எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 7 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 7 | ஆர்.சுமதி

 

அத்தியாயம் – 7

 “நேத்து நான் பார்ட்டியில அளவுக்கதிகமா குடிச்சேனே.. அதனால என் மேல உனக்கு கோபமா?”

காரை செலுத்தியபடியே கேட்டான் குமணன். சென்னையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

“நீங்க குடிச்சது எனக்கு கோபம் இல்லை. குடிப்பழக்கமே இல்லைன்னு பொய் சொன்னிங்களே அதான் எனக்கு கோபம்”

“கோதை சத்தியமா நான் குடிச்சதே இல்லை. அந்த டேஸ்ட் கூட எனக்குத் தெரியாது. நேத்துதான் நான் முதல் தடவையா குடிச்சேன்.”

“முதல் தடவையா குடிச்சவர் மாதிரியா நேத்து நீங்க குடிச்சிங்க? அதிலேயே ஊறிப்போய் அடிக்ட் ஆனவர் மாதிரி குடிச்சிங்க. முதன் முதலா குடிக்கிறவங்க இப்படி குடிக்க மாட்டாங்க”

“அப்ப நீ நம்பலைதானே”

“நான் நம்பறது இருக்கட்டும். அங்க இருந்தவங்க யாருமே நம்ப மாட்டாங்க. உங்களை அங்கிருந்து ரூமுக்கு கூட்டிக்கிட்டு போறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும். நீங்க புதுசா குடிச்சிருந்தா அவ்வளவு குடிச்சதுக்கு வாந்தி எடுத்திருப்பீங்க. ஹாஸ்பிட்ல கொண்டு போயிருக்கனும். ஆனா..நீங்க காலம் காலமா குடிச்ச குடிகாரன் மாதிரி நல்லா தூங்கிட்டிங்க. குடிச்ச ட்ரிங்க்ஸ் உங்க குடலை ஒண்ணுமே செய்யலையே அது எப்படி? “

“அதான் எனக்கும் தெரியலை. பட் நான் இதுக்கு முன் குடிச்சதில்லை. சத்தியம்”

அதற்குமேல் பேசப் பிடிக்காதவளைப் போல் அந்த பேச்சையே மாற்ற விரும்புவதைப் போல் ஏதாவது பாட்டு வைக்கலாம் என்று பாட்டை ஒலிக்கவிட்டாள்.

மனதுக்கு ரம்மியமான பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. பாடல் சூழ்நிலையின் இறுக்கத்தை குறைத்தது. மனதை லேசாக்கியது. மூன்றாவதாக அந்தப் பாடல் ஒலித்தது.

வசந்த ஊஞ்சலிலே அசைந்த பூங்கொடியே

உதிர்ந்த மாயம் என்ன? உன் இதய சோகம் என்ன?

நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?

நாதியில்லை தேவி இல்லை நானும் வாழ்வை ரசிப்பேனா..?

நினைவு வெள்ளம் பெருகி வர

நெருப்பெனவே சுடுகிறது

படுக்கை விரித்துப் போட்டேன் அதில்

முள்ளாய் அவளின் நினைவு.

பாழும் உலகை வெறுத்தேன்

அதில் ஏனோ இன்னும் உயிரு….

பாடல் வரிகள், பாடும் குரல் அதில் இழையோடிய சோகம் உயிரை உருக்க…அப்படியே கண்களை மூடி சாய்ந்திருந்தாள் கோதை. நெஞ்சை பிசைவதைப்போன்ற உணர்வு…

அவளையும் மீறி அவளுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. எப்பொழுது பாட்டு முடிந்தது என்று தெரியவில்லை. வெகுநேரம் வரை கண்களை மூடிசாய்ந்து அமர்ந்தவள் தீடீரென கார் நிற்பதை உணர்ந்தவளாய் கண்களைத் திறந்தாள்.

திடுக்கிட்டாள். கார் நிறுத்தப்பட்டு இருந்தது. ஏன்? புரியாமல் குமணன் பக்கம் திரும்பியவள் திடுக்கிட்டாள்.

குமணன் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கின் மேல் சாய்ந்திருந்தான்.

என்னாச்சு இவனுக்கு? காரை நிறுத்திவிட்டு தூங்குகிறானா?  தோளைத் தொட்டு அசைத்தாள்.

அவளுடைய அசைப்பிற்கு நிமிர்ந்தவனைப் பார்த்து அதிர்ந்தாள்.

முகத்தில் சிவப்பு நிற ஒளியைப் பாய்ச்சியதைப்போல்…சிவந்து…கண்கள்..அந்தக் கண்கள்…நீர் நிரம்பி வழிந்துக்கொண்டிருந்தது.

“என்னங்க என்னங்க..” அவள் உசுப்ப திடீரென பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினான்.

அம்சவேணி கோயிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். அர்ச்சனைக் கூடையில் எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒரு முறை சரிபார்த்துக் கொண்டு கூடையை எடுத்துக்கொண்டு நகரமுற்ப்பட்டபோது கோதை வந்தாள்.

“அத்தை கோவிலுக்கு நானும் வர்றேனே.”

“குமணன் வர்ற நேரமாச்சே. அவன் வர்ற நேரத்துல நீ வீட்ல இல்லைன்னா எப்படிம்மா?”

“அவர் வர லேட்டாகும்னு சொன்னார் அத்தை. ஏதோ மீட்டிங் இருக்காம்”

“ சரி அப்படின்னா வா. அவன் வர்றதுக்குள்ள நாம வந்திடலாம்”

இருவரும் காரில் ஏறினர். இருபது நிமிடத்தில் கோவிலை வந்தடைந்தனர். கோவிலின் அமைதியும் கற்பூரம் கலந்து வீசிய காற்றும் தெய்வீகத்தை நெஞ்சுநிறைய நிறைத்ததைப் போல் இருந்தது.  சன்னதிக்கு செல்லாமலேயே சாந்திக்கிடைத்ததைப்போல் இருந்தது. அர்ச்சனை செய்யாமலேயே அமைதி கிடைத்ததைப்போல் இருந்தது.  வணங்காமலேயே வரம் கிடைத்ததைப் போலிருந்தது.

 ஆனாலும் அர்ச்சனை செய்துவிட்டு வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றிவிட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர்.

கடந்து செல்லும் பெண்களையே பார்த்துக்கொண்டிருந்த மாமியாரைப் பார்த்தாள் கோதை. ‘கேட்கலாமா இவரிடம்’ தன்னையே கேட்டுக்கொண்டபின் கேட்பதென முடிவு செய்தாள்.

“அத்தை..”

“சொல்லும்மா”

“நான் உங்கக்கிட்ட ஒண்ணு கேட்கனும்”

“கேளும்மா”

“ உங்க பிள்ளை குடிப்பாரா?”

“ஏம்மா உனக்கு திடீர்னு இப்படி ஒரு சந்தேகம். “

“சொல்லுங்க”

“குடிக்கமாட்டான்ம்மா”

“இதை நீங்க எனக்காக சொல்றிங்களா?”

“நான் ஏன் பொய் சொல்லனும்? என் பிள்ளையை நான் அப்படி வளர்க்கலை. “

“அப்படித்தான் அவரும் சொன்னார் ஆனா…” என்று ஆரம்பித்து கோவா ஹோட்டலில் நடந்ததை சொன்னாள். கேட்க கேட்க அம்சவேணியின் முகம் இருளடைந்தது.

“அது மட்டும் இல்லை, திரும்பி வரும்போது கார்ல ஒரு சோகப் பாட்டு ஓடிச்சி. லவ் ஃபெயிலியர் சாங். அதைக்கேட்டதும்  அவர் ஒரு மாதிரியாயிட்டார். அந்த மாதிரி பாட்டைக் கேட்கும்போது அந்த துன்பத்தை நாமே அனுபவிக்கிற மாதிரி ஒரு உணர்வு உண்டாகும். அந்த சோகம் நமக்கே ஏற்பட்டமாதிரி இருக்கும். பட் அது கடந்து போன பின்னாடி நாம சகஜ நிலைக்கு வந்திடுவோம். அதுதான் இயற்கை. ஆனா…அவர் அப்படி இல்லை. அந்த பாட்டைக்கேட்டதுமே காரை நிறுத்திட்டார். அப்படியே ஸ்டியரிங் மேல கவிழ்ந்து அழ ஆரம்பிச்சுட்டார். எனக்கு ஒரே அதிர்ச்சியாயிட்டு. அழுகைன்னா சாதாரண அழுகை இல்லை. யாரோ செத்துட்ட மாதிரி ரொம்ப நாளா அடக்கி வச்ச வேதனை தீருற மாதிரி பெரிசா கத்தி கதறி அவர் அழுதார். என்னால அவரை கன்ட்ரோல் பண்ணவே முடியலை. ஒரு..ஆண்பிள்ளை அப்படி அழுது நான் பார்த்ததே இல்லை. அவர் நார்மலா இல்லை. அவருக்குள்ள என்னவோ இருக்கு. சொல்லுங்க அவருக்கு என்ன?”

அம்சவேணியின் முகம் பேயறைந்ததைப் போல் ஆனது. கோவிலில் நின்றிருந்த சிலைகளில் அவளும் ஒரு சிலையானாள்.

கோதை அவளுடைய கையைப் பற்றி அசைத்தாள்.

“சொல்லுங்க அத்தை”

அவளுடைய உலுக்கலில் உணர்வு நிலைக்கு வந்த அம்சவேணி மெல்ல தலைகுனிந்தவாறே சொன்னாள்.

“குமணன்… கொஞ்ச நாளைக்கு முன்னாடி மனநோயாளியா இருந்தான்”

இதைக்கேட்டு பெரிதாக அதிர்ந்தாள் கோதை.

-(தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...