கூண்டில் சிக்கியது  திருப்பதி மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை…

 கூண்டில் சிக்கியது  திருப்பதி மலை பாதையில் பக்தர்களை அச்சுறுத்திய சிறுத்தை…

திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது. இதுவரை 4 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. இன்று பிடிபட்ட சிறுத்தையை உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசிக்க தினமும் இங்கு பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருகை தருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாகவும் ஏழுமலையானை தரிசிக்க செல்கின்றனர்.

பாதயாத்திரை செல்லும் பகுதி வனப்பகுதி என்பதால் அவ்வப்போது வன விலங்குகளும் வந்து செல்லும். சிறுத்தை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளின் நடமாட்டமும் இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கரடி ஒன்று அலிபிரி நடைபாதையை கடந்து சென்றது. கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு குடும்பத்தினருடன் நடந்து சென்ற போது 3-வயது சிறுவனை சிறுத்தை கவ்விக்கொண்டு ஒரு புதருக்குள் ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர் கூச்சலிட்டு கத்தியபடியே சிறுத்தையின் பின்னால் ஓடினர். இதனால், சிறுத்தை சிறுவனை விட்டு விட்டு சென்றாது. காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன், திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினான். இதனையடுத்து சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு சென்று கொண்டிருந்த போது லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை கவ்வி சென்றது. சிறுமி திடீரென மாயமானதால் பல இடங்களில் தேடிய அவர்கள் பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விடிய விடிய சிறுமியை தேடிய நிலையில் சனிக்கிழமையன்று லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தை தாக்கி சிறுமி பலியான விவகாரம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். இதில் கடந்த 17 ஆம் தேதி ஒரு சிறுத்தை கூண்டு ஒன்றில் புகுந்து சிக்கிக்கொண்டது. அந்த சிறுத்தையை பத்திரமாக மீட்டு வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

அதேபோல, திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது. மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனால், மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கைத்தடி கொடுக்கும் திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் தொடங்கியுள்ளது. பக்தர்கள் கூட்டமாக இணைந்தே நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியுள்ளது. மலைப்பாதை அருகே வைக்கப்பட்டு இருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இன்று அதிகாலை சிக்கிய சிறுத்தையை வன உயிரியல் பூங்காவில் கொண்டு விட திட்டமிட்டுள்ளனர். திருப்பதி மலைப்பாதையில் இதுவரை 4 சிறுத்தை பிடிபட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...