நிலவில் தடம்பதித்தது இந்தியா – பள்ளி மாணவர்கள் கொண்டாட்டம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவைத் தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்தது.
கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக அதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர். அதனையடுத்து கடந்த 17ம் தேதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. இது நிலவில் தரை இறங்கி விக்ரம் லேண்டர் நிலவைத் தொட்டது. இந்தத் தகவலை பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது,
“நிலவின் தென்துருவப் பகுதியில் விண்கலத்தை இறக்கிச் சோதிக்க அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் மட்டுமே ஆய்வுகளைச் செய்துள்ளன. மேலும் பல நாடுகள் முயற்சி செய்தும் நிலவில் தரை இறக்க முடியவில்லை. ரஷ்யா சமீபத்தில் லூனா-25 என்கிற விண்கலத்தை அனுப்பியது. ஆனால் கடைசி நேரத்தில் அதன் லேண்டர் சாதனம் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நிலவில் மோதியதில் திட்டம் தோல்வியடைந்தது.
இந்தியாவின் தொடர் முயற்சி
இஸ்ரோ சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்கான முதல் முயற்சி 2008ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்திரயான் விண்கலம் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்தது.
இரண்டாவதாக, 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தாலும் விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் மோதியது. இருந்தாலும் அந்த சந்திரயான்-2 விண்கலம் தற்போதும் நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து திட்டமிட்டு சந்திரயான்-3 திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
சந்திரனில் மனிதர்கள் வாழத் தகுதியுள்ளதா எனக் கண்டறிய இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. சந்திரனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 திட்டத்துக்கு மொத்தம் 600 கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொண்டாட்டம்
சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், முருங்கப்பாளையத் தெருவில் உள்ள வீரமுத்துவேலின் தந்தையைப் பாராட்டி ஊர் மக்கள் சால்வை அணிவித்தனர்.” என்றார்.
பிறகு இந்தச் சாதனையைச் செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,
பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவரையும் பாராட்டி பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.
நேற்றைய தினம் தமிழகத்தில் நகரம், கிராமம் என்றில்லாமல் நாடெங்கும் சந்திரயான்-3 நிலவில் தரை இறங்கியதைப் பார்த்து மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார்கள். இது இன்னொரு சுதந்திர நாளாகத் தெரிந்தது.