மீண்டும் இணைந்த ராட்சசன் டீம்..

 மீண்டும் இணைந்த ராட்சசன் டீம்..

நடிகர் விஷ்ணு விஷால் -ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியாகி மிரட்டியது ராட்சசன் படம். ராம்குமார் திரைக்கதை எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகை அமலா பால் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் இந்தக்கூட்டணி தற்போது மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படமும் த்ரில்லர் பாணியில் உருவாகிவருகிறது.

நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால் கூட்டணியில் கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் ராட்சசன். இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது. இந்தப் படத்தினை எழுதி இயக்கியிருந்தார் டைரக்டர் ராம்குமார். இவர் முன்னதாக விஷ்ணு விஷால் லீட் கேரக்டரில் நடித்திருந்த முண்டாசுப்பட்டி படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களும் இயக்குநருக்கு மட்டுமில்லாமல் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் மிகச்சிறப்பாக அமைந்தன.

விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்த ராட்சசன் படத்தில், ஒரே மாதிரியாக நடக்கும் கொலைகளை மையமாக கொண்டு திரைக்கதையை உருவாக்கியிருந்தார் ராம்குமார். படம் மிரட்டியது. படம் சர்வதேச அளவில் 39 கோடி ரூபாய்களை வசூலித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

காதலை அடிப்படையாக கொண்டு த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சூட்டிங் தொடர்ந்து 20 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களமே கொடைக்கானல்தான் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடைக்கானல் பின்னணியில் ராம்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. தற்போது வெளியாகிவரும் அனைத்து படங்களிலும் அதிகமான நடிகர்களை வைத்து மல்ட்டி ஸ்டார் படங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் இருக்கும் நிலையில், அதற்காகவும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்க்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ராட்சசன் கூட்டணியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் மொத்தமாகவே 6 கேரக்டர்கள் மட்டுமே நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் தொடர்ந்து த்ரில்லர் வகைப் படங்கள் வெளியாகி வருகின்றன. இருந்தபோதிலும் இவற்றில் ஒருசில படங்களே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வசூலையும் குவித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியான காட்சி அமைப்பை வைத்து, தற்போதும் சைக்கோ த்ரில்லர் படத்திற்கு பெஸ்ட் உதாரணமாக உள்ள படம் ராட்சசன். இந்தப் படத்தின் கூட்டணி மீண்டும் த்ரில்லர் பாணி கதைக்காக இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...