நீ என் மழைக்காலம் – 6 | இ.எஸ்.லலிதாமதி
அத்தியாயம் – 6
வானம் இருண்டு இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. சன்னலுக்கு வெளியே சரக்சரக்கென்று சாரல் அவ்வப்போது வீசி சென்றன. கடிதம் போடுவதற்காக வெளியே நுழைவாயிலில் கட்டி வைத்திருந்தத பால் பெட்டி மீதும் ‘டமடம’ வென்று சத்தம் எழுப்பியபடி கொட்டியது மழை.
அகச்சூழலில் புயலடித்துக் கொண்டிருக்கும் போது, புறச்சூழலில் நடக்கும் விஷயங்கள் எதுவுமே மனத்தில் பதியாது. அப்படித்தான் கார்த்திக்கு அன்று என்ன நடந்தது? சாலைக்கு எப்படி வந்தோம்? பேருந்தில் ஏறி எப்படி வீட்டுக்கு வந்தோம்? எதுவுமே தெரியவில்லை. ஒரு மாயபிம்பம் போல் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பது புரிந்தது. பேருந்தில் பயணச்சீட்டு வாங்கியது, சில்லறை பெற்றது என்று அவன் நினைவில் எதுவும் இல்லை.
இப்போது பெய்யும் மழையையும் அவனால் ரசிக்க முடியவில்லை. எல்லாம் அவளாகவே இருந்தாள். நினைவுகளில், காட்சிகளில், ஒலிகளில் என்று அவள் நினைப்பும், உருவமும், குரலும் அவன் சமீபமாய் பயணித்துக் கொண்டே இருந்தது.
ஏன் நிவேதா இப்படி செய்தாய்? என்னை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அப்படி நான் என்ன தவறு செய்தேன்?
காதலிக்கிறேன் என்று தானே சொன்னேன்? அது குற்றமா?
இது கட்டாயம் அல்லவே! பிடிக்காவிட்டால் மறுக்கவும் வார்த்தைகள் இருக்கின்றனவே. அது ஏன் உனக்குப் புரியவில்லை?
‘நான் நட்பா தாண்டா மடையா பழகினேன். அதை லவ்வா எடுத்து குவியா?’ என்று என் தலையில் குட்டி திருத்தியிருக்கலாமே நீ?
அந்த உரிமை உனக்கு உண்டே. பிறகு ஏன் அப்படி செய்தாய்?
பேசாமல் என் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைகூட விட்டிருக்கலாம். அப்போதே ஆறியிருக்கும். ஆனால் உன் மெளனம் அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உன் பாராமுகம் என்னால் தாங்கிக் கொள்ள முடியாத மன வேதனையையும், மரண வேதனையையும் கொடுக்கிறது நிவேதி.
அவன் கேவினான். அலுவலகம் கூட போகவில்லை. உடல் நிலை சரியில்லை என்று விடுமுறை சொன்னான்.
அவன் அம்மா, “என்னகார்த்தி, உடம்பு முடியலையா ?” என்று தலையில் கை வைத்துப் பார்த்தாள்.
வழக்கமாக உற்சாகத்துடன் உள்ளே நுழைந்து, கை கால், முகம் அலம்பி சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்லும் பிள்ளை, இன்று வந்தவுடன் சோர்ந்து படுத்து விட்டால், எந்த அம்மாவுக்குத் தான் கவலையாக இருக்காது?’
“லேசா தலை வலிக்குதும்மா. வேற ஒண்ணும் இல்லை. கொஞ்சம் தூங்கினால் சரியா போகும்…”
அவன் போர்வையை நன்கு இழுத்துப் போர்த்தினான். தூங்குவது போல் பாவனை செய்தான். தூக்கம் வரவில்லை. துக்கம் தான் வந்தது. கண்களின் ஓரத்தில் நீர் கசிய ஆரம்பித்தது. காதல் என்றால் இப்படித்தான் கண்ணீர் சிந்த வேண்டி இருக்குமா? அழ வேண்டி இருக்குமா? உருகி தொலைக்க வேண்டியிருக்குமா? அவன் விம்மினான்.
நிவேதிதாவிடம் பிடிப்பதற்கு என்று நிறைய குணங்கள் இருக்கின்றன. அவளுடைய அன்பு, அறிவுக்கூர்மை, தைரியமான மனப்போக்கு, துணிச்சல், சுறுசுறுப்பு, எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க தூண்டும் அவள் விழிகள் இப்படி நிறைய இருக்கின்றன. இதில் எது அவனுக்குப் பிடித்தது என்றே அவனால் பிரித்தறிய முடியவில்லை.
பார்த்த உடனே அவள் பிடித்தாள். பழகியப்பிறகு அவளின் அத்தனை குணங்களும் பிடிக்கத் தொடங்கியது. அவளைப் பார்க்கவும், பேசவும், பழகவும், எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளவும் உள்ளம் துடித்தது. அப்படி துடித்ததின் விளைவே அவன் சொன்ன ‘ஐ லவ் யூ’. ஆனால் அவள்?
மெளனத்தில் கொல்கிறாளே! என்ன செய்வேன்! எப்படி புரிய வைப்பேன் அவளுக்கு?
‘என்னைப் புரிஞ்சுக்கோ நிவேதா. என் காதலை ஏத்துக்கோ. என்னை நிராகரிக்காதே’ அவன் கண்ணீர் கசிய, அவளுக்கு மானசீகமாய் வேண்டுகோள் விடுத்தான் .
எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. அம்மா இரவு எட்டு மணிக்கு சாப்பிட எழுப்பியப்பிறகு தான் கண் விழித்தான்.
வெளியே மழை விட்டிருந்தது போல், மனசும் கொஞ்சம் லேசானது போல் தெரிந்தது. முகம் கழுவி சாப்பிட்டு முடித்து, கொஞ்ச நேரம் தொலைக்காட்சி வைத்து செய்தி கேட்டான். மணி எட்டு ஐம்பத்தெட்டு ஆகும் போது அவனுக்குள் படபடப்பு வர ஆரம்பித்தது. நேற்று தான் சம்பந்தமே இல்லாமல் வெறும் தத்துவப் பாடலாக வைத்தாள். இன்றாவது என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் வானொலியை திருகினான்.
‘வணக்கம் நேயர்களே நான் உங்கள் நிவேதா பேசுகிறேன். இன்று ஒருகதை சொல்லப்போகிறேன் . அதுவும் காதல் கதை. கதையின் ஊடே மயிலிறகாய் சில பாடல்களும் இருக்கும்’ என்று முன்னுரை கொடுத்தவள், கதை சொல்லத் தொடங்கினாள்.
`‘தலைவனுக்கு தலைவியை பிடிக்கிறது. பிடிக்கும் விஷயத்தை மனத்திற்குள் போட்டு புதைத்துக் கொண்டிருப்பதை விட, அதை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறான் தலைவன். ஒரு சூழலில் அவளிடம் சொல்லியும் விடுகிறான். ஆனால் தலைவி அவனுக்கு பதில் எதுவும் கூறாமல் காலம் கடத்துகிறாள். தலைவின் மௌனம் தலைவனை கொல்கிறது, வதைக்கிறது. தூங்கவிடாமல் சித்திவதை செய்கிறது. அவனை இயங்கவிடாமல் முடக்கி வைக்கிறது. இப்படியான சூழலில் அவன் அவளிடம் ஒருகோரிக்கையை வைக்கிறான். நீ என்னை காதலிக்கக்கூட வேணாம். காதலிப்பதாக ஒரே ஒரு பொய் மட்டும் சொல் . நான் பிழைத்துக் கொள்வேன் என்கிறான். பொய் மட்டும் போதும் என்று நிறைவு கொள்ளும் அந்தத் தலைவனுக்கு நிஜமான அன்பை அவள் வாரி வழங்குகிறாள் தலைவி …… ’’ என்று கூறிவிட்டு பாடலை ஒலி பரப்பினாள்.
`ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதலன் நான் தான் என்று
அந்த பொய்யில் உயிர் வாழ்வேன்’
‘ஜோடி’ படத்தில் ஹரிஹரன் பாடிய பாட்டு காற்றில் அலைந்து வந்து இவன் செவிகளை வருடியது . கல் நெஞ்சம் கொண்ட பெண்ணையும் கசிந்துருக வைக்கும் குரலாகவும், கோரிக்கையாகவும் இருந்தன வரிகளும் குரலும் . கார்த்திக்கு அவள் தனக்காகத் தான் அந்தப் பாடலை ஒலிபரப்புகிறாள் என்பது தெரிந்து போனது. கண்ணோரம் ஈரம் கசிந்தது.
பாடல் முடிந்து அடுத்தப் பாடலுக்கு முன்னோட்டம் தந்தாள். தலைவனின் இதயம் நினைப்பதை தலைவி அறிந்து கொள்கிறாள். ஆனால் அவளால் உடனயாக அவனுக்கு பதில்கூற முடியவில்லை. அவளுக்கு வீட்டுச் சூழல், வெளிசூழல் என்று ஆயிரம் பிரச்சனைகள். ஆனாலும் அவளுக்கு தலைவனைப் பிடிக்கிறது. அவனுக்கு பதில் தருகிறாள். எப்படி?
`ராசாவே உன்னை நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிடீங்க
இந் தஉசுரவந்து உருக்குதுங்க..’
`முதல் மரியாதை’ படத்தில் இருந்து அவள் தன் காதலுக்கான மரியாதையை அவனுக்குத் தந்து கொண்டிருந்தாள்.
தலைவியின் பதில் கிடைத்ததும் தலைவனது கால்கள் தரையில் இருப்பதற்கு பதிலாய் ஆகாயத்தில் நடக்கின்றன. அவளிடம் புன்னைகை சிந்தினால் என்ன? பூமுகம் சிவந்தா போகும் என்று கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்…. காதலில் உருகி வழிகிறான். நீங்களும் வழியுங்கள்… வாழ்த்துங்கள் அவர்கள் காதலுக்கு’ என்றவள், வாழ்க்கைப் படகு படத்தில் இருந்து,
`நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ’ என்ற பாடலை காற்றில் சுழல விட, இதற்கு மேல் உயிரும் தாங்காது, உள்ளமும் தாங்காது என்ற முடிவில் அவளுடைய அலைபேசியில் தொடர்பு கொண்டான்.
அவளும் அதே நிலையில் தான் இருந்திருப்பாள் போல.
எடுத்த உடனே, “என்னடா ” என்றாள்.
“தேங்க்ஸ்டி’’ என்றான்.
‘‘என்னை ஏன் இப்படி தவிக்க விட்டே? இரண்டு நாள் உயிரோடு என்னை கொன்னே? எனக்கு நேரடியா பதில் சொல்லி இருந்தால் என்ன குறைஞ்சா போயிருப்பே?” அவன் அழுதான் கேவலுடன் .
“சே! என்னடா இது சின்ன குழந்தையாட்டம்? இப்படியா அழுவ? இரு பாட்டு முடியப் போகுது. வேற பாட்டை போட்டுட்டு வரேன்” அவள் தொடர்பை துண்டித்தாள். அடுத்து அவள் என்ன பாடலை ஒலி பரப்பினாள் என்பதெல்லாம் அவனுக்கு நினைவிலேயே இல்லை.
அவள் மீண்டும் தொடர்பில் வந்து, முதல் வார்த்தையாக `ஐ லவ் யூ’ சொன்னாள்.
`போடி ராட்சசி’ என்றான் அவன் கோபித்தபடி. எதுக்குடி என்னை ரெண்டு நாளா அலைகழிச்சே? எதுக்கு என்னை தவிக்க விட்டே? உனக்கு அதில் என்ன சந்தோஷம்? எதுக்கு நேற்று காலேஜ் விட்டு, வேறு வழியா போனே? நான் அந்த மரத்தடியிலேயே தவமாய் கிடந்தேன் தெரியுமா?’ அவன் அழுகையை நிறுத்திவிட்டுச் சொன்னான்.
காதலில் அழுது தொலைவதற்கு ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை மனம். அவன் அழுது சிரித்தான்.
“நான் வேணும்னே போகலடா! நேராய் வகுப்பு போய் ஆசிரியர்கிட்ட ஒருபுத்தகம் வாங்கிட்டு, உன்னைப் பார்க்கலாம்னு தான் போனேன். ஐந்து நிமிடத்தில் திரும்பியும் வந்தேன். அப்போ, உன்கூட படிக்கிறாளே நிர்மலா, அவள், அந்த வழியாக வந்தாள். பேச்சு வாக்கில், நீ கிளம்பிட்டதாய் சொன்னாள். அவள் தான் என்னை, வா கேன்டீன் போய் டீ குடிக்கலாம்னு வற்புறுத்தி கூட்டிட்டுப் போனாள்… இல்லாட்டி நான் போய் இருக்க மாட்டேன் . உன் வகுப்பு, உன் கூட படிக்கிறவள் சொன்னப் பிறகு, நான் எப்படி நம்பாமல் இருக்க முடியும்?”
அவள் சொல்லச் சொல்ல இவனுக்கு எல்லாம் புரிந்தது.
“சரி, அவ கூட்டிட்டு போனால் என்ன? உங்கிட்ட போன் இல்லியா? எனக்கு ஒரு மேசேஜ் பண்ணியிருக்கலாம் இல்ல…” அவன் முழுமையாக சமாதானம் அடையவில்லை.
‘‘நீ ஏன் அவசரக் கொடுக்காட்டம் போனே? ’’என்ற கோபத்தில் தான் நான் பண்ணவில்லை.
‘‘நான் தான் போகவே இல்லையே’’
‘‘அது இப்போ தானே தெரியுது.’’
‘‘சரி, நேரில் பார்க்க முடியவில்லை, பேச முடியவில்லை. ஒரு ஸ்மைலியிலாவது ஒற்றை இதயம் அனுப்பி இருக்கலாம் இல்லையா? நான் இப்படி தவித்திருக்கமாட்டேன் இல்ல’’
” இல்ல… நான் வழங்கும் நிகழ்ச்சியில் உனக்கு பதில் சொல்லிக்கொள்ளலாம் என்று தான் பேசாமல் இருந்துட்டேன் கார்த்தி …! .இப்போ சொல் உனக்கு எத்தனை இதயம் வேணும்? நூறு இதயம் அனுப்பட்டுமா வாட்சப்பில்? குறுந்தகவலில்?” அவள் கொஞ்சினாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்…” என்றான்.
“ வேறென்ன வேணும்?” என்றாள் .
‘‘ஒரே ஒரு முறை மறுபடியும் ஐ லவ் யூ சொல்லு. என் காது குளிர, மனம் குளிர நான் கேட்கணும்! என்றான்.
“ஒரு முறை என்ன?. ஆயிரம் முறை ஐ லவ் யூ ” அவள் அவனை தேவகுமாரனாக்கினாள். அவளும் தேவதையாய் பறந்தாள்.
மழை மறுபடியும் வரத் தொடங்கி இருந்தது. அவன் மழையில் சென்று நனைய ஆரம்பித்தான்.
-(சாரல் அடிக்கும்)