வாச்சாத்தி வழக்கில் 19 குற்றவாளிகள் சிறை தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட 215 பேரில் 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
1992-ம் ஆண்டு சந்தனக் கடத்தல் கும்பலை தேடுகிறோம் என்ற பெயரில் தருமபுரி மாவட்ட அரூர் வாச்சாத்தி எனும் மழைவாழ் மக்கள் கிராமத்தில் காவல்துறையினர், வனத்துறையினர் மிகப் பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டனர். மொத்தம் 133 அப்பாவி பொதுமக்களை கைது செய்து 18 பெண்களை ஈவிரக்கமே இல்லாமல் பலாத்காரம் செய்தனர்.
பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் 2011-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 269 பேர். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போது உயிருடன் இருந்தவர்கள் 219 பேர். இந்த 219 பேருமே குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி குமரகுரு. 12 பேருக்கு 10 ஆண்டு ஜெயில், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை என தீர்ப்புகள் அதிரடியாக வழங்கப்பட்டன. இந்தியாவில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு ஒட்டுமொத்தமாக தண்டனை வழங்கப்பட்ட முதல் நிகழ்வு இது. அத்துடன் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 219 பேரும் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி கிராமத்துக்கே சென்று கள ஆய்வும் மேற்கொண்டார். அண்மையில் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கிய நீதிபதி வேல்முருகன், 219 குற்றவாளிகளின் மனுக்களையும் ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்தார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகளில் 19 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை எஞ்சிய பலரும் தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்பாவி ஒடுக்கப்பட்ட மழைவாழ் மக்கள் மீது பெருங்கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் எந்த ஒரு சூழலிலும் சட்டத்தின் பிடியில் தப்பிவிடக் கூடாது என்பதால் அந்த மக்களுக்காக போராடிய இயக்கங்களும் இவ்வழக்கில் இணையக் கூடும் எனவும் கூறப்படுகிறது.