இந்தியாவுக்கு பதில் பாரத்! ஜி20 மாநாட்டில் மோடி பேச்சும் பெயர் பலகையும்..!

 இந்தியாவுக்கு பதில் பாரத்! ஜி20 மாநாட்டில் மோடி பேச்சும் பெயர் பலகையும்..!

டெல்லியில் ஜி20 மாநாடு தொடங்கியது. இதையடுத்து உலக தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று பேசினார். அப்போது அவர் சொன்ன ஒற்றை வார்த்தை என்பது இந்தியாவின் பெயர் பாரத் என மாறுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு, மோடியின் அருகே வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகையில் இடம்பெற்றிருந்த பெயர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்தியாவின் பெயரை ‛பாரத்’ என மாற்றம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் 18 ம் தேதி முதல் 22ம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த பெயரால் தான் மத்திய அரசு இந்தியாவின் பெயரை ‛பாரத்’ என மாற்ற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று இரவு சிறப்பு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழில் ‛President of India’ என்பதற்கு பதில் ‛President of Bharat’ என அச்சிடப்பட்டு இருந்தது. அதேபோல் பிரதமர் மோடியின் இந்தோனேசியாவின் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையிலும் Prime Minister of Bharat என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் இந்தியாவின் பெயர் விரைவில் பாரத் என மாற்றப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையே தான் இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் இந்தியா தலைமையேற்கும் ஜி20 உச்சி மாநாடு என்பது தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட 20க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள், பொருளாதார கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதையடுத்து உலக தலைவர்களை வரவேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‛‛இந்தியா” என்பதற்கு பதில் ‛‛பாரத்” என பிரதமர் மோடி வரவேற்று பேசினார். இதுமட்டுமின்றி பொதுவாக இதுபோன்று உலக நாடுகளின் தலைவர்கள் அதிகம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர்களின் அருகேயும் அவர்களின் நாட்டை குறிக்கும் பெயர் பலகை வைக்கப்படும். அந்த வகையில் ஜி20 உச்சி மாநாட்டின்போதும் ஒவ்வொரு தலைவர்கள் பக்கத்திலும் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது பிரதமர் மோடியின் முன்பு வைக்கப்பட்ட பெயர் பலகையில் ‛இந்தியா’ என்பதற்கு பதில் ‛பாரத்’ என எழுதப்பட்டு இருந்தது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் உலகில் மிகப்பெரிய அமைப்பாக உள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்பு ‛பாரத்’ என பெயர் பலகை வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பேசுப்பொருளாகி உள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் இந்தியாவை இந்தியா எனவும், பாரத் எனவும் அழைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுதவிர நம் அரசியலமைப்பு சட்டத்திலும் பாரத் என்ற பெயர் உள்ளது. இதனால் இந்தியா, பாரத் என 2 பெயர்களில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனாலும் எதிர்க்கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளதால் பாஜக சார்பில் பாரத் என இந்தியாவை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...