ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி குளறுபடி – விசாரணை அறிக்கை! தனுஜா ஜெயராமன்
ஏ. ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்து அது குறித்து விவாதித்து உள்ளார்.
சென்னை பனையூரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் மழை பெய்ததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த விரும்பினார். சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்.10 நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏ ஆர் ரஹ்மான் சரியான நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை நிர்ணயிக்க வில்லை என்றும் அதிகளவில் டிக்கெட்டுகளை விற்றது என அவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன .
இந்த நிலையில் பெண்கள் பலர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக எழுந்த புகார்கள், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நடந்த நிகழ்வுகளுக்கு ACTC நிறுவனம் மன்னிப்பு கோரியது. இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தேவையான இருக்கைகள் மற்றும் இடவசதிகள் செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் பலரும் பதிவிட்டனர். அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் செப்டம்பர் 10 ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற ” மறக்குமா நெஞ்சம் “ இசை நிகழ்ச்சி விவகாரம் குறித்த காவல்துறையின் விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் வழங்கினார்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து பாதிப்பு, முதலமைச்சரின் வாகனம் போக்குவரத்தில் சிக்கியது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.