சந்திரபாபு நாயுடு கைது.., மறியலில் ஈடுபட்ட மகன்..!
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் தனது தந்தையை பார்க்க வேண்டும் என புறப்பட்ட மகன் லோகேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் லோகேஷ் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ 3,350 கோடி திட்டத்துக்கு 2015-ம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. அப்போது ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு மாநில அரசு பத்து சதவீத பங்கை செலுத்த வேண்டும். ஆனால் மாநில அரசின் பங்கு தொகையில் ரூ.240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அதற்கு போலி ரசீது மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கிடையில் ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு வழக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திறன் மேம்பாட்டுக் கழகத் தலைவர் கோண்டுரு அஜய் ரெட்டி ஆந்திர சிஐடியில் புகார் அளித்தார். இதனையடுத்து திறன் மேம்பாட்டு கழக முன்னாள் தலைவர் இயக்குனர் உட்பட பலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் மாநில அரசின் சார்பில் ஜூலை 2021 இல் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த சிஐடி அறிக்கையின் அடிப்படையில் அமலாக்க இயக்குனரகம் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடு நடந்ததா என்ற விசாரணையில் கவனம் செலுத்தியது.இதில் முன்னாள் மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் நிர்வாகி காந்தா சுப்பாராவ், இயக்குநர் கே.லட்சுமிநாராயணா உள்ளிட்ட 26 பேர் மீது சிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணனிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஓய்வுக்குப் பிறகு, லட்சுமிநாராயணா ஆந்திர அரசின் ஆலோசகராகப் பணியாற்றினார். ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முதல் இயக்குநராகவும் பணியாற்றினார்.
இந்த திறன் மேம்பாட்டு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையில் முக்கிய புள்ளிகளை சிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஜூன் 2015 இல், திறன் மேம்பாட்டுக் கழகம் நிதி பரிவர்த்தனைகளில் முறைகேடுகளைக் கண்டறிந்தது. அரசானை எண் 4 இன் படி, சீமென்ஸ் எம்.டி. சௌம்யாத்ரி சேகர் போஸ் மற்றும் டிசைன் டெக் எம்.டி. விகாஸ் கன்வில்கர் ஆகியோருக்கு சந்திரபாபு அரசால் ரூ.241 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணம் 7 ஷெல் நிறுவனங்களுக்கு தவறான விலைப்பட்டியல் மூலம் நிதி மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இந்நிலையில் 2017-18ல் ரூ.371 கோடியில் ரூ.241 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஐடி ரிமாண்ட் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த காலங்களில் சிஐடி வழக்குகளை பதிவு செய்த 26 பேருக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தனது தந்தை சந்திரபாபு நாயுடுவை பார்க்க வேண்டும் என புறப்பட்ட அவரது மகன் லோகேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருடன் லோகேஷ் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பதற்றம் காரணமாக பல பகுதிகளில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.