பூத்திருக்கும் விழியெடுத்து – 8 | முகில் தினகரன்

 பூத்திருக்கும் விழியெடுத்து – 8 | முகில் தினகரன்

அத்தியாயம் 8

நீ…. நீயா?…. நீ ஏன் இங்கே வந்தே?” அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் திக்கித் திணறிக் கேட்டாள் வைசாலி.

 “ஏன் வைசாலி…. நான் வந்ததினால் உன் சுயரூபம் வெளிப்பட்டுடுச்சு!ன்னு அதிர்ச்சியா இருக்கா?” நக்கலாய்ச் சிரித்துக் கொண்டே கேட்டான் அசோக்.

“அதிர்ச்சியா…. எனக்கா?…. ஹா….ஹா….ஹா…. அசோக் பையா… இந்த வைசாலியோட ஒரு முகம்தான் உனக்குத் தெரியும்… இவளுக்கு இன்னொரு முகம் இருக்கு… அது எப்படிப்பட்ட முகம்ன்னு…ம்ம்ம்ம்….இன்னும் அரை மணி நேரத்துல நீ தெரிஞ்சுக்குவே”

அதைக் கேட்டு உள்ளுக்குள் லேசாய் அச்சமுற்றான் அசோக்.

“இவ என்ன சொல்றா?….இன்னும் அரை மணி நேரத்துல தெரியும்!ன்னு சொல்றாளே… அதுக்கு என்ன அர்த்தம்?” அவன் உள்ளம் தாறுமாறாய் சிந்திக்கத் துவங்கியது.  “இவள் பேச்சின் பின்புலத்தில் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கு!… இவ சாதாரணப் பெண்ணில்லை!… புராணக் கதைகளில் வரும் அரக்கி… ராட்சஸி…”

 “என்ன அசோக்… நீ இன்னும் கிளம்பலையா?.. சீக்கிரம், போ கண்ணா… அங்க உனக்கு நிறைய வேலையிருக்கு!… அப்படியே போற வழில ஏதாவதொரு ஃபேன்ஸி ஸ்டோர்ல நின்னு கருப்பு ரிப்பன் ஒரு ரோல் வாங்கிக்கோ… எல்லோரும் சட்டைல குத்திக்கணுமல்ல” சினிமாக்களில் வரும் வில்லியைப் போல் கர்ண கொடூரமாய்ப் பேசினாள் வைசாலி.

 “த பாரு வைசாலி… நீ ஏதோ பெரிய திட்டத்தோடதான் அந்த ஸ்டூடண்ட்டை இங்க வரவழைச்சிருக்கே… உண்மையைச் சொல்லு… என்ன பண்ணி வெச்சிருக்கே?”

சில விநாடிகள் யோசித்த வைசாலி, “ம்ம்ம்… இப்ப இதை நான் சொன்னாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது… ஏன்னா எல்லாம் கை மீறிப் போயிடுச்சு… ஸோ…. தைரியமா சொல்றேன்… இப்ப வந்தானே உன்னோட வகுப்பு ஸ்டூடண்ட்…. அவனுக்கு நான் குடுத்த கூல்டிரிங்க்ஸ்ல ஏகமாய்ப் போதை மருந்தை கலந்திருக்கேன்….அது உடனே வேலை செய்யாது… உள்ளார போயி… அரை மணி நேரம் கழிச்சுத்தான் கொஞ்சம் கொஞ்சமாய்… போதை ஏறும்… தலை “கிர்ர்ர்ர்ர்”ருன்னு சுத்தும்!… கண்கள் “மச…மச”ன்னு ஆகி… காலும்..கையும்.. சுத்தமாய் மரத்துப் போய்7 அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருக்கும்!… அந்த நிலைல அவன் பைக்கை ஓட்டிட்டுப் போனா….அவனுக்கு மட்டும் விபத்து நடக்காது… கண்ட்ரோல் மீறும் அவனது பைக்…. சுத்தமா நாலஞ்சு பாதசாரிகளையாவது கொன்னுட்டுத்தான் கீழே விழும்… அப்படி விழும் போது அவனும் செத்திருப்பான்” பற்களை “நற…நற”வென்று கடித்துக் கொண்டு அவள் சொல்ல,

 “அடிப்பாவி… நீயெல்லாம் ஒரு பொண்ணா?… கேவலம் டான்ஸ் போட்டில நீ ஜெயிக்கணும்ங்கறதுக்காக ஒரு அப்பாவி இளைஞனோட உயிரையா பறிப்பே?… ஹும்… அவனைப் பெத்தவங்க எத்தனை கனவுகளோட… எத்தனை எதிர்பார்ப்புகளோட அவனை கல்லூரிக்கு அனுப்பி வெச்சிருப்பாங்க!… அவங்க ஆசைல மண்ணை வாரிப் போட்டுட்டுயேடி…” கத்தினான் அசோக்.

 “ஹலோ… உண்மையைச் சொல்லணும்ன்னா….அவனோட சாவுக்குக் காரணம்… நானல்ல… நீ… நீயேதான்”

 “வாட்?… நானா?… நான் எப்படி?”

 “பின்னே… என்னைத் தோற்கடிக்கணும்கறதுக்காக நீ அவனைத் தயார் பண்ணி டிரெய்னிங் குடுத்தது தப்பு!… அதுதான் என்னைக் கோபமூட்டி இதைச் செய்ய வெச்சிருக்கு…!  ஸோ… யூ ஆர் தி கல்பிரிட்” சற்றும் அசராமல் வைசாலி சொல்லிக் கொண்டே போக,

 “நான் உன்னைச் சும்மா விட மாட்டேன் வைசாலி!… அந்த ஸ்டூடண்ட்டுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்!… அப்புறம் உனக்கு இருக்கு” ஆட்காட்டி விரலை அவள் முகத்துக்கெதிரே ஆட்டி மிரட்டலாய் அசோக் சொன்னான்.

 “தாராளமா கம்ப்ளைண்ட் பண்ணு… அப்படி நீ பண்ணினா… நான் மாட்ட மாட்டேன்…அவந்தான் மாட்டுவான்!…எப்படின்னு கேட்கறியா?… அவன் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல அவன் போதை மருந்து உட்கொண்டிருப்பதாய் தெரிய வரும்!… அதுவுமில்லாம அவனுக்குத் தெரியாமல் அவன் சட்டைப் பாக்கெட்ல ரெண்டு பிரவுன் சுகர் பாக்கெட்டைப் போட்டிருக்கேன்!… அதுபோதும் அவனை ஒரு “டிரக் அடிக்ட்”ன்னு ஃப்ரூப் பண்ண!”

“இப்ப நீ சொன்னதையெல்லாம் அப்படியே போலீசில் சொல்லி உன்னைச் சிக்க வைப்பேன்”

 “ஹா… ஹா… அசோக் நீ இன்னும் சின்னப் பையனாகவே இருக்கியே ஏன்?… அவன் முழு போதைல என் ரூமுக்கு வந்து என் கிட்டே தகாத முறைல நடந்துக்கிட்டான்”ன்னு நான் கண்ணீர் வடிப்பேன்!… பொம்பளைக்குக் கண்ணீர் போதும்… எப்பேர்பட்ட பிரச்சினையிலிருந்தும் தப்பித்துக் கொள்ள!”

அசோக் கோபத்தில் கைகளைப் பிசைய,

“போப்பா… சீக்கிரம் போ…” அறையின் கதவைக் காட்டி வைசாலி சொல்ல, ஓடினான்.

சாலையின் இருபுறமும் கண்களால் தேடிக் கொண்டே சென்றான்.  ஓரிடத்தில் சிலர் கும்பலாய் நிற்க, தன் பைக்கின் வேகத்தை மட்டுப்படுத்தி அந்த கும்பலின் அருகே சென்று நிறுத்தினான்.

“இந்தாப்பா… வண்டியை எதுக்கு இங்க நிப்பாட்டுறே?… ஏற்கனவே  டிராபிக் ஜாம் ஆகி இப்பத்தான் கிளியர் ஆகியிருக்கு… மொதல்ல வண்டிய எடுத்திட்டுக் கிளம்பு” வேகமாய் அவனிடம் வந்த டிராபிக் கான்ஸ்டபிள் சொல்ல,

 “சார்… இங்க என்ன நடந்திச்சு… ஏதாச்சும் ஆக்ஸிடெண்ட் நடந்திச்சா?….சீக்கிரம் சொல்லுங்க சார்…” கெஞ்சலாய்க் கேட்டான்.

 “ஆமாம் விபத்துதான் நடந்திச்சு…”

 “ஒரு ஸ்டூடண்ட்… பைக்குல….” அசோக் திக்கித் திணறிச் சொல்ல,

 “அவன் ஸ்டூடண்ட்டா… வாத்தியாரா?ன்னு எனக்குத் தெரியாது… ஒரு இளைஞன்… அவ்வளவுதான்”

 “சார்… நான் கோயமுத்தூர் காலேஜ் புரபஸர் சார்!… அந்தப் பையன் என் ஸ்டூடண்ட் சார்… இங்க நடந்தது விபத்தில்லை சார்… கொலை சார்… கொலை சார்” கத்தினான் அசோக்.

 “யோவ்… என்னய்யா சொல்றே?… கொலையா?” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு அந்த டிராபிக் கான்ஸ்டபிள் கேட்க,

 “ஆமாம் சார்!… காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்களுக்காக நடக்கப் போற டான்ஸ் போட்டில அவன் ஜெயிக்கக் கூடாது என்பதற்காக… அவனுக்கு போதை மருந்தைக் குடுத்து… இந்த ஆக்ஸிடெண்ட்டை ஏற்படுத்தியிருக்காங்க சார்”

“ம்ம்ம்ம்… ம்ஹும்… இதுக்கு மேலே இங்க நின்னு பேசினா மீடியாக்காரங்க… பிரச்சினையை வேற மாதிரி திசை திருப்பிடுவாங்க…  நீங்க என் கூட வாங்க”

அசோக்கின் பைக் அருகே வந்து, “வண்டியை ஸ்டார்ட் செய்து… பக்கத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுப்பா”

 “சார் எனக்கு இங்க போலீஸ் ஸ்டேஷன் எங்கிருக்கு?ன்னு தெரியாது சார்”

 “நீ வண்டியை எடு… நான் வழி காட்டறேன்”

அந்த டிராபிக் கான்ஸ்டபிளை ஏற்றிக் கொண்டு, அவர் காட்டிய திசையில் வண்டியைச் செலுத்தினான் அசோக்.

-( மலரும்… )

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...