நீ என் மழைக்காலம் – 9 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 9
மழையில் குளித்திருந்தன மரங்கள். இரவு பெய்த நீர்த்தி வலைகள் சின்னச்சின்ன முத்துக்களாய் புற்களின் மீது மின்னிக் கொண்டிருந்தன. ஊசிதட்டான் ஒரு புல்லில் இருந்து மற்றொரு புல்லுக்குத் தாவி, வெயில் காய்ந்து கொண்டிருந்தது.
வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அந்த தும்பியைப்பிடிக்க உட்கார்ந்து இருப்பாள் நிவேதிதா. ஆனால் அவள் இன்று வேறு மனநிலையில் இருந்தாள்.
கார்த்தி வாங்கிக் கொடுத்த மூக்குத்தி தொலைந்து விட்டதே என்று வருத்தமுடன் இருந்தாள். அதே வருத்தங்களை சுமந்தபடி தான் கல்லூரிக்குச் சென்றாள். பாடவேளை முடிந்து அதே புன்னை மரத்தடியில் சந்தித்தவளை, அவன் தான் முதலில் கேட்டான்.
“ஏன் ஒருமாதிரி டல்லடிகிறே?”
“ஒண்ணுமில்லை” என்றாள்.
“இல்ல ஏதோ ஒண்ணு இருக்கு. என்ன சொல்லு” என்றான்.
“நீயே கண்டுபிடி” அவள் அவனுக்கு தெரியும் படியாக முகத்தை திரும்பிப் பேசினாள்.
“சஸ்பென்ஸ் வைக்காத. என்னன்னு சொல்லுடி” என்றான்.
“நீ ஏன்டா சும்மா சும்மா டி போட்டு பேசறே ” என்றாள் போலி கோபத்துடன்.
“ எனக்கு உன்னை அப்படிக் கூப்பிட பிடிச்சிருக்கு. ஏன் உனக்குப் பிடிக்கலியா? பிடிக்கலன்னா சொல்லு, மாத்திக்கிறேன்” என்றான்.
“இல்ல, இல்ல…. உனக்கு எப்படி பிடிக்குமோ அப்படியே கூப்பிடு” என்றவள், மறுபடியும் விஷயத்துக்கு வந்தாள்
“என்முகத்தைப் பார்த்து சொல்லு! என்கிட்ட எந்தமாற்றமும் இல்லையா?” அவள் கேட்டபோதுதான் அவன் கவனித்தான்.
“எங்க மூக்குத்தி?” பட்டென்று கேட்டான்.
“தொலைஞ்சுப் போச்சு கார்த்தி. எங்க தொலைஞ்சதுன்னு தெரியலை. அதான் நேற்றிலிருந்து ஒரே கவலையா இருக்கு. நீ ஆசையாய் வாங்கிக் கொடுத்ததை இப்படி தொலைச்சிட்டு வந்து நிற்கிறேன்…”
அவள் பயந்தபடி விஷயத்தை அவனிடம் சொன்னாள். நேற்றிலிருந்து மனக்கவலையில் இருப்பதாகவும் கூறினாள்.
அவன் அதைப்பற்றி சிறிது கூட அலட்டிக் கொள்ளவில்லை.
“ப்பூ! இவ்ளோ தானா? நான் என்னவோ ஏதோ என்று பயந்தேன். ஒரு மூக்குத்திப் போனால் என்ன இன்னொண்ணு வாங்கிட்டா போச்சு. யாரும், எந்தப் பொருளையும் வேணும்னே தொலைக்க மாட்டாங்க. நீயும் அப்படித்தான் . அதைவேணும்னு தொலைச்சிருக்கமாட்டே. அப்படி இருக்க எதுக்கு கவலைப்படறே? நாளைக்கே உனக்கு வேற மூக்குத்தி வாங்கிட்டு வந்துதர்றேன் போதுமா?”
அவன் இயல்பாகவும், பக்குவமாகவும் பேச, நிவேதாவுக்கு பிரமிப்பாக இருந்தது. சே! ஒருவிஷயத்தை அவன் கையாள்வதற்கும் நான் கையாள்வதற்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்று யோசித்தாள்.
‘‘நிஜமாவே உனக்கு வருத்தம் இல்லையா கார்த்தி?’’
‘‘ ஒரு சின்ன பொருளுக்குப் போய் இப்படி பீல் பண்ணிட்டு உட்கார்ந்திருப்பியா நீ? விட்டுத் தள்ளு. நாளைக்கு கண்டிப்பாக உனக்கு வேற மூக்குத்திவரும்’’ என்ற அவளுக்கு அவன் ஆறுதல் கூறினான்.
உண்மையில் மனசு குழப்பத்திலோ, கவலையிலோ ஆழ்ந்திருக்கும் போது அதை போக்கும் மனிதர்கள் இங்கே குறைவு. அதிகப்படுத்தும் மனிதர்கள் தான் அதிகம். ஆனால் கார்த்தி பக்குவமாய் பேசியது அவள் மனதுக்குப் பிடித்திருந்தது.
‘‘பரிசு கொடுத்த நானே உன் எதிரில் பெரிய பரிசுப் பொருளாய் இருக்கிறேன். நீ எதுக்கு கவலைப்படறே?’’
ஆறுதல் வார்த்தைகளில் அன்பைக் கொடுத்தான் . அவளை நூலகத்துக்கு கூட்டிச் சென்றான். கூட்டிச்சென்ற கொஞ்ச நேரத்தில் தான் அந்த நிர்மலா வந்து நின்றாள்.
அவள் காளியாட்டம் ஆடிவிட்டுப் போனாள். அவள் போன பிறகுதான் தன்னை அவள் காதலிக்கும் விஷயத்தையும், விடாது துரத்தி டார்ச்சர் பண்ணுவதையும் நிவேதாவிடம் கூறினான்.
‘‘நீயேன் கார்த்தி அவளை லவ் பண்ணலே?’’ அவள் அவனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.
‘‘ இதென்ன கேள்வி? மனசுக்குப் பிடிக்கணும். உள்ளுக்குள் தோணணும். ஒரு அலைவந்து புரட்டிப் போடணும். அவள் தான் எல்லாம் என்று சரண் அடையணும். அவள் கூட இருப்பதே சந்தோஷம்னு நினைக்கணும். அவளை பார்த்துக்கிட்டே, பேசிக்கிட்டே ,சிரிச்சுக்கிட்டே இப்படி பல விஷயங்கள் உள்ளுக்குள் வந்து புரட்டிப் போட்டால் மட்டும் தான் காதல் வரும்… நிவேதிதா. சும்மா வெல்லாம் வராது. வெறும் கவர்ச்சிக்காகவும், உடல் அழகைப்பார்த்து மட்டும் காதல் வரவே வராது. அப்படி வரும் காதல் பாதியிலேயே குணம் தெரிந்தப்பிறகு புட்டுக்கும். புஷ்வாணம் ஆகும்…
‘‘அப்போ என்மீது இத்தனையும் வந்ததா கார்த்தி?’’ அவள் அவன் வாயைப்பிடுங்கினாள்.
‘‘இல்லை, நீ இல்லாட்டி செத்துப்போயிடணும்னு கூட தோன்றியது’’
அவன் சொல்லி முடிக்கவும், அவள் விக்கித்து நின்றாள்.
அவனுக்கு தன் மீது இத்தனைக் காதலா? என்று உருகினாள். அவன் அன்பில் கரைந்தாள். அவனை விட்டு விடக்கூடாது. இமைபோல் அவனை பாதுகாக்கணும். உலகத்தில் உள்ள அன்பை எல்லாம் அவனுக்கு வாரிக்கொடுத்து அவனை திணற வைக்கணும்… என்று நினைத்தாள்.
-(சாரல் அடிக்கும்)