கரை புரண்டோடுதே கனா – 6 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 6
ஒருவரது வீட்டிற்கு போகும் போது வெறும் கையுடன் போகலாமா..? என்ன வாங்கிப் போவது..? அவனது வீட்டில் யார் யார் இருப்பார்கள்..? அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்குமா..? மனைவி.. குழந்தைகள் யோசித்து விட்டு இல்லை நிச்சயம் அவன் இன்னும் பேச்சிலர் தான்.. ஏனோ இது மிக உறுதியாக ஆராத்யாவின் மனதில் பட்டது.. ஆர்யன் பார்ப்பதற்கு மிகவும் இளம் வயதினனாக, சென்ற வருடம் தான் முதுநிலை படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து வெளி வந்தவன் போல் தோன்றினான்.. எனவே அவனுக்கு திருமணம் முடிந்திருக்க வாய்ப்பில்லை..
அப்படியெனில் அவன் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என அவனுடன் தங்கியிருக்கும் உறவு முறைகளை யோசித்து விட்டு, ஒன்றும் பிடிபடாமல் கொஞ்சம் பழங்கள் மட்டும் வாங்கிக் கொண்டாள்.
வயதான பெண்ணையோ, ஆணையோ.. ஆர்யனின் தாய், தந்தையை எதிர்பார்த்தே அழைப்புமணியை தொட்டபடி நின்றாள்.. ஆனால் ஆர்யனே கதவை திறக்க வியப்பும், தயக்கமுமாக வாசலிலேயே நின்றாள்..
“என்ன ஆச்சு..? ஏன்..?” உள்ளே வராமல் வாசலிலேயே நின்றவளை திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
“வ.. வந்து வீட்டில் வேறு யார்..?” ஆராத்யாவின் பார்வை வீட்டினுள் வலம் வந்தது.. அது ஒரு நவ நாகரீக அடுக்கு மாடிக் குடியிருப்பு.. ஆர்யனின் வீடு மிக நேர்த்தியாக திருத்தமாக இருந்தது.. தரையின் டைல்ஸ்கள் துளி தூசியின்றி பளபளத்தன..
பெண்கள் இல்லாத வீட்டில் இத்தனை சுத்தம் சாத்தியமா..? ஆராத்யாவின் கேள்வி கேட்ட மனதிற்கு பதிலாக, அவளது பாதங்கள் தயக்கம் உதறி உள்ளே நுழைந்தன..
“வீட்டில் யாருமில்லை.. நான் மட்டுமே இங்கே தங்கியிருக்கிறேன்.. நோ ஒன் கேன் கொஸ்டின் திஸ் பேச்சுலர்..”
அவனது வார்த்தைகள் குழப்ப ஆராத்யா உள்ளே நுழைந்த இடத்திலேயே தயங்கி நிற்க, ஆர்யன் அவள் பின்னால் கதவை மூடித் தாளிட்டான்..
“கம்மான் ஹனி..” அழைத்துவிட்டு உள்ளே நடந்தான்.. அவனது தேனெனும் அழைப்பு அவளுள் அனலாய் இறங்கியது..
“கடைசியில் நாம் போட்டுக் கொள்ளப்போகும் அக்ரிமெண்ட் பற்றியும் பேசத்தான் போகிறோம்..” அவனது குறிப்பு காட்டலில் ஆராத்யா தனது கால்களை பெயர்த்தெடுத்து மெல்ல நடந்தாள்.. அவன் காட்டிய சோபாவில் அமர்ந்தாள்..
“ஹாட் ஆர் கோல்டு..?” அவனது கேள்விக்கு “யுவர் விஷ்..” என பதிலளிக்க அவன் உள்ளே நடந்தான்..
அதற்கான பொருத்தமான இடத்தில் அழகாக அமைந்திருந்த அவனது பொருட்களுடன் அவனது வீடு நறுவிசாக, நாகரீகமாக இருந்தது.. ஒரு பேச்சுலரால் இந்த அளவு சுத்தம் சாத்தியமா.. என்ற ஆச்சரியத்தின் முடிவில் ஆர்யன் சும்மா சொல்கிறான்.. இங்கே அவனுடன் அவனது தாயோ, சகோதரியோ தங்கியிருக்கிறார்கள் என்ற தீர்மானத்திற்கு ஆராத்யா வந்த போது, அவள் முன் அதிரடியாய் நீண்டது ஒரு டிரே..
“சாப்பிடுவாயில்லையா..? நேற்று நைட்டே வாங்கி வைத்து விட்டேன்.. நன்றாக ஜில்லென்று இருக்கின்றது..” என்ற சிலாகிப்போடு அவன் கொடுத்தவை பீர் டின்கள்..
ஏதோ ஓர் குளிர்பான டின்கள் என்றே முதலில் நினைத்தபடி லேசாக கைநீட்டி அதனை தொடக் கூட செய்து விட்டாள் ஆராத்யா.. பனிக் குளிர்ச்சி நுனி விரலை சுரீரென.. தீண்டி விட்ட கடைசி நொடியிலேயே அது பியர் என உணர்ந்து தீச்சுட்டாற் போல் கையை எடுத்தாள்..
“என்ன இது..?” தீச்சுடர்கள் இப்போது அவளது கண்களில்,
“பியர்.. ஏன்..? இந்த ப்ராண்ட் உனக்கு பிடிக்காதா..? இன்னமும் இரண்டு ப்ராண்ட் வாங்கி வைத்திக்கிறேன்.. நீயே வேண்டுமானால் உள்ளே வந்து பிரிட்ஜை திறந்து பார்த்து உனக்கு பிடித்ததை செலக்ட் செய்து கொள்ளேன்..” தண்ணீர் வேண்டுமா எனக் கேட்பது போல் இயல்பாக இருந்தது அவனது பேச்சு..
உடல் முழுவதுமே அனலாய் எரிய, ஆராத்யா சட்டென எழுந்துவிட்டாள்..
“இல்லை இதெல்லாம் எனக்கு பழக்கமில்லை.. நான் வருகிறேன்..” வாசல் கதவை நோக்கி நடந்தாள்..
“எதற்கிந்த நாடகம்..?” பின்னால் கேட்ட அவன் குரலில் குழம்பி திரும்பி பார்க்க, அவன் சோபாவில் பின்னால் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.. எள்ளலாய் அவளை பார்த்தபடி இருந்தான்.
“இதற்காகத்தானே வந்தாய்..? பிறகு ஏன் இந்த வேசம்..? இதெல்லாம் பிடிக்காதவள் போல் நாடகம்..?”
“எதற்காக வந்தேன்..?” ஆராத்யாவிற்கு அவனது நடவடிக்கைகள் கொஞ்சமும் புரியவில்லை.. இவன்.. இதோ போன நிமிடம் வரை.. டிரேயில் பியர் டின்களை வைத்து அவளிடம் நீட்டுவதற்கு முந்திய நிமிடம் வரை.. மிகுந்த கண்ணியவானாக, உயர் மட்ட கனவானாகத்தானே நடந்து கொண்டிருந்தான்.. திடுமென ஏன் ஏதேதோ பேசுகிறான்..? புரியாமல் தான் இப்படிக் கேட்டாள்.
“என்னை தனியாக சந்தித்து, என் மனம் போல் பேசி, என் விருப்பம் போல் நடந்து கொண்டு..” பேசியபடியே எழுந்து அவளை நோக்கி நடந்து வந்தவன், “என் ஆசையை தீர்த்து வைத்து விட்டு.. பிறகு..” என்றபடியே அவளை இறுக அணைத்தான்..
மித மிஞ்சிய அதிர்ச்சி தாக்கும் போது முதலில் மூளை மரத்து போகும்.. என்ன செய்வதென்று ஒண்ணுமே தோன்றாமல் எண்ணங்கள் குழம்பும்.. ஆராத்யாவின் நிலையும் இப்போது அதுதான்.. மூளையோடு சேர்ந்து உடம்பும் மரத்துப் போய்விட்டது.. அவளுக்கு, நடக்கும் நிகழ்வுகள் எதுவுமே அவளுக்கு உறைக்கவில்லை..
இ.. இவன் என்ன சொல்கிறான்..?
“டோன்ட் ஃபியர் பேபி.. ஈவினிங் நீ இங்கிருந்து போகும் போது, நிச்சயம் உன் ஹெல்மெட்டுக்களை என் கம்பெனியோடு சேர்த்துக் கொள்ளும் அக்ரிமெண்டில் என் சைன் வாங்கி விட்டுத்தான் போகப் போகிறாய்.. ஆனால் அது பிறகு.. இப்போது நமக்குள் நிறைய இருக்கிறது.. ஒரு முழு பகல் பொழுது நமக்கு இருக்கிறது.. இந்த பியரோடு மிகவும் சந்தோசமாக நமது நேரத்தை நாம் கொண்டாடப் போகிறோம்..” அவள் காதோரம் ஒரு விதமான கிசுகிசுப்போடு கேட்ட அவனது குரல் முடிந்த போது அவள் கழுத்தோரம் அவனது இதழ்கள் புதைந்திருந்தன..
ஆரா, இவன் உன்னை தவறான உறவுக்கு அழைக்கிறானடி, உன்னோடு தொழில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டுமானால், நீ அவனோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்கிறான், இவன் உன்னை ஒரு தேர்ட் ரேட்.. அதற்கு மேல் மனதிற்குள்ளாக கூட எதையும் நினைக்க முடியாது போக, ஆராத்யாவின் மூளை அவனது இதழொற்றலில் இடி, மின்னலை உணர்ந்து விழித்துக் கொண்டது..
அசுர பலமொன்றை அவளது கைகளுக்கு அவள் மூளை அனுப்ப, அமைதியாய் நின்ற அவளது நிலையால் கொஞ்சம் நெகிழ்வாகவே அவளை தழுவியிருந்த ஆர்யனின் கையிலிருந்து அவளால் அதிரடியாக விடுபட்டுக் கொள்ள முடிந்தது..
திடுமென தன்னை தள்ளி விட்டவளை கேள்வியாய் பார்த்தவன், மீண்டும் தன் இரு கைகளையும் நீட்டி அவள் தோள்களை பற்ற முயல, ஆராத்யா சற்றும் யோசிக்காமல் அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.
“டோன்ட்.. யு.. ராஸ்கல்..” பற்கலைக் கடித்தபடி ரௌத்ரமாய் வார்த்தைகளை சிதறவிட்டாள்..
“ஏன்..? இந்த அக்ரிமெண்ட் தவிர வேறு எதுவும் தேவைகள் உனக்கு இருக்கிறதா..? சொல்லு, அதையும் தர டிரை பண்ணுகிறேன்.. பணம்..? நகை..?” கேட்டபடி பின்னடைந்து கொண்டிருந்தவளை நெருங்கிக் கொண்டிருந்தவனின் காலெட்டுக்களில் சிறிதும் தடுமாற்றம் இல்லை.. இலக்கை அடையும் அம்பின் லட்சியம் இருந்தது..
“டேய் வேண்டாம்டா, தள்ளிப் போயிடு.. கிட்டே வராதே.. நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான்கிடையாது..” ஆராத்யா குரல் தந்தியடிக்க பின்னால் நகர்ந்தபடியே போய் வாசல் கதவில் மோதி நின்றாள்.
சட்டென திரும்பி கதவு குமிழை திருகி திறக்க முயல, கதவு அசைய மறுத்தது..
“இ.. இதை எப்படி தி.. திறக்கனும்..? திறந்து விடு.. நா.. நான் வெளியே போகனும்.. வே.. வேண்டாம்.. கிட்டே வராதே.. அடிப்பேன்.. எ.. என்னைத் தொடதே.. அடிப்பேன்.. நா.. நான் போகனும்.. க.. கதவை திற..” அவனையும் கதவையும் மாறி மாறி பார்த்தபடி, ஒரு கையில் தனது ஹேண்ட் பேக்கை அவனை அடிக்கவென கேடயம் போல உயர்த்திப் பிடித்தபடி, மறுகையால் கதவுக் குமிழை திருகினாள்..
கை வியர்வையில் பிடிபடாமல் வழுக்கியது கதவுக் குமிழ்.. அவளது பரிதவிப்புகளை சற்றுத் தள்ளியே நின்று விட்டிருந்த ஆர்யன் கைகளைக் கட்டிக்கொண்டு நிதானமாக வேடிக்கை பார்த்தான்.. அவனது கன்னத்தில் ஆராத்யாவின் கை விரல்கள் தடித்து சிவந்து அடையாளம் ஏற்படுத்தியிருந்தன.. இந்த அவனது நிதானம் ஆராத்யாவினுள் மேலும் குளிரூட்டியது..
“வேண்டாம்டா பொறுக்கி.. பக்கத்தில் வராதே..” அவளை நோக்கி எட்டெடுத்து வைத்தவனை பார்த்து உயர்ந்த குரலில் கத்தினாள்.. தோள்களை குலுக்கியவன் அதே இடத்தில் நின்று கொண்டான். மேலும் சில நிமிடங்கள் அவள் தவித்தலை வேடிக்கை பார்த்தவன் மெல்ல வாய் திறந்தான..
“அந்த குமிழின் அடியில் ஒரு லீவர் இருக்கும், அதனை உள்ளே அழுத்திவிட்டு குமிழை திருப்ப வேண்டும்.. திறந்து கொள்வாயா..? வர வேண்டுமா..?” கேட்டபடி அவன் மெல்ல அசைவதற்குள், அவன் விபரம் சொன்ன அடுத்த நொடியே ஆராத்யா கதவைத் திறந்திருந்தாள்..
நொடியில் வீட்டின் வெளியே நின்றவள் வீட்டினுள்ளிருந்து அவன் ஏதோ சொல்வது போல் தெரிய, அதனை காதில் வாங்க விரும்பாது கதவை அடித்துப் பூட்டினாள்.. வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.. லிப்டின் முன்னால் சிறிய கூட்டமிருக்க பதட்டத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள்..
ஆர்யன் அவனது அப்பார்ட்மெண்ட் கதவை திறந்து வெளியே எட்டி இவளைப் பார்த்தான்.. ஆராத்யா வேகமாக லிப்டை விட்டு விட்டு படிகளில் இறங்கத் தொடங்கினாள்.. படிகளின் ஒவ்வொரு திருப்பத்திற்கும் திரும்பி பார்த்துக் கொண்டாள்.. கீழே வந்து தனது ஸ்கூட்டியை எடுத்து நெடுஞ்சாலைக்கு வந்த பிறகும் அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்தபடியேதான் இருந்தாள்..
அவள் வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டி மேல் தாழ்ப்பாள், கீழ் தாழ்ப்பாள் எல்லாம் போட்டு, சன்னல்களையும் மூடி ஸ்கிரீனை இழுத்து விட்ட பிறகே அவளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்தது.. தளர்வாய் சோபாவில் சரிந்தாள்..
சை எப்பேர்பட்ட மோசமான மனிதன் அவன்.. நம்பி வீட்டிற்கு வந்த பெண்ணை எப்படியெல்லாம், யோசித்தபடி கிடந்தவளுக்கு அவன் அணைத்து முத்தமிட்டது நினைவு வர விலுக்கென எழுந்தாள்.. வேகமாக பாத்ரூமிற்கள் போய் ஷவரை திருப்பி விட்டு அதனடியில் நின்றாள்.. அசிங்கமாய், அருவெறுப்பாய் அவள் உடல் சிலிர்த்து துடித்தது..
உடலில் படிந்தவிட்ட ஏதோ கறையை சுத்தப்படுத்துவது போன்ற வேகததுடன் நெடுநேரம் நீருக்கடியில் நின்றுவிட்டு, உடல் ஈரம் துடைத்து உலர்ந்த உடைக்கு மாறியவளின் கண்கள் இப்போது ஈரமாகத் துவங்கின..
ஏன்டா.. உனக்கு என்னைப் பார்த்தால் அவ்வளவு கேவலமானவளாக தெரிகிறதாடா முட்டாள்.. பொறுக்கி.. மனம் போனபடி அவனை வைதபடி மீண்டும் சோபாவில் சாய்ந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்..
மீண்டும் ஆராத்யாவிற்கு விழிப்பு வந்த போது மனோரமா அவளது தலையை வருடியபடி இருந்தாள்..
“ஆராக்குட்டி ஏன்டா இங்கே சோபாவிலேயே படுத்து விட்டாய்..? உள்ளே கட்டிலில் வசதியாகப் படுத்திருக்கலாமேடா..”
அம்மா வேலையிலிருந்து திரும்பி விட்டதை உணர்ந்த ஆராத்யாவிட மிருந்து இவ்வளவு நேரம் சூழ்ந்திருந்த தனிமை ஒதுங்கிக் கொள்ள, ரணப்பட்டிருந்த மனம் உடனடி ஆறுதலை தேட, வேகமாக தலையை தாயின் மடியில் வைத்துக் கொண்டாள்..
“என்னடா.. ப்ரெண்ட்சோட படிக்க போகிறேன்னு போனாயே.. எப்போது வந்தாய்..? சாப்பிட்டாயா..? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்..?” ஆதரவோடு தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்..
“பசியில்லைம்மா.. சாப்பிடலை..”
“என்ன பொண்ணுடி நீ..? சமைத்து டேபிளில் வைத்து விட்டு போனதை எடுத்து போட்டு சாப்பிட முடியாதா..? என்னவோ போ.. சரி இரு.. சூடாக தோசை சுட்டுட்டு வர்றேன்..” புலப்பத்துடன் போனவளை வெறித்தபடி படுத்திருந்தாள்..
தட்டில் வைத்த தோசையை தடவியபடி அமர்ந்திருந்த மகளை புருவம் சுருக்கி பார்த்தாள் மனோரமா..
“ஆரா ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்..?”
ஆராத்யா தலையை உலுக்கிக் கொண்டாள்..
“ஒன்றுமில்லை மம்மி.. ஒரு மாதம் ஸ்டடிலீவ் விட்டுட்டாங்க.. நீயும் அப்பாவும் காலையில் வேலைக்கு போனால் நைட்தான் வர்றீங்க.. எனக்கு ரொம்ப போரடிக்குது.. அதுதான் கொஞ்சம் டல்லாக இருக்கிறது..” எவனோ ஒருவனிடம் போய் முட்டாள்தனமாக மாட்டிக் கொண்ட தனது அறிவில்லாத தனத்தை தனது தாயிடம் சொல்ல ஆராத்யா விரும்பவில்லை.
“ஒரு மாதத்திற்கு நீ ப்ரீயா ஆரா..?” மனோரமா ஆர்வமாகக் கேட்டபடி ஆராத்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள்.
“ம்.. ஏன் மம்மி..?”
“நாம் ஊருக்கு போவோமா..?”
“எந்த ஊருக்கு..?”
“என் அம்மா ஊருக்கு, அண்ணன் மகளுக்கு இன்னமும் இரண்டு வாரங்களில் திருமணம்.. அண்ணனும், அண்ணியும் வந்து பத்திரிக்கை வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.. நாம் இரண்டு வாரம் அங்கே போய் தங்கி கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணி விட்டு வருவோமா..?”
“உன் பேங்க்..?”
“எனக்கு லீவு இருக்கிறது.. எடுத்துக் கொள்ளலாம்..”
“அப்பா..?”
“அவருக்கு ஆபிஸ் டூர் இருக்கிறதாம்.. வர முடியாதாம்..” இதைச் சொல்லும் போது மனோரமாவின் முகம் இறுகியது..
“நீயாவது என் கூட வாயேன் ஆரா..”
ஆராத்யா சட்டென முடிவெடுத்தாள்.. அவளுக்கு என்னவோ சென்னையே திடீரென பிடிக்காமல் போயிருந்தது.. எந்நேரமும் பர பரப்பும், பட படப்புமா இயங்கும் அவ்வொரு நகரம், தன் பாதையிலிருந்து நூலிழை தவறுபவர்களையும் உடனே விழுங்க காத்திருக்கும் ஓநாய் போல் அவளுக்குத் தோன்றியது.. சிறிது நாட்கள் இந்த சந்தடிகளை விட்டு விலகி அமைதியாக இருந்து விட்டு வந்தால் என்ன..?
“சரிம்மா.. நாம் போகலாம்..” தாய்க்கு சம்மதம் சொன்னாள்.. உடன் மனோரமாவின் முகம் மலர்ந்தது..
“தேங்க் யூ ஆரா” மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள்..
“எந்த ஊர்மா..?”
பெட்டியில் துணிகளை அடுக்கியபடி கேட்ட மகளுக்கு மனோரமா உற்சாகமாக பதிலுரைத்தாள்..
“தக்கலை..”
-(கனா தொடரும்…)