கரை புரண்டோடுதே கனா – 11 | பத்மா கிரக துரை

 கரை புரண்டோடுதே கனா – 11 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 11

“அப்பாவிற்கு என் மீது மிகுந்த பாசம்.. பத்தே ஏக்கர் நான் வைத்திருந்தவர் பிறந்த பிறகு தான் ஐம்பது ஏக்கர்களுக்கு முதலாளியாக மாறினார்.. இந்த தோப்பு, வீடு எல்லாமே நான் பிறந்த பிறகு அப்பா சம்பாதித்தது தான்.. அதனால் என்னை அதிர்ஷ்ட தேவதை என்பார்.. வீட்டில் என்ன நல்ல காரியம் நடந்தாலும் என் கையால் தான் விளக்கேற்ற சொல்வார்.. குலதெய்வம் கோவில் பூஜையில் முதலில் என் பெயருக்கு அர்ச்சனை செய்த பிறகு தான் முக்கிய பூஜையே தொடங்கும்..”

மனோரமா தனது பிறந்த வீடு தன்னைத் தாங்கி வளர்த்ததை மகளுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தாள்.. ஆராத்யா இடைபேசாமல்.. “ம்..” கொட்டிக் கொண்டிருந்தாள்..

இவ்வளவு பாசம் காட்டியவர்களால் இப்போது எப்படி இந்த அளவு வெறுப்பைக் காட்ட முடிகிறது..? ஆராத்யாவால் புரிந்து கொள்ள முடியவில்லை..

“நான் படிக்கும் போது தக்கலையில் எட்டாவது வரை தான் பள்ளிக்கூடம் இருந்தது.. ஒன்பதிலிருந்து பன்னிரெண்டு வரை நாகர்கோவிலுக்குப் போய் படித்தேன்.. அதற்கே என்னை அனுப்ப எல்லோரும் யோசித்தனர்.. ஆனாலும் நான் அடம்பிடித்து படித்தேன்.. ப்ளஸ்டூ முடித்ததும் காலேஜ் படிக்க சென்னை போகப் போவதாக சொன்னேன்.. அப்பா மறுத்தார்.. அப்போது பெரியண்ணா தான் அப்பாவோடு சமாதானமாகப் பேசி என் ஆசைப்படி சென்னை காலேஜில் சேர்த்து, ஹாஸ்டலில் விட்டு வந்தார்.. அங்கே தான் உன் அப்பாவைப் பார்த்தேன்..”

இந்த இடத்தில் தன் முன் கதையை நிறுத்தி விட்டு மனோரமா கண்களை மூடிக்கொண்டாள்.. அம்மா, அப்பாவுடன் தனது காதலை நினைத்து மகிழ்கிறாளா..? அல்லத பெற்றோரை துறந்து வெளியேறியதை நினைத்து வருந்துகிறாளா..? என ஆராத்யாவால் கணிக்க முடியவில்லை.. எதுவாக இருந்தாலும் இந்த நிலையிலிருந்து தான் தாயை வெளிக்கொணர நினைத்தாள்.. அருகில் படுத்திருந்த அன்னையின் மேல் தன் கை கால்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டாள்..

“என்ன ரமா உன் அம்மா வீட்டிற்கு வரவும் ஆளே மாறிப் போய் விட்டாய்.. என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறாய்..?” வம்பிழுத்தாள்..

“நான் இங்கே விட்டுப் போன இருபத்திரெண்டு வருடக் கதையை பேச வேண்டியதிருக்கிறதேடி.. ஒவ்வொருவராக தேடிப் போய் பேசிக் கொண்டிருக்கிறேன்..”

ஆராத்யாவிற்கு தன் தாயிடம் ஆர்யன் முகம் திருப்பி நின்றது நினைவு வந்தது..

“பெரியவர்கள் கோபம் சரி மம்மி.. அந்த சின்னப்பயலிடம் போய் ஏன் கெஞ்சிக் கொண்டிருக்கிறாய்..?”

“எந்தச் சின்னப்பயலிடம் பேசினேன்..?”

மனோரமா கேட்கவும் தான் ஆர்யனின் சின்னப்புத்தி காரணமாக அவனை மனதிற்குள் சின்னப்பய என நினைத்து வந்ததையே வெளியேயும் சொல்லிவிட்டதை உணர்ந்தாள்.. ஆனாலும் அதற்கு வருந்தவில்லை அவள்.

“அவன் தான்மா உன் அண்ணன் மகன்.. ஆர்யன்..”

“ஆர்யன்.. அவன் சின்னப்பயதான்.. இதோ இத்தனூண்டு என் இடுப்பு உயரம் தான் இருப்பான்.. மனோ கண்ணாமூச்சு விளையாடலாமான்னு என்னைக் கூப்பிடுவான்.. இப்போது அண்ணாந்து தான் அவன் முகத்தை பார்க்க வேண்டியதிருக்கிறது..”

அன்னையின் பரவசமான நினைவு கூறல் ஆராத்யாவிற்கு கட்டோடு பிடிக்கவில்லை..

“மனோவா.. அத்தனூண்டு பையன் உன்னை இப்படியா பெயர் சொல்லிக் கூப்பிடுவான்..?”

“அது சும்மா ஆரா.. செல்லமாக என்னை கூப்பிடுவான்.. நீ கூடத்தான் சில நேரம் என்னை ரமான்னு பேர் சொல்லிக் கூப்பிடுகிறாய்.. அது போலத்தான் இதுவும்..”

“நானும், அவனும் உனக்கு ஒன்றா..? நான் பெயர் சொல்லிக் கூப்பிடுவது போல் அவனும் கூப்பிடுவானா..? அதற்கு அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது..? நீ எனது அம்மா நினைவிருக்கிறதா..? என்னை விட்டு விட்டு உன் அண்ணன் மகனுக்கு உன்னை உறவு கொண்டாடும் உரிமையை தூக்கிக் கொடுப்பாயா நீ..?”

மகளின் திடீர் ஆவேசத்தின் காரணம் புரியாமல் மனோரமா விழித்தாள்..

“ஆரா என்னடி ஆச்சு..? உடம்பு சரியில்லையா..? காய்ச்சல் அடிக்கிறதா..? ஒருவேளை ஜன்னி வரப்போகுதோ..?” சந்தேகமாய் கேட்டபடி மகளின் நெற்றியைத் தொட்டு உடல் சூட்டை ஆராய்ந்தாள்..

“மம்மி.. எதற்கு இப்படி பண்ணுகிறாய்..?” தாயின் கையை நெற்றியிலிருந்து எடுத்து எறிந்தாள்..

“நீ ஏதோ ஜன்னி கண்டவள் உளறுகிற மாதிரி உளறினாயேடி.. அதுதான் எனக்கு சந்தேகம் வந்தது..”

“உன் அண்ணன் மகனுக்கு சப்போர்ட் பண்ண எனக்கு ஜன்னி வரவைக்கிறாயா நீ..?” படுக்கையில் எழுந்து அமர்ந்து தாயைத் தாக்கும் எண்ணத்திலிருந்தாள் ஆராத்யா..

“அவன் நீ கூப்பிடக் கூப்பிட திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்கிறான்.. பெரிய இவன் மாதிரி இருக்கிறான்.. அவன் பின்னால் போகிறாயே..”

“ஆர்யனும் நானும் அப்போ ரொம்ப ப்ரெண்ட் ஆரா.. நான் ஸ்கூல், காலேஜ் போகும் நேரம் தவிர எப்போதும் என்னுடன் தான் இருப்பான்.. இரண்டு பேருமாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்போம்.. அவன் பிறந்ததிலிருந்தே கைப்பிள்ளையாக இருக்கும் போதே என்னிடம் நன்றாக ஒட்டிக் கொள்வான்.. வளர வளர எனக்கு ப்ரெண்ட் ஆகிப் போனான்.. நான் வீட்டை விட்டு வெளியேறும் போது அவனுக்கு ஐந்து வயதிருக்கும்.. ஐந்து வருடங்களாக கூடவே இருந்த அத்தை திடுமென பிரிந்தது, அதன் பிறகு வீட்டிற்கு வராமலே போனது என அவனுக்கும் என் மீது வருத்தம் இருந்திருக்கம் இல்லையா ..?”

“ஆனாலும் அவனுக்கு நீ இந்த அளவு சப்போர்ட் பண்ணக் கூடாது மம்மி.. எனக்கென்னவோ அவன் நம் இருவரையும் இந்த வீட்டை விட்டு விரட்ட நினைப்பது போன்றே தோன்றுகிறது..”

“சீச்சி அப்படியெல்லாம் இருக்காதுடி ஆர்யனுக்கு என் மேல் கொஞ்சம் வருத்தம்.. இரண்டே நாட்களில் சரியாகி விடுவான் பாரேன்..”

தங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவதையே லட்சியமாகக் கொண்டிருப்பவனை எப்படி அன்னையிடம் விளக்குவது என புரியாமல் தவித்தாள் ஆராத்யா.. சென்னையில் ஆர்யன் தன்னிடம் நடந்து கொண்ட முறையை சொல்ல நினைத்தாள்.. ஆனால்.. அப்போதே ஏன் சொல்லவில்லை என்றக் கேள்வி வருமே.. அத்தோடு மனோரமாவைப் பார்த்தால் தன் அண்ணன் மகனைப் பற்றிய அது போன்ற குற்றச்சாட்டுகளை அவள் நம்புபவள் போல் தெரியவில்லை.. அவள் முன்பு ஆர்யனும், அவளுமாக கொய்யா மரத்தில் ஏறி கொய்யாக்காய்கள் பறித்து தின்றதை, கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டதை சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தாள்.. அண்ணன் மகன் மேல் அவளுக்கு இனம் புரியாதோர் தாய் பாசம் இருப்பதை ஆராத்யாவால் உணர முடிந்தது..

என் அம்மாவின் அன்பை இவன் பங்கு போட வருவானா..? ஆராத்யாவிற்கு ஆர்யன் மேலிருந்த வெறுப்பு அதிகரித்தது.. அவள் அது நாள் வரை தாய், தந்தையின் அன்பை தனி ஆளாக திகட்டத் திகட்ட அனுபவித்து வந்தவள்.. இப்போது தாயின் பாசம் சிதறுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அதிலும் இந்த ஆர்யன் ஒழுக்கம் கெட்டவன் வேறு.. அவனது குண லட்சணத்தை எப்படி அம்மாவிடம் கொண்டு செல்வது.. வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்தாள்..

“ஆர்யன் தனியாக சென்னையில் தொழில் பார்த்துக் கொண்டிருக்கிறானாம் ஆரா.. டூவீலர் கம்பெனி ஆரம்பித்திருக்கிறானாம்.. அங்கேயே தான் ஒரு அப்பார்ட்மென்டில் தங்கி இருக்கிறானாம்.. இந்த சிறு வயதிலேயே எவ்வளவு சுய முன்னேற்றம் பார்த்தயா..? எனக்கு முன்பே தெரியும்.. அவன் இப்படி உயர்ந்த நிலைக்கு வருவானென அப்போதே அவனைக் கணித்து வைத்திருந்தேன்.. தங்கமான பையன்டி அவன்..”

மனோரமா அடுக்கிக் கொண்டே போக ஆராத்யாவின் உடம்பெரிச்சல் கூடிக் கொண்டே போனது.. உன் அண்ணன் மகன் அங்கே தனியாக வீடுடேடுத்து தங்கிக் கொண்டு குடியும், கும்மாளமுமாக இருக்கிறான்.. இங்கே உங்களிடம் தங்க மகன் வேசம் போட்டு திரிகிறான்.. அவன் மறுபக்கம் தெரியாமல் இப்படி நம்புகிறாயே மம்மி.. ஆராத்யா தனக்குள்ளே புலம்பினாள்..

“நாம் சென்னை போன பிறகும் ஆர்யனோடு தொடர்பில் இருக்க வேண்டும் ஆரா.. முடிந்தால் அவனை நம் வீட்டில் தங்க வைத்துக் கொள்ளலாம்..” மனோரமா சொல்ல ஆராத்யாவிற்கு திக்கென்றது.. அடக்கடவுளே இந்த சனியை இங்கேயே கை கழுவி விட்டு போகலாமென நினைத்தால், இது ஜென்ம சனியாக தலைமேல் ஏறிக் கொள்ளும் போலவே.. ஆராத்யாவினால் இதனை ஒத்துக் கொள்ள முடியவில்லை.. இங்கிருந்து வெளியேறும் முன் அவனது சுயரூபத்தை வீட்டாள்கள் அனைவருக்கும் காட்டி விட்டு, அம்மாவிற்கும் அவனுக்கும் உள்ள பிணைப்பை பிரித்து, அவன் சென்னை வந்தபின் வீட்டுப் பக்கமே வர விடாமல் செய்ய வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டாள்..

“ஆர்யனை வந்து விளக்கேற்ற சொல்லுங்கள்..” பரமசிவம் குரல் கொடுக்க, செங்கற்களால் முக்கோணமாக மாடம் போலிருந்த இடத்திற்கு  எண்ணெய் தழும்பி இருந்து மண் அகல் விளக்கின் திரியை தூண்டி விட்டு விளக்கேற்றினான் ஆர்யன்..

தென்னந்தோப்புக் காய்களின் அந்த வருட முதல் லோட் விற்பனைக்கு லாரியில் ஏற இருந்தது.. அதற்காக முதலில் சாமி கும்பிட்டு விட்டு காய்களை ஏற்றுவர்.. அந்த முறைமைகள் தான் அங்கே நடந்து கொண்டிருந்தது..

“மனோ அக்கா நீ இங்கிருக்கும் வரை இப்படி சாமி கும்பிட்டு விளக்கேற்றுவதெல்லாம் உன் கையால் தானே, நினைவிருக்கிறதா..?” வசுமதி கிசுகிசுப்பாக கேட்க மலரும் நினைவுகளில் தலையசைத்தாள் மனோரமா..

“நீ வீட்டை விட்டுப் போனதும் அப்பாவிற்கு பெண் பிள்ளைகள் மேலேயே வெறுப்பு வந்து விட்டது மனோக்கா.. பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே எனக்கு கல்யாணம் முடித்து அனுப்பி விட்டார்.. பிறகு வீட்டில் நடக்கும் நல்ல காரியங்கள் எதற்கும் பெண்கள் யாரையும் விளக்கேற்ற அழைக்க மாட்டார்.. நீ போன மறுவருடத்திலிருந்தே ஆர்யனைத்தான் எல்லா சுப காரியங்களுக்கும் விளக்கேற்ற சொல்வார்..”

வசுமதி சொன்னதை மனோரமா எளிதாக எடுத்துக் கொண்ட அளவு ஆராத்யாவால் எடுத்துக் கொள்ள முடியவில்லை.. முதல் வாதம் இதென்ன ஒரே ஒரு விருப்பமில்லாத சம்பவம் நடந்தால் வீட்டுப் பெண்கள் அனைவரையும் ஒதுக்குவது..? இரண்டாவது அப்படி பெண்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு இவர் தேர்ந்தெடுத்து வைத்திருப்பவனின் குணக்கேட்டை இவர் அறிவாரா..?

ஆராத்யா நேரிடையாக குடும்பத் தலைவரிடம்.. அம்மாவின் அப்பாவிடம்.. தன் தாத்தாவிடமே மோத முடிவு செய்தாள்..

தோப்பில் பூஜை முடிந்ததும், பரமசிவம் வீட்டிற்குள் போக, கொஞ்ச நேரம் விட்டு தானும் வீட்டிற்கு போனாள்.. தாத்தாவின் அறை அருகே போன போது..

“நீங்க படுத்துக்கோங்க தாத்தா.. நான் தடவி விடுகிறேன்..” ஆர்யனின் குரல் தாத்தா அறைக்குள்ளிருந்து கேட்டது..

இவன் இங்கே என்ன செய்கிறான்..? மெல்ல எட்டிப் பார்த்தாள்.. ஆர்யன் கட்டிலில் படுத்திருந்த தாத்தாவின் கால்களுக்கு ஏதோ எண்ணெயை தடவி விட்ட நீவிக் கொண்டிருந்தான்..

எப்படி வேசம் போட்டு எல்லோரையும் ஏமாற்றி வைத்திருக்கிறான் இவன்.. கோபத்தோடு சாந்தம் தாண்டவமாடிக் கொண்டிருந்த ஆர்யனின் முகத்தை வெறித்தாள் ஆராத்யா.. அவளது மனதில் ஒரு திட்டம் உருவானது.

-(கனா தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...