும் மட்டும் முதலும் கடைசியுமா இறைவன் எழுத்திட்டார். நடுவில் இருக்கற பக்கங்களை நாம்தான் எழுதணும். அன்பு, கருணை, பிரியம், மனிதாபிமானம்னு நல்ல குணங்களால் அந்தப் பக்கங்களை நிரப்பனும். நான் பிரேமாவைப் பழி வாங்க நினைக்கலை. பெரிய மாமா சரியான சமயத்துல இவங்க செஞ்ச அயோக்கியத் தனத்தைச் சுட்டிக் காட்டியதால், மௌனிகாவுக்கு நேர இருந்த அசிங்கம் களையப் பட்டது. அந்த நன்றிக்காக நான் அவங்களை மன்னிக்கறேன்.”
நிறுத்திப் பின் பேசினார்.
“ஆனா அவ முகத்தை இனி பார்க்க விரும்பலை. அதனால சீக்கிரம் பிரேமா இங்கிருந்து கிளம்பனும். திருச்சி வீடும் வயலும் அவளே எடுத்துக்கட்டும். கௌசல்யாவுக்கு பெருங்களத்தூர் வீட்டை எழுதித் தரேன். பிரேமா அவளை இங்க வர விடாம துரத்தினாள். ஆனா பிரேமா என் தங்கை. ஒரு அப்பா ஸ்தானத்துல நின்னு அவளுக்குச் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு”
“அண்ணா” கௌசல்யா கை கூப்பி அழுதாள்.
“உன் அன்பு போதும்ணா.”
“அது என்னைக்கும் உனக்கு உண்டு கௌசல்யா”
“நீ பாட்டுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கறியே.கல்யாணியை ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா?”
“வேண்டாம்.” முதன் முறையாக வாய் திறந்தாள் கல்யாணி.
“எனக்கு அவர் மட்டும் போதும்”
பார்த்தீர்களா என்பது போல் பெருமையுடன் உறவுகளைப் பார்த்தார் ரகுராமன்.
“சரிப்பா. நடந்தது, நடந்து போச்சு..” ஒருவர் ஆரம்பித்தார்.
“மன்னிக்கவும் சித்தப்பா. நடந்தது, நடந்துருச்சு. நான் எல்லாவற்றையும் மறந்து, என் மனைவி, மகளுடன் விட்டுப் போன வாழ்க்கையை வாழ விரும்பறேன். உங்க எல்லோர் மனதிலும் கல்யாணி பற்றிய ஒரு கேவலமான எண்ணம் இருக்கு. அதை அழிக்கணும்னுதான் எல்லோரையும் வரவழைச்சேன். பிரேமா என்னை ஏமாற்றி சேர்த்த சொத்தை எல்லாம் அவளே எடுத்துக்கட்டும். அம்மா அவளைப் பெத்துட்டா. அவளுக்காக பிரேமா இந்த வீட்டுக்கு வந்து போக அனுமதிக்கிறேன்.”
“வேண்டாம்.” அம்மா சீறினாள். “இவ்வளவு தூரம் இவ செஞ்சிருக்கான்னு நான் நினைக்கலை. என் பேத்தியைப் பத்தி கேவலமா வீடியோ தயாரிச்சவ என் பொண்ணே இல்லை. சீக்கிரம் அவளை இங்கிருந்து அனுப்புடா”- அம்மா தான் செய்த தவறுகளுக்கெல்லாம் சேர்த்து அழுதால். கல்யாணியைப் பார்க்கக் கூசியது. கல்யாணி அம்மாவிடம் ஓடிப் போய் அவளை அனைத்துக் கொண்டாள்.
“என்னை மன்னிச்சிடு கல்யாணி.”
“என்னம்மா இது? யாரு யாரிடம் மன்னிப்பு கேட்பது?”
“இங்க வாடி என் ராசாத்தி” அம்மா மௌனிகாவை கூப்பிட்டு அனைத்துக் கொண்டாள்.
உறவு ஜனம் சாப்பிட எழுந்து போனது. ஒரு வாரம் டைம் கொடு ரகு. வீட்டைக் காலி பண்றேன் என்றார் பெரிய மாமா. இனி இவளை நான் கவனிச்சுக்கறேன் என்று அவர்களை இழுத்துக் கொண்டு மேலே போனார்.
அம்மாவுடன் மௌனிகா ரூமிற்குள் போக கல்யாணியும், ரகுராமனும் மட்டும் ஹாலில் தனித்து நின்றார்கள்.
கல்யாணி தயக்கமாய் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்னை மன்னிச்சிடுங்க. கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம் நான்.”
“எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? குழல் இனிது, யாழ் இனிதுன்னு சொல்வாங்க. என் மழலையின் குரல் கேட்க முடியாம செஞ்சிட்டியே. இதுக்கு தண்டனை உண்டு.”
கண்களில் கலவரத்துடன் அவரை ஏறிட்டாள் கல்யாணி.
‘சட்டுன்னு இன்னொரு மழலையை பெத்து எனக்குக் கொடுக்கறே.”
விழித்தவள் சட்டென்று புரிய முகம் முழுதும் வெட்கம் படர அப்படியே அவர் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். அவளைத் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டார் ரகுராமன்.
“இனி இந்தக் கைகளுக்குள்ளிருந்து நீ விலகவே கூடாது.”
பதில் சொல்லாமல் இன்னும் ஆழமாக அவர் மார்பில் முகம் புதைந்து போனாள் கல்யாணி.
-முற்றும்.
முந்தையபகுதி – 13