ஒரே நாளில் 4 மணிநேரத்தில் 2 மாணவர்கள் தற்கொலை! நீட் தேர்வு அச்சம்
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரே நாளில் 4 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் கோட்டாவில் நீட் தேர்வுக்கு அஞ்சி இந்த ஆண்டு இதுவரை 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாநில பாடத் திட்டத்தை பின்பற்றுகிறது. மத்திய அரசு தரப்பு சிபிஎஸ்இ கல்வியை முன்வைக்கிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நிலைமையை ஒழித்து கட்டி அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றால்தான் அரசு மருத்துவ கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைக்கும். நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்கள் எடுத்தாலும் பல லட்சம் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும். கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவ படிப்பு கனவை பறிகொடுக்கின்றனர். இதனாலேயே மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தமிழ்நாட்டில் அரியலூர் அனிதா தொடங்கி தாம்பரம் ஜெகதீஸ் வரை எண்ணற்ற மாணவர்கள் நீட் தேர்வினால் உயிரிழந்து போயிருக்கின்றனர். இதனால் நீட் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு ஒருமித்த குரல் எழுப்பி வருகிறது. இன்னொரு பக்கம், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்காக மட்டுமே ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. கோட்டா பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கட்டி சேர்ந்துவிட்டால் நீட் உள்ளிட்ட தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற கனவில் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கோட்டாவில் நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்ற அச்சத்தாலும் பாடங்கள் கடினமாக இருப்பதாலும் மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்கிற சம்பவங்கள் தொடருகின்றன. கோட்டாவில் நேற்று மட்டும் 4 மணிநேர இடைவெளியில் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு கோட்டாவில் மட்டுமே 22 மாணவர்கள் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்துள்ளனர்.