ஜி20 தலைவர்களுக்கு பிரதமரின் கிப்ட்!..
ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விருந்தினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன பரிசுகளை வழங்கினார் தெரியுமா? டெல்லியில் கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஜி20 மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதனால் டெல்லியே விழாக் கோலம் பூண்டது.
பிரதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடந்தது. ஜி20 மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர். இதில் சீன அதிபரும், ரஷ்ய அதிபரும் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அவர்கள் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்கள் டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஜி 20 மாநாட்டிற்கு பாதுகாப்பை பலப்படுத்த தலைநகர் டெல்லி போலீஸார், துணை ராணுவ படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரகதி மைதானத்தை சுற்றி வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, அந்த சாலையில் எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் ஜி 20 மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை இந்தியா இணைத்தது. இதனால் இனி இந்த அமைப்பு ஜி21 என்று அழைக்கப்படும். இந்த மாநாட்டிற்கு வந்த உலகத் தலைவர்களுக்கு காஷ்மீர் பஷ்மினா முதல் சுந்தர்பன் தேன் வரை பல பரிசுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியிருந்தார். இந்தியாவின் கலாச்சார மரபுகளை பிரதிபலிக்கும் வகையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
ஷீஷாம் மரத்தால் செய்யப்பட்ட இசை பெட்டியை பரிசாக வழங்கினார் பிரதமர். அதன் மீது பித்தளை தகடு போடப்பட்டிருந்தது. கையால் செய்யப்பட்ட இந்த பெட்டியில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த பெட்டி முன்னொரு காலத்தில் புதையல் வைக்க பயன்படுத்தப்பட்டிருந்தது.
அடுத்ததாக காஷ்மீரி பஷ்மினா சால்வைகள் – இது ஆடம்பரமானது. உலகில் மிகவும் பிரபலமானது. இந்த சால்வைகள் அரிதான துணிகளில் செய்யப்படுகிறது. இந்த கம்பளி சாங்தாங்கி எனும் ஆட்டிலிருந்து பெறப்படுகிறது. இதற்காக ஆட்டின் முடி வெட்டப்படுவதில்லை. இந்த ஆடு 14 ஆயிரம் அடி உயரத்தில் மட்டுமே காணப்படும். இந்த சால்வை முற்றிலும் கையால் செய்யப்பட்டது.
அடுத்த பரிசு சுந்தர்பன் மல்டிஃப்ளோரா சதுப்பு நில தேன்- உலகின் மிக பெரிய சதுப்புநிலக் காடு சுந்தரவனக் காடுகள்தான். இது வங்காள விரிகுடாவில் கங்கை, பிரம்மபுத்திரா, மேக்னா நதிகளின் சங்கமத்தால் உருவான டெல்டாவில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து காட்டுக்குள் சென்று தேனீக்களிடம் இருந்து தேனை சேகரிக்கிறார்கள். இந்த தேனில் அதிகமாக ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன.
அது போல் காஷ்மீர் குங்குமப்பூவும் பரிசாக கொடுக்கப்பட்டது. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை சிகப்பு தங்கம் என அழைப்பார்கள். குங்குமப்பூ சாகுபடியின் முழு வேலையும் கைகளால் செய்யப்படுகின்றன. ஒரே ஒரு அவுன்ஸ் குங்குமப்பூவை பெற ஆயிரக்கணக்காண பூக்கள் கைகளாலேயே அறுவடை செய்யப்படுகின்றன.
டார்ஜிலிங் தேனீர் உலகின் மிக விலை உயர்ந்த விலையுயர்ந்த தேனீர் ஆகும். 3000 முதல் 5000 அடி உயரத்தில் டார்ஜிலிங்கில் மூடுபனி மலைகளில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்குதான் இந்த இலை தயாரிக்கப்படுகிறது. இதற்காக மென்மையான தளிர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றன. நீலகிரி தேயிலை தென்னிந்தியாவில் பயிரிடப்படுகிறது. இந்த டீயானது 1000- 3000 அடி உயரத்தில் வளர்க்கப்படுகிறது.
அரக்கு காப்பி உலகின் முதல் டெராயர் மேப் செய்யப்பட்ட காபி. இது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள இயற்கை தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இந்த காப்பி செடிக்கு இயற்கை உரத்தையே விவசாயிகள் பயிரிடுகிறார்கள். இதன் வாசனை மிகவும் சிறப்பாக இருக்கும். அது போல் காதி ஆடைகளும் வழங்கப்பட்டன. இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியை நினைவுக்கூறும் வகையில் ஜி20 தபால் தலைகளையும் நாணயங்களையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.