காத்து வாக்குல ரெண்டு காதல் – 7 | மணிபாரதி
அத்தியாயம் – 7
ராகவ் ஆபிஸ் பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திய போது, முழுவதுமாக தன் சக்தியை இழந்திருந்தான். அம்மா ஆசைப்படுவது போல் நடந்து விட்டால், பத்மாவிற்கு என்ன பதில் சொல்வது? அவ்வளவுதான். அவள் உயிரையே விட்டு விடுவாள். சும்மா இருந்த சங்கை இருவரும் ஊதி விட்டார்கள். இனி அதை நிறுத்த வேண்டும் என்றால், அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.. என்ன நடந்தாலும் பத்மாவை விட்டு கொடுக்கக் கூடாது.. அது பெரிய பாவம்.. அவன் யோசனையுடன் நடந்து வந்து, ஆபிஸ் படிக்கட்டில் ஏறினான். அப்போது நந்தினியும் உள்ளே நுழைந்தாள். “குட்மார்னிங் ராகவ்..“ என்றாள்.
“குட் மார்னிங்..“
“இப்படி ஒரு சந்தர்பம் அமையும்ன்னு நா கொஞ்சம் கூட எதிர் பார்க்கல..“
“நானும் எதிர் பார்க்கல..“
“அங்கிள் ஆண்டிய எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு..“
அவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
“ரொம்ப நாளைக்கு அப்புறம் நேத்துதான் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தேன் நான்..“
“நா இல்ல..“ என சொல்ல நினைத்தவன் அதை மறைத்து “அப்படியா..“ என்றான்.
“என்ன அப்படியான்னு கேக்குற.. அப்ப நம்ம ரெண்டு பேரோட ஃபேமிலியும் சந்திச்சதுல உனக்கு மகிழ்ச்சி இல்லையா..“
“நா அந்த அர்த்தத்துல அப்படியான்னு கேக்கல..“
“உனக்கு என் மேல இருக்குற கோபம் போகலன்னு நினைக்குறேன்..“
“அதெல்லாம் ஒண்ணுமில்ல..“
“அப்படியே இருந்தாலும் அதை பெரியவங்க முன்னால காட்டிக்காத.. வருத்தப்படுவாங்க..“
“அது கூடவா எனக்கு தெரியாது..“
“தாங்ஸ்..“
இருவரும், அவரவர் சீட் வர பிரிந்து சென்றார்கள். ராகவ் நேரே பத்மாவை தேடிப் போனான். அவள் அவனைப் பார்த்ததும் “உன்னைதான் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்..“ என்றாள்.
“எதுக்கு..“
“ரம்யா ஒரு ஹேன்ட் கர்ச்சீப் ரெடி பண்ணா.. அதை உன்கிட்ட குடுக்க சொல்லி குடுத்து விட்டுருக்கா..“ என்று கூறி தனது பேக்கிலிருந்து அந்த கர்ச்சீப்பை எடுத்துக் கொடுத்தாள்.
அதை வாங்கி பிரித்து பார்த்தான். அதில் “எங்கள் வீட்டு இளவரசனுக்கு – அன்பு பரிசு“ என எம்பிராயட்டரி செய்யப்பட்டிருந்தது. அதைப் படித்துப் பார்த்தவன் “நைஸ்..“ என்றான்.
“இதை ரெடி பண்றதுக்கு ரெண்டு நாள் முழுசா எடுத்துகிட்டா..“
“அவளுக்கு நா தாங்ஸ் சொன்னேன்னு சொல்லிடு பத்மா..“
“நீயே சொல்லிடு.. சந்தோஷப்படுவா..“ என்று கூறி தனது போனில் ரம்யாவின் நம்பரை போட்டுக் கொடுத்தாள். ரம்யா ஆன் பண்ணி “சொல்லுக்கா..“ என்றாள். பத்மா “ராகவ் பக்கத்துலதான் இருக்கான் பேசு..“ என்று கூறி போனை ராகவ்விடம் கொடுத்தாள். அவன் காதில் வைத்து “ஹலோ..“ என்றான். ரம்யா “ஹவ் ஆர் யூ அங்கிள்..“ என கேட்டாள்.
“ம் ஃபைன்.. நீ எப்படி இருக்க..“
“நல்லா இருக்கேன் அங்கிள்..“
“கர்ச்சீப் சூப்பர்..“
“அப்பாடா.. உங்களுக்கு புடிக்குமோ புடிக்காதோன்னு கவலைப்பட்டுகிட்டு இருந்தேன்.. இப்பதான் நிம்மதியா இருக்கு..“
“என்னோட கவலை இதை தொலைச்சுடாம பத்திரமா பாத்துக்கனுமேங்குறதுதான்..“
“என்ன அங்கிள் அப்படி சொல்றீங்க..“
“இல்ல, இதுக்கு முன்னால நிறைய கர்ச்சீப் தொலைச்சுருக்கேன்.. அதனாலதான் அப்படி சொன்னேன்.. இதை தொலைக்க மாட்டேன் கவலைப்படாத..“
“தாங்ஸ் அங்கிள்.. அப்புறம் இன்னொரு விஷயம்.. கம்மிங் சாட்டர் டே எனக்கு பர்த் டே.. நீங்க அவசியம் அதுல கலந்துக்கனும்..“
“கண்டிப்பா..“
“ஒகே அங்கிள் வச்சுடுறேன்..“
இருவரும் போனை கட் பண்ணினார்கள். பத்மா “அவ ஆசையா ரெடி பண்ணி குடுத்துருக்கா.. எனக்கு கூட இந்த மாதிரி ரெடி பண்ணிக் குடுத்தது இல்ல.. தொலைச்சுடாம பத்திரமா வச்சுக்கங்க..“ என்றாள்.
“ஷூயூர்..“ என்று கூறி “அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..“ என்றான்.
“சொல்லு..“
முதல் நாள் தனது அப்பா அம்மாவுடன் நந்தினி வீட்டிற்கு போய் வந்ததையும், தனது அப்பாவும் அவளுடைய அப்பாவும் பால்ய கால சிநேகிதர்கள் என்பதையும், அம்மாவிற்கு நந்தினியை மிகவும் பிடித்திருக்கிறது என்பதையும் சொன்னான். அதைக் கேட்டு பத்மா அதிர்ச்சி அடைந்தாள்.
“இது என்ன புது திருப்பம்..“ என்றாள்.
“புது திருப்பம் தான்.. நானே எதிர்பார்க்கல..“
“சரி நீ என்ன நினைக்குற..“
“இதுல நினைக்குறதுக்கு என்ன இருக்கு.. எந்த சந்தர்பத்துலயும் நா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்..“
“தாங்ஸ் ராகவ்..“ என்று கூறி அவனது கையைப் பற்றினாள். பின் “எங்க வீட்டுல பெரிய நம்பிக்கை வச்சுருக்காங்க.. சொந்தத்துலேருந்து வந்த மாப்பிள்ளைங்கள கூட வேணாம்ன்னு சொல்லி அவாய்ட் பண்ணிட்டாங்க.. இதுல எதாவது குழப்பம் வந்துது, அவ்வளவுதான், மொத்த குடும்பமும் இடிஞ்சு போயிடும்.. முக்கியமா ரம்யா.. உயிரையே விட்டுடுவா..“ என்று கூறினாள்.
“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.. கவலைப்படாத..“
“இந்த விஷயம் பெருசா ஆகறதுக்குள்ள, உங்க வீட்டுல நம்ம மேட்டர ஓப்பன் பண்ணிடு.. அதுதான் நல்லது..“
“நானும் அதைதான் யோசிச்சுகிட்டு இருக்கேன்..“
“தள்ளிப் போடாத.. முடிஞ்சா இன்னிக்கே பேசிடு..“
“சரி..“
“இந்த திடீர் ரிலேஷன்ஷிப்ப பத்தி நந்தினியோட ரீயாக்சன் என்ன..“
“அவ நியூட்ரலாதான் இருக்கா.. ஆனா எங்கம்மா அவள உக்கார வச்சு பேசினா சரின்னு ஒத்துகிடுவா.. அவளோட கவலை அவங்க அப்பாவ பத்திதான.. இப்பதான் ரெண்டு குடும்பமும் ஒண்ணுன்னு ஆயிப் போயிடுச்சே.. இனிமே அவளுக்கு அந்த கவலை இல்ல..“
அதைக் கேட்டு பத்மா பயப்பட ஆரம்பித்தாள். “என்னடா குண்ட தூக்கி போடுற..“
“எல்லாம் நடக்கும்.. எந்த குண்டுக்கும் நீ பயப்புடாத.. அதை புஸ்வானமா ஆக்க வேண்டியது என்னோட பொறுப்பு..“
பத்மாவின் கண்களில் நீர் கோர்த்தது.
“அழறியா.. நா சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லையா.. நம்பிக்கை இல்லன்னா சொல்லு.. இப்பவே எதாவது ஒரு கோவில்ல வச்சு உனக்கு தாலி கட்டிடுறேன்..“
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “உன் மேல எனக்கு நம்பிக்கை நிறைய இருக்கு.. ஆனா சூழ்நிலை கைதியா நீ மாட்டிக்குவியோன்னு பயமா இருக்கு..“
“முடிவு இதுதான்ங்குறதுல நாம உறுதியா இருந்தா, எந்த சூழ்நிலையாலும் நம்பள ஒண்ணும் பண்ண முடியாது..“
“தாங்ஸ்..“ என்று கூறி நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
–காற்று வீசும்