கரை புரண்டோடுதே கனா – 7 | பத்மா கிரக துரை

 கரை புரண்டோடுதே கனா – 7 | பத்மா கிரக துரை

 

அத்தியாயம் – 7

விடிந்ததும் நாகர்கோவில்.. பிறகு அங்கிருந்து தக்கலை..” சொன்னபடி ஆராத்யா டிரெயினின் மேல் பெர்த்தில் ஏறிப் படுக்க உதவினாள் மனோரமா..

வெளிச்சமாய் மின்னிய தாயின் முகத்தை அன்புடன் பார்த்தாள் ஆராத்யா.. நெடுநாட்கள் கழித்து தனது பிறந்த ஊரையும், பிறந்த வீட்டு மனிதர்களையும் சந்திக்க போகும் சந்தோசத்தில் மனோரமாவின் முகம் மலர்ந்து கிடந்தது..

இதற்கு நேர்மாறாக கறுத்து சோம்பியிருந்த தந்தையின் முகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.. அவர்கள் இருவருமாக ஊருக்கு கிளம்ப போவதை நம்ப முடியாமல் பார்த்தார் மாதவன்..

“ஆராக்குட்டி நீயுமாடா..?” சோர்ந்து ஒலித்த தந்தையின் முகம் அவளுக்கு நினைவு வந்தது.. அவர்கள் இருவருமாக ஊருக்கு கிளம்ப போவதை நம்ப முடியாமல் பார்த்தார் மாதவன்..

“டென் டேஸ் டாட்.. ஓடி வந்துடுவேன்.. உங்களுக்குத்தான் உங்க ஆபிஸ் டூர் இருக்கிறதே..”

“நான் உங்க இரண்டு பேரையும் டில்லி கூட்டிட்டு போகலாம்னு நினைத்தேன்..” மாதவனின் ஆபிஸ் டூர் டில்லிக்குத்தான்..

“இவர் அங்கே போய் லாட்ஜில் ரூம் போட்டு நம்மை விட்டு விட்டு ஊர் சுற்ற போய் விடுவார்.. நாம் இரண்டு பேரும் ரூமிற்குள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கனும்..” சீற்றமாய் வந்தாள் மனோரமா.. அவள் இதற்கு முன் கணவனுடன் போன சில ஆபிஸ் டூர்களின் அனுபவம் பேசியது..

“ஊர் சுற்ற போய் விடுவேனா..? ஆபிஸ் வேலைடி.. அப்படி நான் நாய் மாதிரி உழைக்கலைன்னா நீ இப்படி ராணி மாதிரி இருக்க முடியாது..”

“அடப் பார்றா.. இந்த ஜமீன்தாரை, பட்டத்துராணியை காப்பாத்த வந்துட்டாரு.. டீ ஆரா அந்த செங்கோலை கொண்டு வந்து உன் அப்பாகிட்ட கொடுடி, தனியா இங்கே உட்கார்ந்து அரசாண்டுட்டு இருக்கட்டும்.. நாம் ஊருக்கு போயிட்டு வருவோம்..” மனோரமாவின் நக்கலுக்கு ஆராத்யாவிற்கு கோபம் வர மாதவனுக்கு வராதா..?

அவர் கை சட்டையை மடித்து விட்டு எழுந்த வேகத்திற்கு அப்பா, அம்மாவை அடிக்க போகிறாரென்றே ஆராத்யா நினைத்தாள்.. ஆனால் முந்தைய பல சந்தர்ப்பங்கள் போல் இந்த சந்தர்ப்பமும் அவளுக்கு ஏமாற்றத்தையே தந்தது..

மனைவியின் மிக அருகே நெருங்கியதும் தனது ஆவேசத்தைக் கை விட்டு மாதவன் அமைதியாகிவிட்டார்.. மீண்டும் சோபாவிற்கு திரும்பி விட்டார்.. வெறும் விழி முறைத்தலை மட்டுமே மனைவிக்கு கொடுத்தார்.

ஆராத்யா கன்னத்தில் கை தாங்கி பெற்றோரை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்தாள்..

“ம் டாடி ஹரி அப்..” கைகளை டப்டப்பென ஓசையுடன் தட்டி அப்பாவை உற்சாகமூட்டினாள்..

மகளின் தூண்டலுக்கு பின்னாவது மனைவியை எதிர்க்கும் ஆசை தான் மாதவனுக்கும், ஆனால் மனோரமா தனது அகன்ற விழிகளை விரித்து அவரை ஆழ்ந்து பார்த்து விட்டாளனால் அதன் பிறகு மௌனமாவதை தவிர அவரால் எதுவும் செய்ய முடியாது போய்விடும்..

“என்னை விட்டு போவதில் உனக்கு அவ்வளவு ஆர்வமாடி..? போ.. இதற்கு பிறகு திரும்பி வராதே.. அப்படியே உன் பிறந்த வீட்டிலேயே இருந்து கொள்..”

வலிமையான வார்த்தைகள்தான்.. ஆராத்யாவிற்கே வலியைக் கொடுக்க, மனோரமாவின் நிலையைக் கேட்க வேண்டாம்.. கண் கலங்கி சிவக்க, இதழ் துடிக்க அமைதியாக கணவனைப் பார்த்தவள் பேசாமல் உள்ளே போய்விட்டாள்..

“என்ன டாடி இது..? இப்படியா பேசுவீர்கள்..?” ஆராத்யா தந்தையைக் கண்டித்தாள்..

“உங்கள் இருவரையும் என்னுடன் டெல்லி கூட்டிப் போக டிக்கெட்டெல்லாம் போட்டு விட்டேன் தெரியுமா..?”

“அம்மா அவர்கள் ஊருக்கு போகப் போவதாக சொல்வது உங்களுக்கு தெரியும் தானே..? பிறகும் ஏன் டிக்கெட் போட்டீர்கள்..?”

“என் மனைவியும், மகளும் என் பின்னால் வருவார்கள் என்ற நம்பிக்கையில் தான்..”

“இதென்ன பேச்சு டாடி..? இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா சொல்லுங்கள்.. இப்படி ஒரு கட்டுப்பாட்டை நீங்கள் எங்கள் இருவருக்குமே இதுவரை போட்டதில்லையே உங்களுக்கென்று தனி ஆசைகள், லட்சியங்கள் இருக்கும்.. எனக்காக எதையும் குறைத்துக் கொள்ளாமல் உங்கள் வழியில் தயங்காமல் தெளிவாக நடங்கள் என்றுதானே இது வரை எங்களுக்கு சொல்லி வந்திருக்கிறீர்கள்.. இப்போது மட்டும் இந்த சுய சிந்தனை எங்கிருந்து வந்தது..?”

மகளின் சுட்டிக் காட்டலில் மாதவனின் முகம் தொங்கிப் போனது.. ஆனாலும் அவர்தன் தோல்வியை ஒத்துக் கொள்ள விரும்பவில்லை.. உர்ரென முகத்தை வைத்துக் கொண்டு மாடியேறி போய்விட்டார்..

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே தாயும், தந்தையும் சண்டை போட்டதை மறக்காமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க பிடிக்காமல் வீட்டிற்குள் நடமாடுவதை ஆராத்யா ஆச்சரியமாகப் பார்த்தாள்.. அவள் பெற்றோர் ஒரு நாளும் இந்த அளவு தங்கள் சண்டையை நீடித்ததில்லை.. காலையில் சண்டை போட்டால் மாலையில் காலை சண்டைக்கும் சேர்த்து கொஞ்சலும் குலாவலுமாக சமாதானமாகி இருப்பார்கள்.. இப்போது அவர்களது முகம் திருப்பலை ஆராத்யாவினால் நம்ப முடியவில்லை..

அம்மாவின் துணையில்லாமல் தானாக பெட்டி அடுக்கிக் கொண்டு, சுவற்றை பார்த்து வர்றேன் என்று விரைப்பாய் சொல்லப் போன அப்பாவை அவள் நம்ப முடியாமல் பார்த்தாள்.. அவர் கிளம்புவதை ஓரக் கண்ணால் பார்த்தபடி அலட்சியத்தை முகத்தை வழிய விட்டபடி டிவி முன் அமர்ந்து சேனல் மாற்றிக் கொண்டிருந்த மனோரமா, அவர் ஏறிய ஆட்டோ வாசலில் கிளம்பும் சத்தம் கேட்கவும், ரிமோட்டை கீழே விசிறி விட்டு வேகமாக வாசலுக்கு ஓடினாள்..

ஆட்டோ விட்டுப் போன கலைந்து கொண்டிருந்த கரும் புகையை கண் தளும்ப பார்த்தபடி நின்றிருந்த அன்னையை பரிதாபமாகப் பார்த்தாள் ஆராத்யா..

இவ்வளவு பாசத்தை மனதில் வைத்துக் கொண்டு இவர்கள் இருவருக்கும் எதற்கிந்த வெட்டி வீம்பு..? என நினைத்தவள் தாயின் தோள் பற்றி அவளை உள்ளே அழைத்து வந்தாள்.. அம்மாவின் பிறந்த ஊர், வீட்டைப் பற்றி பேசியது.. இந்தப் பேச்சில் மனோரமாவின் சோகம் கரைந்து முகத்தில் சந்தோசம் வந்தது.. தனது தாய், தந்தை, அண்ணன், தங்கை என அனைவரையும் பேசத் தொடங்கினாள்..

“எங்கள் அப்பா அம்மாவிற்கு நாங்கள் நான்கு பிள்ளைகள்.. நான் மூன்றாவது பெண்.. எனக்கு இரண்டு அண்ணன்கள்.. ஒரு தங்கை.. பெண் குழந்தைகளுக்கு எங்கள் வீட்டில் ரொம்ப செல்லம் உண்டு.. வீட்டில் எந்த நல்ல காரியம் தொடங்கினாலும் அந்த வீட்டின் மூத்த பெண் பிள்ளையை வைத்துத்தான் தொடங்குவார்கள்.. இது எங்கள் முப்பாட்டன் காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்ட பழக்கமாம்..”

“முப்பாட்டன்னா யார் மம்மி..?”

“எங்கள் தாத்தாவிற்கு தாத்தாவிற்கு தாத்தா.. மூன்றாவது தாத்தாவின் பரம்பரை..”

“அடேயப்பா..” ஆராத்யா விழி விரித்தாள்..

பிறந்ததிலிருந்து சொந்த பந்தங்களோ, உடன் பிறந்தவர்களோ யாருமில்லாத நிலையில் வளர்ந்திருந்தவளுக்கு இந்த உறவு சங்கிலிகள் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது..

இதோ இப்போது கூட அம்மாவின் பரம்பரைச் சங்கிலி தொடர்களை நினைத்தபடியேதான் கண்மூடிப் படுத்திருந்தாள், மெல்லிய குலுக்கலுடன் போன ரயில் அவள் உடலை இதமாகத் தாலாட்டியது..

“நான் பெரிய அண்ணனின் செல்லம்.. பெரிய அண்ணனும், பெரிய அண்ணியும் என்னை தங்கள் முதல் மகளாகத்தான் நினைத்து வந்தனர்.. நான் உன் அப்பாவை காதலித்து வீட்டை விட்டு வெளியேறியதில் மிகவும் உடைந்து போனவர்கள் பெரியண்ணனும், பெரியண்ணியும் தான்..” மனோரமாவின் குரல் தழுதழுத்தது..

“அதுதான் இப்போது எல்லாம் சரியாகி விட்டதே மம்மி.. உன் அண்ணனும் அண்ணியும் தானே நம் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைத்துப் போனது..?”

“அண்ணனும், அண்ணியும் தான்.. ஆனால் சின்னண்ணணும், அண்ணியும் அவர்கள் மகளுக்குத்தான் கல்யாணம்.. பெரிய அண்ணாவும், அண்ணியும் இன்னமும் என் மேல் கோபமாகத்தான் இருக்கிறார்களாம்..” மனோரமாவின் கன்னங்களில் இரு நீர்த்துளிகள் உருண்டன..

“அட விடு மம்மி.. இப்போது தான் நாம் போகிறோமே.. நேரிலேயே போய் அவர்களை சமாதானப்படுத்தி விடலாம்..” அம்மாவின் கன்னத்தை தன் சுடிதார் ஷாலால் அழுத்தித் துடைத்தாள் ஆராத்யா..

இத்தனை வருடங்களுக்குப் பிறகுமா.. கோபம் நிலைத்து இருக்கும்.. தனக்குள்ளேயே மறுத்தபடி கண் மூடினாள்..

“திடுமென அவளைச் சுற்றி வெப்பம் சூழ்ந்தது.. அவளால் மூச்சுவிட முடியவில்லை.. கொஞ்ச நேரம் கழித்தே அவள் அதனை உணர்ந்தாள்.. மிக இறுக்கமாக அவள் அவனின் அணைப்பில் சிக்கியிருந்தாள்.. அசையக் கூட முடியாத அளவு அவன் அவளை இறுகச் சுற்றியிருந்தான்.

அவன் ஆர்யன்.. மோகம் கொப்பளிக்கும் விழிகளோடு அவள் முகத்தை நெருங்கினான்.. தன் இரு கைகளையும் இடையில் நீட்டி அவன் முகத்தில் பதித்து தள்ளினாள் ஆராத்யா.. சட்டென பின் போன முகம் காணாமல் போக அவள் கைகள் காற்றில் அலைந்தது.. திக்கென விழித்துக் கொண்டாள்..”

கனவு.. கனவில் கூட கெட்ட நோக்கத்துடன் அவளை நெருங்குகிறானே.. அன்றைய சம்பவத்திற்கு பிறகு இப்படித் தான் அவளை கனவிலும் வந்து தினமும் இம்சித்து கொண்டிருந்தான் ஆர்யன்..

தொண்டை காய்ந்தாற் போலிருக்க, பெர்த்திலிருந்து இறங்கி தண்ணீர் பாட்டிலை தேடினாள்.. மனோரமா கீழ் பெர்த்தில் நல்ல உறக்கத்தில் இருக்க டிரெயின் வேகம் குறைந்து ஏதோ ஓர் ஸ்டேசனில் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது..

குனிந்து பெயர் பலகையில் திருச்சி என வாசித்தவள், கீழே இறங்கி ஏதாவது கூல்ட்ரிங்ஸ் வாங்கிக் குடிக்க நினைத்தாள்.. ரயிலை விட்டு இறங்கி அருகே இருந்த கடையை நோக்கி நடந்தாள்.. முன்பே அங்கே சிலர் சாமான்கள் வாங்கிக் கொண்டிருக்க, கொஞ்சம் காத்திருந்து அவர்கள் போனதும் கூல்ட்ரிங்ஸ் பெயர் சொல்லி “ஜில்லுன்னு தாங்கண்ணா..” எனக் கேட்டுக் கொண்டிருந்த போது, அவளுக்குப் பின்னால் அந்த அழைப்பு கேட்டது..

“ஆராத்யா..”

குரலின் அடையாளத்தில் உடல் நடுங்க திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.. அவள் பின் நின்று கொண்டிருந்தவன் ஆர்யனே தான்..

“இந்த நேரத்தில் இங்கே எப்படி..? டிரெயினில் வந்தாயா..? ஊருக்கு போகிறாயா..? எந்த ஊருக்கு..?” படபடவென கேள்விகளை அடுக்கியவனது பார்வை ஆர்வத்துடன் அவள் முகமெங்கும் ஒற்றி எடுத்தது.

இவன் இங்கே எப்படி வந்தான்..? என்னை பாலோ செய்கிறானா..? எதற்காக.. ?ஆராத்யா பாதங்களை பின்னால் எடுத்து வைத்து பின்னடைய தொடங்கினாள்..

“உனக்கு இது செமஸ்டர் டைமாக இருக்கே, இந்த நேரத்தில் எங்கே ஊருக்கு போகிறாய்..?” குளவியாய் குடைந்தன அவன் கேள்விகள்..

முகமெங்கும் வியர்க்க மெல்ல நகர்ந்தபடி இருந்தவளைப் பார்த்ததும் அவன் முகபாவம் மாறியது.. கருணையாய் மின்னியது..

“பயப்பட வேண்டாம்டா.. சும்மாதான் கேட்டேன்.. உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்..” ஆறுதல் சொன்னதோடு லேசாக அவனது கையை வேறு அவள் புறம் நீட்ட, ஆராத்யாவிற்கு வீலென கத்த வேண்டும் போலிருந்தது..

எதுவுமே நடக்காதது போல இவன் எவ்வளவு இயல்பாக பேசுகிறான்..? அப்போது அன்று இவன் வீட்டில் நடந்ததெல்லாம் இவனுக்கு மிகச் சாதாரணமானது.. அடிக்கடி நடப்பவைகள் சாதாரண மானவைகளாகத்தானே தெரியும்.. நீண்ட அவன் கரத்தின் நக நுனி கூடத் தன் மீது பட்டுவிடக் கூடாது என்ற ஜாக்கிரதைத் தனத்துடன் பின்வாங்கி கிட்டத்தட்ட ஓடினாள்..

அதே நேரம் அந்த கடைக்காரர்.. “இந்தாங்கள்..” என்று அவள் கேட்ட கூல்ட்ரிங்சை நீட்ட,

“வேண்டாம்..” என்றபடி ஓடிப் போய் புரெயினினுள் ஏறிக் கொண்டு, வேகமாக தனது கம்பார்ட்மென்டிற்கு வந்து தன் இடத்தில் அமர்ந்து பெருமூச்சு விட்டாள்..

“இந்தா ஆராத்யா..” சன்னல் வழியாக அவள் கேட்டிருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டில் நீட்டப்பட்டது.. வெளியே நின்றிருந்தவன் ஆர்யன்..

“எனக்கு வேண்டாம்.. நீங்கள் போங்க..” எதிரே தூங்கிக் கொண்டிருந்த அம்மாவிற்கு கேட்க கூடாதென தனது குரலைக் குறைத்தே பேசினாள்..

“இதை வாங்கிக் கொள்.. போய் விடுகிறேன்..” அவள் கையில் குளிர்பானத்தை திணித்தவன்..

கண்களில் டிரெயினை அளந்தான்..

“நாகர்கோவிலுக்கா போகிறாய்..?”

“இ… இல்லை.. அ.. அங்கே இல்லை.. வே.. வேறு ஊர்.. அ.. அது.. வந்து திருநெல்வேலி.. ஆங் அங்கே தான் போகிறேன்..” உளறிக் கொட்டினாள்..

பளீரிட்ட விழிகளுடன் அவன் அவளது தடுமாற்றத்தை வேடிக்கை பார்த்தான்.. பின் அழகாக புன்னகைத்தான்..

“ரிலாக்ஸ் ஆராத்யா.. நீ நாகர்கோவிலுக்கு இல்லையில்லை திருநெல்வேலிக்கு போய்விட்டு சென்னைக்கு வா.. நாம் நிறைய பேச வேண்டியதிருக்கிறது..”

டிரெயினின் சன்னலருகே முகத்தை கொண்டு வந்தபடி அவன் சொன்ன வார்த்தைகள் ஆராத்யாவினுள் கலவரத்தை உண்டாக்கியது..

“எனக்கு பேச ஒன்றுமில்லை.. நான் வரமாட்டேன்..” ஆராத்யா பதற்றமாய் பேசிக் கொண்டிருந்த போதே டிரெயின் நகரத் தொடங்க அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள்..

போய் விடுவான் என நினைத்ததற்கு மாறாக டிரெயினோடு சேர்ந்து நான்கெட்டு நடந்த ஆர்யன்..

“இந்த டிரெயின் திருநெல்வேலி போகிறதா ஆரா..?” கேட்டு விட்டு நின்று விட்டான்.. கையசைத்து அவளுக்கு விடை கொடுத்தான்.

இந்த டிரெயின் திருநெல்வேலி வழியாக போகுமா.. போகாதா..? ஆராத்யா குழப்பத்தில் விழுந்தாள்.. அதன் பிறகு விடியும் வரை அவள் சிறிது கூட கண் மூடவில்லை.

-(கனா தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...