எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 8 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 8
முகம் வெளிறிப் போய் அமர்ந்திருந்தாள் கோதை. அம்சவேணியின் கைகளுக்குள் இருந்த தன் கைகள் நடுங்குவதை உணர்ந்தாள்.
“கோதை..இதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் சொல்லலைன்னு நீ நினைப்பே. சொல்ற அளவுக்கு அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவன் பூரண குணமடைஞ்சுட்டான். அது ஒரு ஆக்ஸிடன்ட் மாதிரி. சில நாட்கள் பாதிக்கப்பட்டிருந்தான். அவ்வளவுதான்.”
கோதை எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள்.
“உன்னை ஏமாத்திட்டதா நீ நினைக்காதே. என் பையன் குழந்தைமாதிரி. அவனை கவனிச்சுக்க உன்னால்தான் முடியும்னு தோணுச்சு. நீ சைக்காலஜி படிச்சவள். அதனால் ஏதாவது பிரச்சனை வந்தாக் கூட பொறுமையா கையாள்வேன்னு தான் உன்னை கல்யாணம் பண்ணிவச்சேன்.”
“எதனால அவர் மனநலம் பாதிக்கப்பட்டார்.?”
கோதை கேட்ட கேள்விக்கு நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிவிட்டு சொல்லத் தொடங்கினாள் அம்சவேணி.
“குமணனுக்கு தன்னோட மேற்படிப்பை வெளிநாட்ல படிக்கனும்னு ஆசை. சங்கீதா வெளிநாட்ல படிக்க கிளம்பினா. இவனுக்கும் ஆசை. ஆனா.. என்னால அவனை விட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது. ஒருநாள் ராத்திரி கூட அவன் இல்லாட்டி எனக்கு தூக்கம் வராது. அதனால அவனை வெளிநாடு அனுப்பி படிக்க வைக்க எனக்கு மனசு இல்லை.
பெண் பிள்ளையான சங்கீதாவே ஃபாரின் போய் படிக்கும்போது அம்மா தன்னை அனுப்பமாட்டேங்கறாளேங்கற கோபம் அவனுக்கு. அதனால வெளி ஸ்டேட்ல போயாவது படிக்கனும்னு முடிவுபண்ணி ஹைதராபாத்ல இருக்கற யுனிவர்சிட்டிக்கு அப்ளை பண்ணினான். கிடைச்சது. ஆனா..நானும் ஹைதராபாத் வருவேன்னு அவன் நினைக்கலை. நான் அவனை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாம கிளம்பிட்டேன்.
ஹைதராபாத்ல எங்களுக்கு சொந்த வீடு இருந்தது. அந்த வீட்ல நானும் குமணனும் இருந்தோம். குமணன்கிட்ட நான் எப்பவும் ரொம்ப கண்டிப்பா இருப்பேன். காலேஜ் விட்டதும் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்திடனும். ஃபிரண்ட்ஸங்க வீட்டுக்கு போகக்கூடாதுன்னு கட்டுப்பாடா வச்சிருந்தேன். அவனை நான் குழந்தையாவே நினைச்சிருந்தேன். அவன் வளர்ந்த வாலிபன்ங்கறதையே மறந்துட்டேன். அவன் ஒரு பொண்ணை காதலிச்சிருக்கான். அவளும் அவனைக் காதலிச்சிருக்கா. இந்த விஷயம் எனக்குத் தெரியலை. அந்த சமயத்துல குமணனோட அப்பாவுக்கு பக்கவாதம் வந்து கணவரோடவே இருந்து அவருக்கு சேவை செய்ய வேண்டிய சூழ்நிலை.
குமணனை என்னால கவனிக்க முடியலை. அவனுடைய நிலை என்னன்னு தெரியாத நிலை. எவ்வளவுக்கு எவ்வளவு அவனை கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிட்டேனோ அந்தளவுக்கு அவனை கவனிக்க முடியாமப் போயிட்டு. ரெண்டு பேரும் தீவிரமா காதலிச்சிருக்காங்க. என்ன காரணமோ தெரியலை. அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு. இவன் உடைஞ்சுப்போய்ட்டான்.எனக்கு விஷயம் தெரிஞ்சா நான் வேதனைப் படுவேன்னு என்கிட்டயிருந்து மறைச்சுட்டான். ஃபிரண்ட்ஸங்கக்கிட்டயும் என்கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டான்.
அதனால அவனுடைய நிலை எனக்கு தெரியாமலேயே போய்ட்டு. அந்த பொண்ணை நினைச்சு நினைச்சு அவன் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கான். அதுவும் எனக்குத் தெரியலை. குடிப்பழக்கமே இல்லாதவன் பயங்கரமா குடிக்க ஆரம்பிச்சிருக்கான். வியாதி முத்தி அவன் தற்கொலை முயற்சியில ஈடுபட்ட போதுதான் ஃபிரண்ட்ஸ் எனக்கு விவரம் சொன்னாங்க. நான் போய் பார்க்கும்போது என்னையே அடையாளம் தெரியாத நிலையில என்புள்ளை இருந்தான். ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட்னு நாட்கள் ஓடுச்சு. கவுன்சிலிங் கவுன்சிலிங்ன்னு கொஞ்சநாள் ஓடுச்சு. ஒரு பயனும் இல்லை. அவனோட மூளையில அவளைத் தவிர வேற ஒண்ணுமே இல்லைங்கற மாதிரி ஆயிட்டு. அப்பத்தான். சீனியர் சைக்காட்ரிஸ்ட் வந்து அவனை பரிசோதிச்சுட்டு வேறவிதமான ட்ரீட்மென்ட் தரலாம்னு யோசனை சொன்னார்.”
சொல்லிவிட்டு ஓய்வு தேவைப்பட்டதைப்போல் ஒருசில நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
கோதை அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் கடந்துவிட்டதை கவிழும் இருளும் பளிச்சென ஒளிர்ந்த மின்விளக்குகளும் உணர்த்தின.
ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தொடர்ந்தாள் அம்சவேணி.
“இந்த மாதிரி மனநோயால சீரியசா பாதிக்கப்பட்ட பேஷன்ட்டை துரக்க நிலைக்கு கொண்டுபோய் அவங்க மனசுல பாதிக்கப்பட்ட விஷயத்தை அடி ஆழத்துல அமுக்கி வைக்கிற ட்ரீட்மென்ட் கொடுப்பாங்களாம். அந்த ட்ரீட்மென்ட்டால மட்டும்தான் அவனை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்னு டாக்டர் சொன்னார். அந்த ட்ரீட்மென்ட்டை அவனுக்கு கொடுத்தாங்க. அவன் மனசிலேர்ந்து அந்த பெண்ணைப் பத்தின அத்தனை நினைவுகளையும் அடி மனசுக்கு கொண்டு போய் அழுத்தி வச்சாங்க. அந்த நினைவுகள் செயல்படாத நிலையில வலுவிழக்க செய்தாங்க. கொஞ்சம் கொஞ்சமா என் பையன் பழைய நினைவுகள்லேர்ந்து மீண்டான். தான் ஒரு பெண்ணை காதலிச்சதோ அதனால பாதிக்கப்பட்டதோ அவனுக்கு சுத்தமா மறந்துடுச்சு. விட்டுப் போன படிப்பைத் தொடர்ந்தான். அவன் மனசு இன்னொரு பொண்ணை ஏத்துக்கவும் தயாராயிடுச்சு. அதனாலதான் கல்யாணம் செய்தேன்.” சொல்லிவிட்டு கோதையின் முகத்தை ஏக்கமாகப் பார்த்தாள்.
“கோதை.. ஆனா..டாக்டர் இன்னொரு விஷயமும் சொன்னார்”
‘என்ன?’ என்பதைப்போல் மாமியாரைப் பார்த்தாள் கோதை.
“எக்காரணத்தை முன்னிட்டும் அந்த பெண்ணைப் பத்தின ஞாபகத்தை அவனுக்கு ஏற்படுத்தக்கூடாது. அவனுடைய காதல் நினைவுகளை தூண்டக்கூடாது. அந்தப் பெண்ணை அவன் சந்திக்கக் கூடாது. அப்படி அவன் நினைவுகள் தூண்டப்பட்டா அவன் பழைய நிலைக்கு போக வாய்பிருக்குன்னு சொன்னார். கோவா ஹோட்டல்ல மது பாட்டில்களைப் பார்த்ததும் மனநிலை சரியில்லாத நிலையில் குடித்தது அவனுக்குள்ள தூண்டப்பட்டிருக்கு. அதான்..அவன் அப்படி குடிச்சிருக்கிறான். அத்தனை அதிகமா குடிச்சும் அவனுக்கு ஏதும் ஆகாததுக்கு காரணம் அவனோட குடல் மதுவுக்கு பழக்கப்பட்டதுதான் காரணம்.
கார்ல திரும்பி வரும்போது காதல் தோல்வி பாட்டைக் கேட்டதும் அவன் தன்னை மீறி அழுததும் இப்படித்தான். இந்த நேரத்துல நாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும். அவனுக்கு பழைய காதலைப் பத்தின எந்த நினைவும் வராமப் பார்த்துக்கனும். அந்த மாதிரி சந்தர்ப்பங்களை அவன் எதிர்கொள்ளாம பார்த்துக்கனும். அது உன்னால மட்டும்தான் முடியும். அதனாலதான் சங்கீதாவை நான் அவனுக்கு கட்டிவைக்கலை. அவக்கிட்ட பொறுமை கிடையாது. எடுத்தோம் கவிழ்த்தோம்னு செயல்படறவ. கோதை…என் புள்ளயை நல்லபடியா பார்த்துப்பியா?”
அம்சவேணி கையெடுத்துக் கும்பிட்டாள்.
-(தொடரும்…)