காலச்சக்கரம் சுழல்கிறது-23 || ‘நந்தா விளக்கு’ தந்த சுடர்விளக்கு ரமணன்
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.
சின்சியாரிட்டிக்கு மறுபெயர் சி.எம்.வி. ரமணன். இவர் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனியிலும் தன்னை ஒரு நடிகராக, எழுத்தாளராகப் பதிவு செய்து கொண்ட பண்பாளர். பி.ஏ பட்டதாரி. பல்வேறு அமைப்புகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
ஒரு பள்ளியில் நிரந்தரப் பணி என்றதும் அதில் கண்ணும் கருத்துமாக இருந்து பணியாற்றியபோது, அதே பள்ளியில் பணிபுரிந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு குழந்தைகள் பிறந்தன. மகன் செகந்திராபாத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் சிறிது காலம் மகனோடு இருந்து வந்தார். மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
பட்டப்படிப்பு படித்திருந்ததால் அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து வந்தது ஒரு வாய்ப்பு. அங்கு பிரின்ஸ்பால் பதவியில் அமர்ந்த இவர் அங்கு படிக்கும் தொழில்நுட்பக் கல்வி கற்க வந்த மாணவர்களுக்கு எல்லாம் ஒரு நல்ல அட்வைஸ்ராகத் திகழ்ந்தார்.
இன்ஸ்டிடியூட் பணியைச் சிரமேற்கொண்டு செய்து கொண்டிருக்கும்போதே இயல், இசை, நாடகத் தாக்கம் கொண்ட இவர், கோல்டன் ஸ்டேஜ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தன் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினார். பசும்பொன், கற்கண்டு, போன்ற நாடகங்களை எழுதி அரங்கேற்றினார். அதில் பிரேம் ஆனந்த், வலம்புரி நாகராஜன், ஜி.ஆர். சந்திரன், ராமதாஸ், சரஸ்வதி போன்ற நடிகர்கள் எல்லாம் கலந்துகொண்டு நடித்தார்கள்.
நாடகங்களும் வெற்றி பெற்றன. தொழில் முறை நாடகக் கலைஞர்களையும், தன் குழுவில் சேர்த்து, தான் இயக்கும் நாடகங்களில் நடிக்க வைத்து அவர்களுக்குரிய சம்பளமும் தந்ததோடு அவர்களது திறமைகளை வெளி உலகத்திற்கு உணர்த்திய விசால மனம் கொண்ட சி.எம்.வி. ரமணன் 1988ஆம் ஆண்டு நம் அனைவரது மரியாதைக்கும் உரிய பாரதி கலைஞர், திரைப்பட நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கிருஷ்ணமணி அவர்கள் எழுதிய ‘நந்தா விளக்கு’ எனும் கதைக்கு உரையாடல்கள் எழுதி, இயக்கவும் செய்து நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி சேவா ஸ்டேஜ் ஸ்தாபனத்திற்குப் பெருமை சேர்த்தவர்.
நாடகத்தில் ஏ.கே.வீரசாமி, எம்.ஜி.முருகன், சேவா ஸ்டேஜ் துரை எனும் நான் பூவிலங்கு மோகன், டி.எஸ்.ஆனந்தி ஆகியோர் நடித்திருந்தோம்.
நாடகத்தில் நடிகை ரஞ்சனா தேவி பாத்திரத்தில் டி.எஸ்.ஆனந்தி நடிக்க கதாநாயகனாக பூவிலங்கு மோகன் நடித்தார். அதில் ஏ.கே.வீராச்சாமி, எம்.ஜி.முருகன் ஆகியோர் கெட்டவர்களாக ஹீரோவுக்கு எதிரிகளாக நடித்திருந்தார்கள்.
நான் அதில் ஒரு ஹரிஜன் பாத்திரத்தில் நடித்திருந்தேன். தீண்டத்தகாதவன், தரையில் கூட உட்காரக் கூடாது என்பது சட்டம். அப்போது வீராச்சாமியும், முருகனும் “நாங்கள் இந்தக் கிராமத்தை முன்னேற்றப் பாடுபடுகிறோம். நாங்கள் செய்த நல்ல காரியங்களை எல்லாம் இப்போது பட்டியல் போட்டு சொல்லப் போகிறோம். நீங்கள் எல்லாம் கைதட்ட வேண்டும்” என்று சொன்னார். ஆனால் அவர்கள் சொன்ன விஷயங்களுக்கு யாருமே கைத்தட்டவில்லை.
“கோவில் கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்த எல்லோரிடமும் பணம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் யாருமே பணம் தரவில்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுறோம் தெரியுமா?” என்றதும்,
உடனே ஹீரோவின் நண்பன் ஒருவன் எழுந்து “நீங்க ஏன் சார் கஷ்டப்படுறீங்க. நடிகை ரஞ்சனா தேவிகிட்ட போய் கும்பாபிஷேக விஷயத்தைச் சொன்னா, அது உண்மைன்னு தெரிஞ்சா உடனே ஒரு பிளாங்க் செக் கொடுத்துடுவாங்களே, அதுல நீங்க எவ்வளவு பணம் வேணுமோ அதை எழுதிக்கலாமே.”
“அதெல்லாம் சரிதான்ப்பா.. இருந்தாலும் ஒரு நடிகை கிட்ட போயி கும்பாபிஷேகம் நடத்த பணம் கேட்டா, அது நல்லாவா இருக்கும்.? அது எப்படி எப்படி சம்பாதிச்ச பணமோ?” என்று வீராசாமி சொன்னதும் ஹீரோவின் நண்பன் ஒருவன் எழுந்து!
“ஏங்க அவங்க பணமும் ரிசர்வ் பேங்க் பணம் தானே” என்றதும் அரிஜன் வேடத்தில் இருந்த நான் எழுந்து கைதட்டினேன்.
“இப்ப நீ எதுக்கு கைதட்டின?” என்று வீராசாமி கேட்டதும் “நல்ல விஷயங்கள் சொல்லும்போது கை தட்டணும்னு நீங்கதானே சொன்னீங்க.
இப்ப அந்த பையன் சொன்னான் பாத்தீங்களா? அவங்க பணமும் ரிசர்வ் பேங்க் பணம் தானேன்னு அது நல்ல விஷயம். எப்படிங்க கை தட்டாமல் இருக்க முடியும். மனசாட்சி உள்ள எல்லாருமே இதுக்கு கை தட்ட தான் செய்வாங்க” என்று நான் சொன்னதும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த மக்களும் எழுந்து கைதட்டினார்கள்.
நாடகம் முடிந்ததும் சி.எம்.வி. ரமணன், “துரை, நீ ஒரு பெரிய நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல கிரியேட்டர்” என்று எல்லோர் முன்னிலையிலும் என்னைப் பாராட்டிக் கட்டித் தழுவினார். ஒரு பிலிம் இன்ஸ்டியூட் பிரின்ஸ்பாலிடமிருந்து எனக்குக் கிடைத்த அங்கீகாரம் அது.
‘நந்தா விளக்கு’ எனும் இந்த நாடகம் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் முதல் நினைவு நாளில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சி.எம்.வி. ரமணன் ஒரு பாஸ்ட் ரைடர். எந்த சப்ஜெக்ட்டாக இருந்தாலும் அதை நல்ல முறையில் எழுதும் ஆற்றல் உள்ளவர்.
நான் என்றென்றும் போற்றி புகழ்வது கலைமாமணி சி.எம்.வி ரமணன் அவர்களைத்தான்.