மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு, கவலையில் விவசாயிகள்…
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்துள்ளது. அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 14 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 675 கனஅடியாக மட்டுமே உள்ளது. பருவமழையும் பொய்த்துப்போன நிலையில் பயிர்கள் கருகிவருவதால் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போனது. ஜூன் மாத தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. கர்நாடகா மாநிலத்தில் பெய்த மழையால் அங்குள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்து விட அடம் பிடிக்கிறது கர்நாடகா.
குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும். அணையின் நீர் இருப்பு 100 அடிக்கும் மேல் இருந்தால் குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 6,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 2700 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 675 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 45 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 14 டி.எம்.சி ஆகவும் உள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆற்று நீரை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை சரிவடைந்து வரும் நிலையில் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும். எனவே குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில் சம்பா சாகுபடி கேள்விக்குறியாகிவிடும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.