ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்
ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்!
புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று பலரால் புகழப்படும் டைரக்ர் வெற்றிமாறன் இன்று (செப்டம்பர் 4) தன் 48ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்
வெற்றிமாறனின் திரைப்படங்கள் ஒரு சிலவற்றை விரும்பாதவர்கள் விமர்சனப் பார்வை கொண்டவர்கள் அல்லது முற்றிலும் நிராகரிப்பவர்கள்கூட ஒரு படைப்பாளியாகத் திரைப்பட இயக்குநராக அவருடைய அசாத்திய திறமையை அங்கீகரித்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே இப்படிப்பட்ட புகழை அடைந்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஆனாலும் நம் தமிழ் படங்களின் மூலம் நாக்கூசும் கெட்ட வாரத்தைகளை கேஷூவலாக அள்ளித் தெறித்து ஒரு ஜெனரேஷனின் சொல்லாடலை சிதைத்தவர் என்ற பெருமையும் இவருக்குண்டு .
சாதனை டைரக்டர் பாலு மகேந்திராவின் பாசறையில் இருந்து வந்தவர் வெற்றிமாறன். அதனால், ஆழ்ந்த வாசிப்பு பழக்கம் உண்டு. தன் குருவைப் போலவே புத்தகங்களை படமாக்குவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ‘விசாரணை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ என தொடர்ந்து நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறார் வெற்றி. பொதுவாக, உதவி இயக்குநர்கள் பலரும் உலகத் திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்ப்பார்கள். இயக்குநர் வெற்றிமாறனும் இதற்கு விதிவிலக்கல்ல. அவருடைய முதல் படமான ‘பொல்லாதவன்’, சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியத் திரைப்படமான ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ திரைப்படத்தின் பாதிப்பில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
வருடத்திற்கு இரண்டு, மூன்று படங்கள் எடுக்க வேண்டும் என்ற எந்த பரபரப்பும் இல்லாதவர் வெற்றிமாறன். முன்பு அவர் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில். ‘நான் 15 ஆண்டுகள் சினிமாவில் இயங்கினால் அதிகபட்சமாக ஏழு படங்களை இயக்கியிருப்பேன்’ என்று கூறியிருந்தார். இப்போது அவர் இயக்குநராகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ அடுத்து ‘வாடிவாசல்’ என பொறுமையாகவே இயங்கி வருகிறார்.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் போராட்டங்களை படமாக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார் வெற்றிமாறன்.
‘படிப்பை மட்டும் உன் கிட்ட இருந்து யாராலயும் வாங்க முடியாது’ என அவருடைய ‘அசுரன்’ படத்தின் வசனத்தை, நிஜத்திலும் செய்து காட்டியவர் வெற்றிமாறன். தன் தாய் மேகலா சித்ரா எம்.ஜி.ஆர். பாடல்களில் முனைவர் படம் பெற வேண்டும் என ஆசைப்பட நான்கு வருடம் கட்டணம் கட்டி அவரை ஊக்குவித்து பட்டம் பெற வைத்திருக்கிறார்.
முன்னொரு காலத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்து இப்போது மீண்டது போல கெட்டவார்த்தைகளை புகுத்துவதை நியாயம் சொல்லி தொடராமல் நல்ல படைப்புகளை வழங்கி சாதிக்க வேண்டுமென்று வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம்
From The Desk of கட்டிங் கண்ணையா