இசை ராசனின் யுவராசன் ( யுவன் சங்கர் ராஜா ) பிறந்த நாள்…

 இசை ராசனின் யுவராசன் ( யுவன் சங்கர் ராஜா ) பிறந்த நாள்…

“மதுப்பழக்கம், புகைப்பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை… அதான் யுவன் பாட்டு கேக்குறேனே அதுபோதாதா…” எப்போதும் என் நண்பர்களிடம் நான் விளையாட்டாகச் சொல்லும் வசனம் இது. விளையாட்டாக இருந்தாலும் ஒரு வகையில் இது உண்மைதான். அத்தனை போதையானதல்லவா யுவனின் மெட்டுக்கள். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பியானோவுக்கும், வயலினுக்கும், மின்-கிட்டாருக்கும் இடையே படுக்கைவிரித்து சில லட்சம் காதலர்களை, பல லட்சம் இளைஞர்களை அழவைத்து, சிரிக்கவைத்து, சிலிர்க்கவைத்து, உறங்கவைத்து, கிறங்கவைக்கும் பக்கவிளைவில்லாத போதை மருந்தாகவே மாறியிருக்கிறது யுவனின் இசை.

அந்தப் பல லட்சம் பேரில் பெரும்பகுதியினரின் அன்றாடப் புலம்பல் ஏனோ அவருக்கு இதுவரை ஒரு பெரும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றுதான் இருக்கிறது. “ச்சே… ‘தங்கமீன்கள்’ பாட்டுக்கு ஒரு விருது கிடைச்சிருக்கணும்…”, “என்னடா அவார்டு கமிட்டி இது… ‘பேரன்பு’ பாட்டு, ‘சூப்பர் டீலக்ஸ்’ பி.ஜி.எம் எல்லாம் சரியா கேட்டாங்களா இல்லையா?”, “தேசிய விருதுக்குக் கொடுத்துவைக்கலபா, யுவன் கைபடுறதுக்கு” என்றெல்லாம் இந்தப் புலம்பல்களுக்குப் பல வடிவங்களுண்டு. ஆனால் யுவன் இந்தப் புலம்பல்களையே அன்பின் வெளிப்பாடாகவும், விருதாகவும் கருதிக்கொண்டு, மீண்டும் பல போதை மருந்துகளை இசையமைத்துக்கொண்டிருக்கிறார். ” I Will be there for You ” என எப்போதும் அவர் குரலில் அது ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

யுவனின் பாடல்கள் இப்படி கிறங்கடிப்பதற்கான காரணம், சரியான இசைக்கருவியின் ஒலியை, அதற்கே உரிய இடத்தில் பொருத்துவதால்தான். குறிப்பாக வயலின் ஓசை. தொடக்க கால யுவன் பாடல்களில் வயலினின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ‘மன்மதன்’ படத்தில் ‘மன்மதனே நீ’ பாடலில் முன்னிசையும் ‘காதல் வளர்த்தேன்’ பாடலின் இரண்டாவது சரணத்துக்கு முன் வரும் இடையிசையும், ஒரு தேர்ந்தெடுத்த வயலின் ஆர்க்கஸ்ட்ரேஷன் அமைப்பைக் கையாளும் வல்லமை படைத்தவர், யுவன் என்பதற்கான சான்று. இந்த வயலின் ஆதிக்கம், ‘சிவா மனசுல சக்தி’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’ எனப் பல படங்களில் மேலோங்கி நிற்கும்.

இடையில் சில காலம் அவ்வளவு வயலின் சத்தங்கள் இல்லாமல் யுவனின் பாடல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சியாலும், டெக்னோ இசை வடிவத்தாலும் வயலினுக்கு ஒரு இடைவேளை கொடுத்திருந்த யுவன், மீண்டும் தன் சொந்தத் தயாரிப்பான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் வயலினுக்கென ஒரு தனி இசைத்துணுக்கையே உருவாக்கியிருந்தார். “ஹை ஆன் லவ்” பாடலின் முன்னிசை மட்டுமே அந்தப் படத்தின் இசைக் கோர்வையில் தனியாக வெளியானது. வயலினுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததே, யுவன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கவர்ச்சி அதிகமாக இருப்பதன் முதன்மையான காரணம்.

அடுத்தக் காரணம், பியானோ. யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஒரு நாள் முழுக்க நீங்கள் செலவழிக்கலாம். அன்று முழுக்க அவர் வாசிக்க, நீங்கள் உங்களுடன் ஒரேயொரு இசைக்கருவியை எடுத்துச்செல்லலாம் என்றால் கண்டிப்பாக என் தேர்வு பியானோவாகத்தான் இருக்கும். யுவனுக்கு எத்தனைக் கருவிகளை வாசிக்கத்தெரியும் எனத் தெரியவில்லை. ஆனால் அவருடைய பியானோ கையாளுதலுக்கு ஒரு தனி ரசிகர்கூட்டமே இருக்கிறது. பல பாடல்களின் முன்னிசையை, பியானோவைக் கொண்டே தொடங்குவார் யுவன். அந்த பியானோ ஒலிதான் அடுத்த ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் ஒலிக்கவிருக்கும் பாடலின் உணர்வுகளுக்கான அடித்தளமாக அமையும். உதாரணம் ‘7ஜி ரெயின்போ காலணி’யின் ‘நினைத்து நினைத்து’. முதல் 20 நொடிகளுக்கு வரும் பியானோ இசை அந்த மொத்தப் பாடலுக்கான சோகத்தையும் ரசிகர்களிடம் கடத்திவிடும். பின்னர் பாடலின் இடையிசையில் வயலின் கோர்வை வந்து சோகத்தை இன்னமும் அதிகரித்து, கேட்பவர்களை அழவைக்கும்.

பொதுவாக இப்படியொரு பாடலைச் சுட்டிக்காட்டி சொல்லும்போது இது செல்வராகவன் படம், ராம் படம், வெங்கட் பிரபு படம் என ஏதோவொரு காரணம் சொல்லி “அவங்களுக்கெல்லாம் யுவன் நல்லாத்தான் பாட்டு போடுவாரு” என பொதுமைபடுத்திவிடுவார்கள். ஆனால், யுவனின் பியானோவும், வயலினும் என்றுமே அப்படியொரு வட்டத்துக்குள் யுவனால் அடைக்கப்படவில்லை. ‘சிவா மனசுல சக்தி’, இயக்குநர் ராஜேஷுக்கு முதல் திரைப்படம். இன்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ காதல் தோல்வியில் இருப்பவர்களுக்குத் தேசிய கீதமாகத்தான் இருக்கிறது – அதே வயலின் அமைப்புடன். அதுகூட பரவாயில்லை, கடந்த 2011-ம் ஆண்டு ‘பேசு’ என்ற படத்தின் பாடல்கள் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிற இரவுகள்’ பாடலை, இதற்கு முன் கேட்டிருப்பவர்களுக்குத் தெரியும், யுவன் பியானோ யாரும் வளைந்து கொடுக்காது என காதல் தோல்வி பாடல்களில் பியானோவின் கலவை அவ்வளவு இதமாக இருக்கும் என்பதை ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்திலேயே காட்டிவிட்டார் யுவன். அந்தப் பாடலின் முதல் சரணத்துக்கு முன் இடம்பெறும் இடையிசையில் பியானோவும் வயலினும் இணைந்து ஒரு மென் சோகத்தை இழையோடவிடும். அந்த இணை, பாடலின் இறுதிவரை தொடரும். அதுவே அந்தப் பாடல், இத்தனை ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்பதற்கான காரணம் என்றே சொல்லலாம்.

இதேபோன்ற கலவை இதே அளவுக்கு ஆழமாக இருக்கும் மற்றொரு பாடல் ‘யாரடி நீ மோகினி’யின் ‘வெண்மேகம் பெண்ணாக’. அதன் இடையிசைத் துணுக்குகள் மட்டுமல்லாது, இரண்டு சரணங்களிலும் வரிகளுக்குப் பின் இழையோடும் இசையைக் கவனித்துப் பாருங்கள். ‘மஞ்சள் வெயில் நீ… மின்னல் ஒளி நீ’ என்ற வரிகள் முடியும்போதெல்லாம் அரை நொடிக்கு வயலின் ஓசை பின்தொடரும். அந்தப் பாடலைப் பாடும் கதாபாத்திரத்துக்கு ஒரு சொல்லமுடியாத ஏக்கமும், வலியும் இருக்கும். சுற்றி அத்தனை பேர் இருக்கும்போதும், யாரிடமும் வெளிப்படையாக தன் வலியைப் பகிரமுடியாத ஒரு சூழல். அந்த பாத்திரத்தின் இப்படிப்பட்ட இக்கட்டை, அந்தப் பாடலில் பியானோவை வைத்தே உணர்த்திவிடுவார், யுவன்.

அதனால், பியானோவும், வயலினும் மட்டும்தான் யுவனுக்குப் பயன்படுத்தத் தெரியும் என்றும் நினைத்துவிடவேண்டாம். கிட்டார் மற்றும் புல்லாங்குழல் கோபித்துக்கொள்ளுமில்லையா. அதிலும் புல்லாங்குழல் இல்லாமல் இதம் கொடுத்துவிட முடியுமா? ‘நந்தா’வின் ‘முன் பனியா’ தொடங்கி ‘நேர்கொண்ட பார்வை’யின் ‘வானில் இருள்’ வரை பல பாடல்களின் முன்னிசையை புல்லாங்குழல் கொண்டே வடிவமைத்திருப்பிருப்பார், யுவன். இளையராஜா, தன் பாடல்களில் புல்லாங்குழலின் ஒலியை தனக்கேற்ப வெவ்வேறு சுருதிகளுக்கு மாற்றி இசையை உருவாக்குவார். ஏ.ஆர். ரஹ்மான், புல்லாங்குழலின் காற்றை, தேவையான ஒலிக்கு ஏற்ப பயன்படுத்தியிருப்பார். யுவன் பாடல்களில் புல்லாங்குழலில் ஓசை, காற்று என இரண்டுமே கலந்து ஒரு புதுமையான கலவையாக இருக்கும். ‘கற்றது தமிழ்’ படத்தின் ‘பரபர பட்டாம்பூச்சி’ பாடலில் நிறைய இடங்களில், வரிகளை இந்த இரண்டும் கலந்த புல்லாங்குழல் ஓசை பின்தொடர்வதைக் காணலாம்.

அதேபோல கிட்டார். பொதுவாகவே கிட்டார் வைத்துத் தொடங்கும் எந்த இசையமைப்பாளரின் பாடலும் இன்பச்சுவை மிகுதியில் இருக்கும். யுவன் பாடல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ‘பையா’ படத்தின் ‘துளி துளி’ பாடல் அந்த வகையில் ஒரு க்ளாசிக் என்பேன். ஆனால் கிட்டாரை வைத்து சில புது முயற்சிகளைச் செய்திருக்கிறார் யுவன். அதில் முக்கியமானது ‘பானா காத்தாடி’யின் ‘என் நெஞ்சில்’ பாடல். பாடலின் தொடக்கம் கிட்டாரில் அமைந்திருக்கும். அப்படியொரு சோகமான கிட்டார் தொடக்கத்தை இதுவரை தமிழில் யாருமே முன்னிசையாகப் பயன்படுத்தியதில்லை. அதனுடன் ஒரு மாறுபட்ட பர்க்கஷன் ஒலியும் பாடல் முழுக்க இடம்பெற்றிருக்கும். அந்த இரண்டும் கலந்த கலவையே அன்றைய தேதிக்குத் தமிழுக்குப் புதிது.

அதே வரிசையில் இந்த ஆண்டு வெளியான ‘பேரன்பு’ படத்தின் ‘செத்து போச்சு மனசு’ பாடலில் இடம்பெறும் கிட்டார் இசை. பாடல் முழுக்க வெறும் நான்கு நோட்டுகளில் கிட்டார் மூலம் அவ்வளவு சோகத்தைப் பதிவு செய்திருப்பார் யுவன். அதன் இடையிசையில் ஷெனாய் மற்றும் வீணை போன்ற கருவிகளின் ஒலிகளும் இந்த கிட்டாருடன் கலக்கும். பொதுவாக ஷெனாயின் ஒலியை இந்துஸ்தானி இசையில்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அதைக் கிட்டார், மற்றும் வீணையுடன் இணைத்து ஒரு சோகமான தமிழ்ப் பாடலில் பயன்படுத்தியதே, அந்தப் பாடல் கொஞ்சம் வேறுபட்ட அனுபவத்தைத் தரக்காரணம்.

ஒரு இசையமைப்பாளரின் பலம் இரண்டு விதங்களில் வெளிப்படும். தன்னைச் சுற்றி ஆயிரம் இசைக்கருவிகள் இருந்தாலும் ஒருப் பாடலுக்குத் தேவையான கருவிகளை மட்டுமே அதற்காகப் பயன்படுத்துவது. மற்றொன்று குறைந்த அளவில் இசைக் கருவிகள் இருந்தாலும் அதைவைத்தே பாடலுக்கான எமோஷன்களைக் கொட்டித்தீர்ப்பது. யுவனின் சிறப்பு, அவர் இந்த இரண்டிலுமே வல்லவர். அதனாலேயே அவரால் ‘சரோஜா’, ‘அஞ்சான்’, ‘என்.ஜி.கே’ என பணம் படைத்த படங்கள் முதல் ‘சென்னை 28’, ‘துள்ளுவதோ இளமை’, ‘பேசு’ போன்ற படங்கள் வரை எல்லா இடங்களிலும் எளிதில் பொருந்திக்கொள்ள முடிகிறது. ஏன், இன்னும் சொல்லப்போனால், ‘பலூன்’, ‘பியார் பிரேமா காதல்’ போன்ற பல படங்களுக்கு இன்றும் இவர்தானே முதல் ஹீரோ.

பிற இசையமைப்பாளர்கள் செய்யாத சிலவற்றை யுவன் கொஞ்சம் துணிச்சலாகவே செய்திருக்கிறார். பொதுவாக சாரங்கி போன்ற ஒரு இசைக்கருவியை துக்கம் நிறைந்த பாடல்களில் மட்டுமே அதிகமாக பயன்படுத்துவார்கள். அதனால், இசைக் கச்சேரிகள், தலைவர்களின் மரணம் போன்ற நிகழ்வுகளின்போது மட்டுமே பெரிதளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. இளையராஜாவும், ரஹ்மானும் கூட மிகக் குறைவாகவே சாரங்கியைத் தங்கள் பாடல்களில் சேர்த்திருக்கின்றனர். ஆனால் யுவன் இதிலும் தனித்தே நிற்கிறார். ‘யோகி’ படத்தின் ஒரு முழு தீமையே சாரங்கியில் இசையமைத்திருப்பார். மெயின்ஸ்ட்ரீம் திரைப்பாடல்களில் சாரங்கியை இவ்வளவு அதிகமாகப் பயன்படுத்திய இசையமைப்பாளர் யுவன் மட்டுமே.

இது தொடங்கியது ‘யோகி’யில் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே நா முத்துக்குமார் ஒரு முறை யுவனின் சாரங்கி பயன்பாட்டைக் குறித்துப் பேசியிருந்தார். ‘வாமனன்’ பாடத்துக்காக அவர் எழுதியிருந்த ‘ஒரு தேவதை’ என்ற மென்சோகம் சூழ்ந்த காதல் பாடலில் யுவன் சாரங்கியை பாடலின் முன்னிசை, இரண்டு இடையிசைத் துணுக்குகள் மற்றும் ஒரு பின்னிசைத் துணுக்கு என நான்கு இடத்தில் பயன்படுத்தியிருப்பார். தான் எழுதியிருந்த சோகமான வரிகளை மேலும் சோகமாக்கிவிட்டார் யுவன் எனக் கூறியிருந்தார் முத்துக்குமார்.

இளையராஜாவுக்குப் பிறகு பாடல்களில் இவ்வளவு உண்மைத் தன்மை கொண்டு, மண்ணின் சத்தங்களையும் மாற்றாமல் நீண்டகாலத்துக்கு, திரைத்துறையில் திடமாக நிற்கும் இசையமைப்பாளர்களில், யுவன் முதன்மையானவர். தொழில்நுட்பத்தால் அதீத பரிணாம வளர்ச்சியடைந்து மாறியிருக்கும் தமிழ்த் திரையுலகில், அவருக்குப் பின் இனி மீண்டும் ஒரு மண்மணம் மாறாத இசையை உருவாக்கும் கலைஞன் வருவாரா என்பது சந்தேகமே. “இருபது வருடம் உனைப்போல் எவனும் என்னை மயக்கவில்லை…” ஒரு இசை கலைஞருக்கு, அவர் இசையமைத்த பாடலின் வரியை எடுத்தே ஒரு வாழ்த்துரை எழுதவேண்டும் என நீங்கள் என்னிடம் கூறினால், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு நான் எழுதும் வரி இதுவாகத்தான் இருக்கும்.  இன்று 44 வது வயதை நிறைவுசெய்யும் யுவன், தன் வாழ்வின் பாதிக்கும் அதிகமான நாள்களை தன் இசையால், குரலால் கட்டிப்போட்டு மயக்கிவைப்பதிலேயே செலவழித்துள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்கு இப்படி போதையிலேயே வைத்திருங்கள் யுவன். பிறந்தநாள் வாழ்த்துகள்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...