வேப்ப மரத்துப் பூக்கள் – 7 | ஜி ஏ பிரபா

 வேப்ப மரத்துப் பூக்கள் – 7 | ஜி ஏ பிரபா

அத்தியாயம் – 7

                                      எண்ணங்கள்தான் செயலாக உருமாறுகிறது.

                                      நாள்தோறும்நேர்மறைஎண்ணங்களைமனதில்

                                      உருவாக்கினால் அதுவே மிகச் சிறந்த பிரார்த்தனை.

                                              கல்யாணி பாடிக் கொண்டிருந்தாள்.

                   மனம் துள்ளிக் கொண்டிருந்தது. பாடல் வரிகள் மறந்து போனது.

          கண்ணை மூடி யோசித்தால் ரகுராமன் முகமே கண் முன் நின்றது. வரிகள் மறந்து போனது. இருபது வருஷமாகப் பாடும் பதிகம்தான். ஆனால் சந்தோஷத்தில் துள்ளும் மனசில் வரிகள் நிற்கவில்லை.

                   மீண்டும் சொல்லிப் பார்த்தாள்.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்கில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க.
ஆகமமாகி நின்ற அண்ணிப்பான் தாள் வாழ்க

          அடுத்த அடி நினைவுக்கு வர வில்லை. இருபது வருஷத்துக்கும் மேலாகப் பாடும் பதிகம்தான். ஆனாலும் வரிகள் ஒளிந்து நின்று வேடிக்கை காட்டியது.

                   ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க,

                   வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க.

          உள்ளே நுழைந்த மௌனிகா செருப்பை கழற்றி விட்டு பாடியபடி வந்து அம்மாவின் அருகில் அமர்ந்தாள். தலை அசைத்து புன்னகைத்த கல்யாணி மேற் கொண்டு மௌனிகாவுடன் சேர்ந்து கொண்டாள். பாடப் பாட வயிறு குழைந்தது. மனம் முழுதும் நிறைந்து வழிந்தது. திருப்தியும், இன்பமும் நிறைந்த மனம்.

          நேற்று ரகுராமனைச் சந்தித்து விட்டு வந்ததிலிருந்து அவர் புராணம்தான் மௌனிகாவுக்கு. அவள் பேச்சில் வெளிப்பட்ட ஒரு விஷயம்தான் கல்யாணியின் மனதில் பதிந்தது.

          ரகுராமன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை. கல்யாணியின் நினைவாகவே இருக்கிறார் என்பதுதான். சந்தோஷத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இரவு முழுதும் அழுதாள். காலையில் மௌனிகாவும் கேட்டாள்.

          “ என்ன ராத்திரி பூரா அழுகையா? ஆனந்தக் கண்ணீரா?”

                   பதில் சொல்லாமல் அழுகையை மறைக்க சிரித்தாலும் வழிந்த கண்ணீரும், கோணிய முகமும் காட்டிக் கொடுத்தது. மௌனிகா அம்மாவை அனைத்துக் கொண்டாள்.

          “ அம்மா நிமிஷ நேரத்து கோபத்துல அற்புதமான ஒரு மனிதரின் அன்பை இழந்துட்டே. சீக்கிரம் உன்னை வெளிப்படுத்திக்கோ. நான் அவரை அப்பான்னு கூப்பிட விரும்பறேன்.”

          “அன்னைக்கு நீ செஞ்சது உனக்கு நியாயமா இருக்கலாம். ஆனா அவருக்கு அது அநியாயம். கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம். யாரோ சொன்னதை கேட்டுண்டு கோவிச்சிண்டு வந்து நீண்ட நாளை வீணாக்கிட்டே. எப்படிம்மா இப்படி ஒரு மனுஷனை விட்டுப் பிரிய முடிஞ்சுது?”

          வெளி உலகத்துக்குத்தான் பிரிஞ்சது போல. உள்ளுக்குள்ள அவர் கூடத்தான் வாழ்ந்துண்டு இருக்கேன்.”

          “ரெண்டு பெரும் இதே டயலாக்கைச் சொல்லுங்க.”- சலித்துக் கொண்டாள் மௌனிகா. ஆனால் பெருமையாக இருந்தது. மௌனிகா பிரபஞ்சம் என்ற சக்தியை மிகவும் நம்புவாள். ஒரு நல்ல எண்ணத்தை மனதில்  போட்டு விட்டு தினசரி கண் மூடி அமைதியாக அமர்வாள். தன் எண்ணங்கள் நிறைவேறுவதை பிரபஞ்சம் கவனித்துக் கொள்ளும் என்பாள்.

          “இந்தப் பிரபஞ்சம் எல்லையற்ற சக்தி படைத்தது. உனக்கு சேவை செய்ய அது கை கட்டி காத்திருக்கிறது. மனதில் எண்ணத்தை  போட வேண்டியதுதான் உன் வேலை”. என்பாள். தன் ஆசைகள் ஒவ்வொன்றும் இப்படித்தான் நிறைவேற்றிக் கொள்வாள்.

          “சும்மா உட்கார்ந்தா போதுமா? அதற்கு முயற்சிகள் செய்ய வேண்டாமா என்று கல்யாணி கேலி செய்வாள்.

          “அதற்கு என்ன முயற்சிகள் செய்யறதுன்னு வழி காட்டும்.” என்பாள்.

          அதே போல் எங்கிருந்தோ ஒரு உதவிக் கரம் நீளும். அவள் மனசில் அப்பாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையைப் போட்டு வைத்து விட்டு காத்திருந்தாள். ஆனால் தற்செயலாக கேசவ் மூலம் ரகுராமனைப் பார்த்ததும் அவளின் ஆழ்மன சக்திதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

          அந்த எண்ணத்தில் மீண்டும் வார்த்தைகள் தடுமாறியது.

   மௌனிகா எடுத்துக் கொடுத்தாள்.

   நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே

  தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

மௌனிகா பாடுவதைக் கண்மூடி ரசித்தபடி அமர்ந்திருந்தாள் கல்யாணி.
செல்வர் சிவபுரத்தில் உள்ளார் சிவனடிக்கீழ்

                                                                        பல்லோரும் ஏத்தப் பணிந்து…….

          மௌனிகாவே எழுந்து கற்பூரம் காட்டி விட்டு நானே டிபன் செய்யறேன் என்று உள்ளே போனாள். கல்யாணி பூஜையறை விட்டு ஹாலுக்கு வந்தாள். ஹால் பெரியது. இரண்டு பெட்ரூம். தனி பூஜையறை என்று அழகாக இருந்தது. லைட் போட்டால் ஹாலே பளீர் என்று இருக்கும். மௌனிகாவுக்கு அனாவசிய சாமான்கள் இருந்தால் பிடிக்காது.

          ஹாலில் ஒரு மர சோபா. புக் செல்ஃப். சுவரில் அழகாய்ச் சிரிக்கும் ஒரு குழந்தையின் படம். பூஜையறையிலும் அதிகப் படம் கிடையாது. பிள்ளையார், முருகன், சரஸ்வதி, பெருமாள், மகாலஷ்மி என்று ஐந்து பேரும் இருக்கும் படம் ஒன்று. வில்வகாயை விபூதி கிண்ணத்தில் வைத்து சிவனாக நினைத்து பூஜை செய்வாள் கல்யாணி.

          கடவுள்னா கட உள்னு அர்த்தம். அந்த உள்ளிருக்கும் கடவுள நமக்கு உள்ளிருந்து வழி காட்டும் என்பது இருவரின் எண்ணம்.

          அதுதான் வழி காட்டியிருக்கோ?- கல்யாணி பழைய நினைவுகளில் மூழ்கி விட்டாள். எட்டிப் பார்த்த மௌனிகா அம்மாவை கனிவோடு பார்த்து விட்டு கிச்சனுக்குள் போனாள். காலையில் செய்த இட்லி இருந்தது. அதை உதிர்த்து இட்லி உப்புமா செய்தாள். சூடாக இருந்தால் இருவருக்கும் தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. இரண்டு தட்டில் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

          கல்யாணி கண்மூடி சோபாவில் சாய்ந்திருந்தாள்.

          “டிரீம் அப்புறம் காணலாம். முதல்ல சாப்பிடு.”

          “அவர் அம்மா நல்லவதான் மௌனிகா. ஆனா பிறர் பேச்சைக் கேட்டு நடப்பார்.”

          “அதுவும் அவரின் சூழ்நிலைதான்மா. அப்பாவும் வெளிநாடு. நீ எப்படியோ என்னவோ தெரியாது. மருமகள்னாலே ஒரு பயம்தானே.”

                   “நீ அப்படி இல்லையே.”

          “அவருக்குத் தெரியாதே. அதுவும் நான் எந்த சீர் செனத்தியும் இல்லாம வந்தவ. பையனுக்கு இப்படி, இப்படி கல்யாணம் செய்யனும்னு பெத்தவளுக்கு ஆசை இருக்கும். அதுக்கு தூபம் போடும் பிரேமா”

          அங்கு வாழ்ந்த ஒரு வருடம் நரகமாக இருந்தது. திருமணம் ஆகும்போது ரகுராமன் ஒரு சாதாரன் கம்பெனியில்தான் இருந்தார். அவன் ராஜா மாதிரி இருக்க வேண்டியவன். வேலை இல்லாததால உன்னைக் கல்யாணம் செஞ்சு வச்சோம். உங்க அண்ணாவால ஒரு தாலி கூட தங்கத்தில் போட முடியலையா என்று பிரேமா குத்திக் காட்டிக் கொண்டே இருப்பாள்.

          சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்து உறவுகளுக்கு பாரமாக இருந்த கல்யாணி அண்ணாவுக்கும் பாரமாகத்தான் இருந்தாள். படிக்கும்போதே ஒரு பணக்கார வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய்விட ஒன்று விட்ட மாமாதான்  வளர்த்து ரகுராமனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அவர் ரகுராமனுக்கு தூரத்து உறவு. ஒரு திருமணத்தில் பார்த்து ரகுராமன் விரும்ப திருமணம் பல எதிர்ப்பையும் மீறி நடந்து விட்டது.

          அதில் கல்யாணி பலத்த எதிர்ப்புகளை சந்தித்தாள். முக்கியமாய் பத்மாவை மணக்க மறுத்ததால் பிரேமா கல்யாணி மேல் நிறைய பழி சுமத்தினாள். ஒரு கட்டத்தில் அம்மா கிச்சனில் வழுக்கி விழுந்து விட கல்யாணிதான் தண்ணீரி ஊற்றினாள் என்று கூறி விட்டாள்.

          இரவு எப்போதும் வேலையை முடித்து விட்டு கிச்சனை தண்ணீர் இல்லாமல் துடைத்து விட்டுத்தான் கல்யாணி வருவாள். இது பிரேமாவின் வேலை என்று தெரிந்தாலும் அவளால் சொல்ல முடியவில்லை. அம்மாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டு  பிரேமா நேராக ரகுராமனிடம் வந்தாள்.

          “யார் பேச்சையும் கேட்காமல் ஜாதகம் பார்க்காமல் நீயா கல்யாணம் செஞ்சுண்டே. இன்னைக்குப் பார். அம்மாவுக்கு இவள் வந்த நேரம் சரியில்லை. அதான் இந்த மாதிரி விபத்துகள். ஒரு ஆறு மாசம் நீங்க பிரிஞ்சு இருங்க. வீட்டில் பரிகார பூஜைகள் செய்துட்டு அப்புறம் நல்ல நாள் பார்த்து கூட்டிண்டு வரலாம்.” என்றாள்.

          அம்மாவுக்கு ஆபத்து என்றதும் ரகுராமன் பயந்து விட்டார். கல்யாணியும் சம்மதித்தாள். மீண்டும் மாமா வீட்டுக்கே வந்து விட்டாள். ரகுராமன் மாசா மாசம் பணம் தந்து விடுவதால் அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

          ஆனால் இளமை அடங்கி இருக்கவில்லை. ரகுராமன் மாலை வேலை முடிந்ததும் நேராக கல்யாணியைப் போய் பார்த்துவிட்டு வருவார். ஞாயிற்றுக்கிழமைகளில் அவளை அழைத்துக் கொண்டு எங்கேயானும் போவார்.

          யாருக்குத் தெரியப் போகிறது என்று நினைத்தார் ரகுராமன். கணவனின் ஆசையை மறுக்க முடியவில்லை கல்யாணியால். தீப் பற்றி கொழுந்து விட்டெரிந்தது. ஆனால் கல்யாணியை சந்திப்பதை ரகுராமன் வீட்டில் சொல்லவில்லை.

          அதற்குள் ரகுராமனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. நான் போய்ட்டு சீக்கிரம் உன்னை கூட்டிட்டுனு போறேன் என்று ரகுராமன் கிளம்பிப் போனார்.

          அப்போதுதான் அம்மா உடல் நலம் மோசமானது. அவளைப் பார்க்க நாலைந்து முறை அங்கே சென்றாள். மாமாவின் மச்சினர் பையன்தான் அவளை தன் பைக்கில் கூட்டிச் செல்வான். முதலில் அவனுடன் வந்து இறங்குவதை தப்பாகப் பேசி அம்மாவை உசுப்பிவிட, ரகுராமன் எதுவும் பேசவில்லை. இருபது வருஷத்திற்கு முன் மொபைல் போன் வசதி இல்லாத காலம். வாரம் ஒருமுறை ரகுராமன் அம்மாவிடம் வீட்டு இணைப்பில் பேசுவார். கல்யாணி மாமா வீட்டில் டெலிஃபோன் இல்லை. பக்கத்து வீட்டில் இருந்தாலும் அவர்கள் இதை விரும்பவில்லை. எனவே ஏர் மெயில்தான்.

          தன்னைப் பற்றி  தவறாகப் பேசுகிறார்கள் என்று கல்யாணிக்குத் தெரியவில்லை. அவள் இயல்பாக மாமியார் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள். ஒருநாள் அம்மாவுக்கு மயக்கம் வந்து விழுந்து விட கல்யாணியை உதவிக்காக அங்கு இருக்கச் சொன்னாள் பிரேமா.

          அன்றுதான் கல்யாணியும் நிலை தடுமாறி விழுந்து அம்மாவுடன் ஹாஸ்பிடலில் செக் செய்தபோது கரு உண்டாகி இருக்கிறாள் என்று தெரிந்தது.

          வீடு சந்தோஷப் படவில்லை. பதிலாக “யார் இதன் அப்பா என்று கேட்டது. கல்யாணியை பதில் பேச விடாமல் தடுத்து வார்த்தைகளால் கொன்றது.

          “மூணு மாசம் பிரிஞ்சு இருக்கணும்னு சொன்னோம். ரகுராமன் உன்னைச் சந்திக்கவே இல்லை. பின் எப்படி இது சாத்தியம்? உன்னை ஒருத்தன் கொண்டு வந்து விற்றானே அவனா? என்று கேட்டு கொன்றது.

          கல்யாணி அழுதாள். ரகுராம வந்தான் என்று சத்தியம் செய்தாள். மாமாவும் ஆம் என்றார். நம்பவில்லை வீடு. அவர்களின் நோக்கம் கல்யாணியை விரட்டுவது. அதனால் எதையும் ஏற்க மறுத்தார்கள். அந்த வாரம் ரகுராமன் பேசியபோதும் கல்யாணியைப் பேச விடவில்லை.

                   “அவர்கிட்ட இந்த விஷயத்தைச் சொல்லுங்க”- கல்யாணி கெஞ்சினாள்.

          “உன்னைக் காப்பாற்ற அவன், தான்தான் காரணம்னு சொல்லலாம். ஆனா நாங்க நம்ப மாட்டோம்.”

          “ஒருமுறை அவர்கூடப் பேச வாய்ப்பு தாங்க.”-கெஞ்சினாள்.

          அந்த வாரம் ரகுராமன் போன் செய்த போது கல்யாணி விஷயம் சொன்னாள்.

          “கல்யாணி கொஞ்சம் அமைதியா இரு. நான் நேர்ல வந்து எல்லாவற்றையும் அவங்களுக்கு விவரமா சொல்றேன்” என்று மட்டும்தான் சொன்னார். அதற்குள் பிரேமா ரிசீவரைப் பிடுங்கி விட்டாள்.

          கல்யாணி அதிர்ந்து போயிருந்தாள். ரகுராமன் தான்தான் குழந்தைக்குக் காரணம் என்று சொல்லாமல் வரேன் என்று மட்டும் சொன்னது அவளை நிலை குலைய வைத்தது. ஆனால் ரகுராமன் அம்மாவுக்கு எந்த அதிர்ச்சியும் கூடாது. மேலும் கல்யாணி அங்கு இருந்தால் பிரேமாவால் ஏதானும் ஆபத்து வரலாம் என்று நினைத்தார். போனில் பேசிய அடுத்த நாளே அவர் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார். ஆனால் அதற்குள் கல்யாணி கிளம்பி விட்டாள்.

          அம்மாவின் பேச்சை மீறி தான் ரகசியமாக கல்யாணியைச் சந்தித்ததில் சிறிது சங்கடமாக உணர்ந்தார். அதனால் நேரில் அம்மாவைச் சந்தித்து மன்னிப்பு கேட்டு உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துப் பேசினார்.

          சரியான வார்த்தைப் பிரயோகம், புரிந்து கொள்ளாமையே அனைத்து விபரீதங்களுக்கும் காரணமாகிறது. ஒரு பெண்ணின் கற்பு சந்தேகப் படும்போது அவளுக்கு ஆறுதல் தரும் மொழிகளையே முதலில் கூற வேண்டும். ஆனால் ரகுராமன் சங்கடப் பட்டார். வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணியை சந்தித்ததில், இப்படி ஆகும் என்று தெரியாமல் போனதை நினைத்து, அம்மாவைப் பார்க்கச் சங்கடப் பட்டார்.

          மறைமுகமாக ரகசியமாகச் செய்யும் காரியங்கள் இப்படித்தான் அவமானத்தில் சிக்க வைக்கும், வீட்டாரையும் விட முடியாமல், மனைவியையும் விட முடியாமல், ஆசைகளையும் அடக்க முடியாமல் தவிக்கும் ஆண்களுக்கு ரகுராமனும், ஜாக்கிரதையாக பெண்கள் இருக்க வேண்டும், கணவனே என்றாலும் பெண்கள் சகல இடங்களிலும் கவனமாக, வரப் போவதை நினைத்து, நடக்க வேண்டும் என்பதற்கு கல்யாணியும் உதாரணம்.

          கல்யாணி அன்றே ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுக் கிளம்பி விட்டாள்.

          எந்தக் குறிக்கோளும் இல்லாமல்தான் கிளம்பி வந்தாள். கட்டிய புடவையோடு, மாமா வீட்டுக்குக் கூடப் போகாமல், எங்கேயானும் விழுந்து இறந்து விடலாம் என்றுதான் கிடைத்த பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள். ஆனால் பெங்களூர் என்றதும் தோழியின் நினைவு வந்தது.

          கல்யாணி எப்போதும் தன் கைப்பையில் முக்கியமான டெலிஃபோன் நம்பர்களைக் குறித்து வைத்திருப்பாள். அதில் தோழியின் எண்  இருந்தது. இறங்கி பப்ளிக் பூத்திர்லிருந்து அவளுக்குப் போன் செய்தாள். அவள் வந்தால். அவளின் அறிவுரை, வழிகாட்டலில் வாழ்க்கை மாறிப் போனது.

          தெய்வத்தின் அருளால் அவளைச் சுற்றி நல்ல மனிதர்களும் நல்லவர்களின் அறிமுகமும் கிடைத்தது. காலம்தான் மிகச் சிறந்த மருந்து. கோபம், வேதனை என்று எல்லாவற்றையும் மாற்றக் கூடியது. பொறுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது.

          ரகுராமன், கல்யாணி இருவரும் தங்கள் தரப்பு தவறை யோசிக்க ஆரம்பித்தார்கள். நான்தான் காரணம் என்று சொல்லியிருக்கலாம் அம்மாவிடம் என்று ரகுராமனும், அவர் வந்த பிறகு எல்லாம் பேசலாம் என்று தான் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று கல்யாணியும் நினைக்க ஆரம்பித்தார்கள்.

          கோபம் மறைந்து குற்ற உணர்ச்சி அதன் பிறகு ஏக்கம்….

          ஒருவரை  ஒருவர் சந்தித்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுதான் மனசு இப்போது நினைக்கிறது. சந்திக்க ஏங்குகிறது.

          “சாப்பிடாம என்ன யோசனை?” –மௌனிகா வந்து தட்டைப் பார்த்தாள்.

          “உன்னைப் பார்த்தா பொறாமையா இருக்கு.”

          “என் உன்னை விட அழகா இருக்கேன்னா?”

          “என்னை விட யாரும் அழகு இல்லை. என்னுடைய ஒரு துளிதான் நீ.”

                                      “பின்ன என்ன?”

                   “அவரை நீ முதல்ல பாத்துட்டியேன்னுதான்.”

                   “ஹா,ஹா இதுக்குப் பேருதான் லக்குன்றது. பாத்துட்டே இரு, உன்னைவிட நான்தான் அவருக்கு செல்லம்னு ஆகப் போறேன்.”

                                      “கொன்னுடுவேன்”- மிரட்டினாள் கல்யாணி.

          “அம்மா, அம்மா என்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மௌனிகா. “உங்க ரெண்டு பேருக்கும் நான்தானே செல்லம். எனக்கு நீங்கதானே?”

                   “அம்மாவுக்கும், மகளுக்கும் என்ன கொஞ்சல்?’”- பலராமன் சலுகையாக உள்ளே நுழைந்தார்,

          “கல்யாணி உங்களைப் பார்க்கத்தான்  வந்தேன். ஒரு ஹெல்ப்.”

                                      “சொல்லுங்க சார்.”

          “ நாங்க நண்பர்களா சேர்ந்து ஒரு நிறுவனம் நடத்தறோம். அதாவது ஹெல்பிங் ஹேன்ட். திறமை இருந்தும் வசதி இல்லாதவங்களுக்கு தொழில் ஆரம்பிக்க உதவி செய்யறது. அஃப் கோர்ஸ் நாங்களும் லாபத்தில் பங்கு எடுத்துப்போம். எங்க முதலீட்டை எடுக்கும் வரை. இதை ஆரம்பித்து இரண்டு வருஷம் ஆறது. இதனால் பயன் அடைஞ்சவங்க, பயன் அடையப் போறவங்கன்னு ஒரு முப்பது பேர் இருக்கோம். எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தலாம்னு. அதை நீங்கதான் ஏற்று நல்லபடியா நடத்தித் தரனும்.”

                   “ஓ! ஃபைன். கண்டிப்பா.” ஒரு வேலை வந்த உற்சாகத்துடன் கல்யாணி.

                   இதில் எதோ நல்ல விஷயம் நடை பெறும் என்று நினைத்தாள் மௌனிகா.

-(ஏக்கங்கள் அகலும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...