காத்து வாக்குல ரெண்டு காதல் – 10 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 10 | மணிபாரதி

அத்தியாயம் – 10

ஹேன்ட் பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு ஆபிஸ் புறப்பட்ட நந்தினி, பாஸ்கரனிடம் “சாம்பார் மட்டும் வச்சுருக்கேன்.. ஒரு மணிக்கா குக்கர்ல ரைஸ் வச்சுக்கங்க.. ஃபிரிட்ஜ்ல மாம்பழம் இருக்கு.. எடுத்து கட் பண்ணி சாப்ட்டுக்கங்க..“ என்றாள்.

“சரிம்மா..“ என்றவர் “ஒரு அஞ்சு நிமிஷம் டயம் இருக்குமா.. கொஞ்சம் பேசனும்..“ என்றார்.

“சொல்லுங்கப்பா..“

“ராகவ்வ பத்தி நீ என்ன நினைக்குற..“

“ஏன்ப்பா, நல்ல பையனாச்சே..“

“எனக்கு அவனை ரொம்ப புடிச்சுருக்கு.. ரொம்ப பொறுப்பான புள்ளையா இருக்கான்.. எந்த கெட்ட பழக்கமும் இல்ல.. எல்லாத்துக்கும் மேல அப்பா அம்மாவுக்கு கட்டுப்பட்ட புள்ளையா இருக்கான்..“

“ஆமாம்ப்பா..“

“அவனை உனக்கு கேக்கலாம்ன்னு இருக்கேன்..“

அவள், அந்த பதிலை அவ்வளவு சீக்கிரத்தில் எதிர்பார்க்க வில்லை. ஒரு நிமிஷம் தயக்கத்துடன் பார்த்தாள். பின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது. “அப்பா, எனக்கு லைஃப்ல கல்யாணம் பண்ணிக்குற ஐடியாவே இல்ல.. ஏன்னா, உங்கள கடைசி வரைக்கும் சந்தோஷமா பாத்துக்கனும்.. அதுக்கு கல்யாணமோ, வர்ற மாப்பிள்ளையோ  இடையூறா இருந்துடக் கூடாது.. அப்படி இருந்தா என்னால அதை தாங்கிக்க முடியாது.. ஆனா, ராகவ் குடும்பத்தை நா அப்படி நினைக்கல.. ஏன்னா,  ரெண்டு குடும்பமும் ஒண்ணுன்னு ஆயிப் போச்சு.. அதனால நீங்க தாராளமா கேக்கலாம்..“

அவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது.

“ரொம்ப சந்தோஷம்மா..“

“சரிப்பா.. நா வரேன்..“

நந்தினி புறப்பட்டு போனாள்.

வெங்கடாச்சலம் வீடு.

வெங்கடாச்சலம் மாலதியிடம் “இந்த பாஸ்கர் பைய திடீர்ன்னு போன் பண்ணி எதுக்காக வரேன்னு சொன்னான்னு தெரியலையே..“ என எதிர்பார்ப்பு மிகுந்தவராக பேசினார்.

“வரட்டுமே.. எதுக்கு அவசரப்படுறீங்க..“

அப்போது பாஸ்கரன் ஒரு பை நிறைய பழங்களுடன் உள்ளே நுழைந்தார். வெங்கடாச்சலம் “வாடா..“ என்றும், மாலதி “வாங்கண்ண..“ என்றும் வரவேற்றார்கள். பாஸ்கரன்“உடம்பு எப்படிம்மா இருக்கு..“ எனக்கேட்டார்.

“பரவாயில்லண்ணே..“

“பிரஷ்ஷர் மாத்திரைய மட்டும் கரெக்ட்டா போட்டுக்க..“ என்று கூறி பழப் பையை அவளிடம் கொடுத்தார். “எதுக்குன்ன இந்த ஃபார்மல்ட்டிஸெல்லாம்..“ என கேட்ட படி அதை வாங்கி டீப்பாயின் மேல் வைத்தாள்.

“ஃபார்மால்ட்டி இல்லம்மா.. ஒரு நல்ல செய்தியோட வந்துருக்கேன்..“

“சொல்லுங்கண்ணே..“

“நந்தினிய நம்ம ராகவ்வுக்கு குடுக்கலாம்ன்னு விரும்புறேன்..“

அவர்கள் இருவரது முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. வெங்கடேசன் “டேய் பாஸ்கரா, இது பத்தி நானும் மாலதியும் நேத்தே பேசி முடிவு பண்ணி வச்சுட்டோம்.. நீதான் லேட்..“ என்றார்.

பாஸ்கரனின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

“ரொம்ப சந்தோஷம்ப்பா.. தாயில்லாம வளர்ந்த பொண்ணு.. ஒரு நல்ல இடத்துல சேக்கனுமேன்னு கவலைப்பட்டுகிட்டு இருந்தேன்.. மாலதிய பார்த்ததும் அந்த நல்ல இடம் இதுதான்னு முடிவு பண்ணிட்டேன்..“

“கவலைப்படாதிங்கண்ணே.. நந்தினி இனிமே என் பொண்ணு.. கட்டுன புடவையோட அனுப்பி வைங்க போதும்.. மத்த எல்லாத்தையும் நா பாத்துக்குறேன்..“

“ரொம்ப நன்றிம்மா..“ அவரது கண்கள் லேசாக கலங்கியது.

வெங்கடாச்சலம் “அவள கல்யாணம் பண்ணி குடுத்துட்டு நீ எங்க போகப் போற.. நீயும் இங்கதான் வந்து இருக்கனும்..“ என்றார்.

பாஸ்கரன் தயக்கத்துடன் “அதெல்லாம் என்னத்துக்கு..“ எனக்கேட்டார்.

“பாருடா.. இந்த கண்டிஷனுக்கு நீ ஒத்துகிட்டாதான் கல்யாணமே..“

“சரிப்பா வரேன்..“

“அது..“

“ராகவ்கிட்ட ஒரு வார்த்தை பேசிடலாமா..“

“எதுக்கு.. அவன் எங்க வளர்ப்பு.. கட்டுடா தாலியன்னா கட்டுவான்..“

“அப்ப சரி..“

“கொஞ்சம் இருங்கண்ணே..“ என்று கூறிய மாலதி உள்ளே போய் ஒரு கிளாஸில் மோர் எடுத்து வந்து கொடுத்தாள். பாஸ்கரன் வாங்கி களைப்பு தீர குடித்தார்.

வெங்கடாச்சலம் “முகூர்த்த தேதிய முடிவு பண்ணிட்டு சொல்லு..  கல்யாண மண்டபம் பெரிசா பாக்கனும்.. நம்ம கூட படிச்ச எல்லா ஃபிரண்ட்ஸையும் இன்வைட் பண்ணனும்.. ஒரு வாரத்துக்கு மகிழ்ச்சி கொண்டாட்டமா இருக்கனும்.. செலவைப் பத்தி கவலைப் படாத.. எல்லாத்தையும் நா பாத்துக்குறேன்..“ என்றார்.

“இல்லப்பா.. செலவை ரெண்டு பேரும் ஷேர் பண்ணியே செய்யலாம்..“

“என்ன கெளரவ பிரச்சனையா.. நா எதுவும் நினைக்க மாட்டேன்.. உனக்கு ஷேர் பண்ணி செய்யனும்ன்னு தோனிச்சுன்னா.. தாராளாமா அப்படியே பண்ணிக்கலாம்..“

“உன்கிட்ட நா என்ன கௌரவத்த பாக்கப் போறேன்.. என் பொண்ணுக்கு நா செய்ய வேண்டிய கடமைன்னு இருக்குல்ல..  அதை பண்ணிதான ஆகனும்.. அதனாலதான்..“

“சரிப்பா.. நீ என்ன நினைக்குறியோ அப்படியே பண்ணு..“

மாலதி “நமக்குள்ள இனி என்ன வித்தியாசம் இருக்குண்ணே..“ எனக்கேட்டாள்.

வெங்கடாச்சலம் “பொண்ண பெத்தவன்.. கடமைய சரியா செய்யனும்ன்னு நினைக்குறான்.. செஞ்சுட்டு போகட்டுமே..“ என்றார்.

பாஸ்கரன்  “அதேதான்…“ என்றார்.

ராகவ் ஆபிஸ்.

நந்தினியின் போன் ஒலித்தது. அவள் எடுத்து நம்பர் பார்க்க “அப்பா“ என தெரிந்தது. ஆண் பண்ணி “சொல்லுங்கப்பா“ என்றாள். ஆனால் மனசு படபடத்தது.

“ராகவ் வீட்டுலதான் இருக்கேன்ம்மா.. கல்யாணத்துக்கு வெங்கடாச்சலமும் மாலதியும் சம்மதிச்சுட்டாங்க..“

நந்தினி சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள். “சந்தோஷமா இருக்குப்பா..“ என்றாள்.

“வெங்கடாச்சலம் என் ஃபிரண்ட்ம்மா.. எங்க பாண்டிங் உங்களுக்கெல்லாம் தெரியாது..“

“கடவுளுக்குதான் நன்றி சொல்லனும்ப்பா..“

“கண்டிப்பா.. கல்யாணத்துக்கு முன்னால ஒரு தடவை குல தெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வரலாம்மா..“

“சரிப்பா..“

“சரிம்மா.. நீ சாய்ந்தரம் வா.. மத்ததையெல்லாம் அப்ப பேசிக்கலாம்..“

“சரிப்பா..“

இருவரும் போனை கட் பண்ணினார்கள்.

ராகவ், அவனது கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.  நந்தினி சந்தோஷமாக அவனை தேடி வந்தாள்.

“சார் பிஸியா..“

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. ரொட்டீன் ஒர்க்தான்..“

“கேண்டியன் வரைக்கும் போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாமா..“

“இல்ல..  அதுக்கு நேரமில்ல.. கையில இருக்குற ஒர்க்க முடிக்காம எழுந்திரிச்சா.. மேனேஜர் கத்துவார்..“

“ஓகே.. கோ அஹெட்..“ என்று கூறி  சிறிது ஏமாற்றத்துடன் திரும்பினாள்.

“எனி இம்பார்ட்டன்ட் மேட்டர்..“ அவன் கேட்டான்.

“சாய்ந்தரம் வீட்டுக்கு போனதும் நீயே தெரிஞ்சுக்குவ..“ என்று கூறி சென்றாள்.

அவன் குழப்பத்துடன் பார்த்தான்.

(-காற்று வீசும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...