எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 6 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 6 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 6

த்தனை நாட்கள் இங்கே தங்கப்போறிங்க?” அந்த ஹோட்டலின் அழகான வரவேற்பாளினி கேட்க குமணன் சொன்னான்.

“வர்ற பத்தாம் தேதிவரை. ஒருவாரம் இங்கேதான்” என்று சொன்னவன் அவள் அறியாதவாறு அர்த்தத்துடன் கோதையைப் பார்த்து கண்ணடித்தான்.

கோதை வேறு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டாள். வெட்கத்துடனா? வேண்டுமென்றா என்று கண்டுபிடிக்க நேரம் கொடுக்காமல் வரவேற்பாளினி பெரிய ரிஜிஸ்தரை நகர்த்தி கையெழுத்து வாங்க வேண்டிய இடங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டாள்.

“ரூம் நம்பர் நூற்றி எட்டு “சாவியை அவன் பக்கம் நகர்த்தியவள் “நீங்க ரொம்ப லக்கி” என்றாள்.

“எஸ். “என்றான் கோதையை ஆசையாகப் பார்த்து பெருமையாக தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.

“நான் அதிர்ஷ்டம்னு  சொன்னது எங்க ஹோட்டல்ல உங்களுக்கு கிடைக்கப்போற சந்தோஷத்தை. ஓன்பதாம் தேதி எங்க ஹோட்டலோட சில்வர் ஜுப்ளி விழா. அந்த விழாவில நீங்க என்ஜாய் பண்ண நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு. அது மட்டும் இல்லை புதுசா கல்யாணம் ஆன ஜோடிகளுக்கு நிறைய காம்படிஷன்ஸ் அரேஞ்ச் பண்ணியிருக்கோம். நீங்க நிறைய பரிசுகளை அள்ளலாம். இந்தாங்க இன்விடேஷன். கண்டிப்பா கலந்துக்கங்க”  தலை சாய்த்து அழகாக சிரித்தாள்.

“கண்டிப்பா. எல்லா பரிசுகளையும் நானே ஜெயிச்சுடறேன்.” என்றபடி சாவியையும் எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.

பணியாள் அவர்களுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு முன்னால் நடக்க மனைவி பக்கம் திரும்பினான்.

“என்ன கலகலப்பே இல்லாமல் வர்றே” என்றபடி தோளில் கைப்போட்டான். இலாவகமாக அந்தக் கையை விலக்கியவள் “ஒண்ணுமில்லை எல்லா பரிசுகளையும் நீங்களே வாங்கிடுவீங்கன்னு சொன்னிங்களே. அதான் எப்படின்னு யோசிக்கறேன்” என்று சமாளித்தாள்.

“இதென்ன பெரிய விஷயம்? நீயே விலைமதிப்பில்லாத பரிசு. நீயே எனக்கு கிடைச்சுட்டே. மத்தெதெல்லாம் எனக்கு சுஜிப்பி..”

ஏனோ அவனுடைய ஆனந்தக்களிப்பில் பங்கெடுத்துக்கொள்ள முடியவில்லை அவளால்.

குமணன் கோதையிடம் எதையோ வித்தியாசமாக உணர்ந்தான். அவள் இயல்பாக இல்லையோ என்று தோன்றியது. புது பெண். அதுவும் ஏழைவீட்டுப்பெண். பங்களாவும் காரும் பயமுறுத்தியிருக்கும். சாதாரண உடையணிந்த உடம்பு சரிகை வேய்ந்த புடவைகளை சமாளிக்க திணறியிருக்கலாம். தங்கத்தையும் வைரத்தையும் அணிந்ததால் உண்டான தடுமாற்றமாக இருக்கலாம்.

இப்படித்தான் எண்ணினான்.ஆனால் இன்பவேளைகளின் போதுகூட இதமாக அவள் இருக்கவில்லை என்பதை உணர்ந்தபோது உறுத்தியது.

கோவா கடற்கரையில் அவனுடைய குதுர்கலத்தில் அவள் குழையாத போது மணலில் அமர்த்திக் கேட்டான்.

“கோதை நாம இங்க வந்திருக்கறது சந்தேஷத்தை தவிர வேறு எதையுமே சிந்திக்க இல்லை. ஆனா.. நீ எதையோ தீவிரமா யோசிச்சுக்கிட்டிருக்கறமாதிரியே இருக்கியே. ஏன்?”

“இல்லையே. நான் சாதாரணமாத்தான் இருக்கேன்.”

“நான் நம்ப மாட்டேன். என்னமோ இருக்கு. ஆமா.. நாம கிளம்பி வரும்போது அம்மா தனியா கூப்பிட்டு என்னமோ சொன்னாங்களே? என்ன?’

“ஒண்ணுமில்லை. உங்களை பத்திரமா பார்த்துக்க சொன்னாங்க. ஏதோ ஸ்கூல்ல குழந்தையை டூரூக்கு அனுப்பும் போது டீச்சர்க்கிட்ட சொல்லி அனுப்பற மாதிரி.”

“அம்மாவுக்கு நான் எப்பவும் குழந்தைதான். என்னை இப்படி வெளியில அனுப்பறது அம்மாவுக்கு பிடிக்கலை. அதான்.  தவிர தேன்நிலவுல மனைவி புருஷனுக்கு காமசூத்திரத்தை சொல்லித்தர்ற டீச்சராத்தான் இருப்பா. அதான் அம்மா சூசகமா சொல்லியிருக்காங்க. நீதான் புரிஞ்சுக்கலை. இன்ட்ரஸ்ட் காட்ட மாட்டேங்கறே!”

அவனுடைய மோக வார்த்தைகள் காதிலே விழாதவாறு அவள் மாமியாரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள்.

“அதுமட்டும் இல்லை. உங்களை தனியே எங்கேயும் விட்டுடக்கூடாதுன்னு சொன்னாங்க”

“பத்தியா?அம்மாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. கோவாவுல…அதோ அந்த பெண்ணைப்பார்” அறைகுறை ஆடையுடன் கடல் அலைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணைக் காட்டினான்.

“இந்த மாதிரி பொண்ணுங்க கோவவுல பையனை மயக்கி அழைச்சுக்கிட்டுப் போய்டுவாங்கன்னுதான் அம்மா பயந்திருப்பாங்க.அதனாலதான் தனியா விடாதேன்னு சொல்லியிருப்பாங்க. நீ என்னை விட்டாலும் நான் போகமாட்டேன். நீதான் என்னைக் கட்டிப் போட்டிருக்கியே…” என அவளை தன்னோடு சேர்த்து தன் காதல் களியாட்டங்களைத் துவக்கினான்.

விண்ணை மினுக்கி மிகைப்படுத்தும் நட்சத்தரங்களாய்…

மண்ணை மலர்ந்து மகிமைப்படுத்தும் மலர்களாய்…

பெண்ணை அணியவைத்து பேரழகுபடுத்தும் நகைகளாய்… அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் வர்ணவிளக்குகளால் ஜொலித்தது.

சில்வர் ஜுப்ளியை கொண்டாட சிறப்பாக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது. கலைநிகழச்சிகளை நடத்த வரவழைக்கப்பட்ட கலைஞர்கள் கண்ணில் தென்பட்டவண்ணமே இருந்தனர்.

பெரும்பாலும் அன்றைய தினத்தை வெளியில் செலவிட யாரும் விரும்பவில்லை. வெளியில் சென்றவர்களும் மாலை சீக்கிரமே விழா நடக்கும் லானிற்கு வந்துவிட்டனர்.

ஏஞ்சலைப்போல் எதிரே வந்து நின்றவளைப் பார்த்து விசிலடித்தான்.

“அழகாய் இருக்கிறாய். பயமாக இருக்கிறது” என்றான்.

“எதுக்கு பயம்?” பச்சைநிற கற்கள் பளீரிடும் காதணிகள் அசைய சிரித்தாள் கோதை.

“பார்ட்டியில எல்லா ஜென்ஸம் உன்னையே பார்க்கப் போறாங்க. ஜொள்ளுவிடப் போறாங்க”

“உங்களை மாதிரியே எல்லா ஆம்பளைங்களும் அவங்கவங்க மனைவியை நினைச்சு இப்படி பயந்தா..?”

“உன்னைவிட யாரும் அழகாயிருக்கப் போறதில்லை.”

“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு. அவனவனுக்கு அவனவன் பொண்டாட்டிதான் அழகு. பார்ட்டியில பாருங்க.. நீங்க தன் பொண்டாட்டியைப் பார்க்கறதா எவனாவது நினைப்பான்.”

“ச்சீ…என்னை என்ன அவ்வளவு கேவலமாவா நினைக்கிறே. நான் ஏகப்பத்தினி விரதன்.”

“என்னைப் பொருத்தவரை ஏகப்பத்தினி விரதனைவிட மத்த ஆண்களை காமாந்தகனா நினைக்கறவனுங்கதான் ஆபத்தானவன்கள். “

“அம்மா தாயே…உன் அழகை புகழ்ந்தா நீ மயங்குவேன்னு பார்த்தா இப்படியா மட்டமா பேசுவே. கிளம்பு முதல்ல.”அவளோடு வெளியே வந்து அறைக்கதவை பூட்டினான்.

நிகழ்ச்சி நடக்குமிடம் மகிழ்சியைத்தவிர இந்த உலகில்  எதுவுமே இல்லை என உணர்த்தியது.

வர்ணவிளக்குகளும் அலங்காரமும் மனிதனால் சொர்க்கத்தை பூமியில் உருவாக்க முடியும் என்பதை நிரூபித்திருந்தன.

ஆடை முழுவதும் வைரக்கற்களை வைத்து தைத்ததைப் போல் வர்ணம் வர்ணமாய் பூசிய கூந்தல் பறக்க மேடையில் மெல்லிய இசைக்கு ஏற்றபடி அழகி ஒருத்தி ஆடிக்கொண்டிருந்தாள். அத்தனை விழிகளும் அவளுடைய அழகை அள்ளிப்பருகிக் கொண்டிருந்தன.

ஆழகழகான பெண்கள் ஆடைக்குறைப்பு செய்திருந்தனர். கோப்பை மட்டும் கைகளில் நிறைந்து வழிந்தது. குடிப்பதில் நாங்கள் ஆண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்பதை அவர்கள் குதுரகலத்துடன் நிரூபித்துக்கொண்டிருந்தனர்.

குத்துவிளக்கு ஏற்றிவைத்து குழுமி நின்று குடித்ததைப்போல் கோதை அமர்ந்திருந்தாள். அவர்கள் மேசையில் மட்டும்தான் மதுபானம் இல்லை. பழரசம் மட்டும் பாவமாக இருந்தது.

“இதெல்லாம் உனக்கு புதுசாயிருக்கு இல்லை? “ அரையிருட்டில் மலங்க மலங்க விழித்த அவளுடைய விழிகளைப் பார்த்தவாறே கேட்டான்.

“ம்…” குடிக்கும் பெண்களையே வைத்தக்கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“பேசாம வெளியில எங்காவது போயிருக்கலாம்னு தோணுதா?”

“அப்படியெல்லாம் இல்லை”

“பிடிக்கலைன்னா போயிடலாம்”

“வேண்டாம் அந்த பொண்ணு ரொம்ப அழகா ஆடுது, பார்க்கலாமே”

“இதையெல்லாம் நீ ஆபாசம் அசிங்கம்னு சொல்லுவேன்னு நினைச்சேன்”

“இப்படி ஆடறதால அவங்க அசிங்கமானவங்கன்னு அர்த்தம் இல்லை. அவங்களுக்கு இது தொழில்”

தட்டில் இருப்பதை சுவைத்தவாறே அந்த பெண் சுழன்று சுழன்று ஆடுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆட்டத்தை ரசிக்கும் சுவாரசியத்தில் குமணன் பேசுவதைக்கூட கேட்க மறந்தாள். அந்தப்பெண் ஆடி முடிக்கும்வரை பார்த்துக்கொண்டேயிருந்தவள் ஆட்டம் முடிந்துதான் அவன் பக்கம் திரும்பினாள்.

திரும்பியவள் திடுக்கிட்டாள்.

குமணன் மேசை மீது கிழந்துக்கிடந்தான். இவன் பேசியதற்கு பதில் அளிக்காததால் டான்ஸைக்கூட பார்க்காமல் கவிழ்ந்துக்கிடக்கறானா? துணுக்குற்றவளாய் அவனை அசைத்தாள்.

நிமிர்ந்தவனின் கண்களைப் பார்த்து லேசாக அதிர்ந்தாள். அவனுடைய இரண்டு கண்களும் லேசாக சிவந்திருந்தன. சற்று முன் பாராத தோற்றம் அது.

“என்னாச்சு ஏன் ஒருமாதிரியா இருக்கீங்க?” என்றாள்.

“தெரியலை. திடீர்ன்னு தலைவலிக்கறமாதிரி இருக்கு”

“எதனால?”

“தெரியலை”

“அப்படின்னா ரூமுக்குப் போயிடலாமா?”

“வேண்டாம் கொஞ்ச நாழி இருக்கலாம்”

அடுத்த ஆட்டக்காரி ஆட வந்தாள். அவளுடைய ஆட்டத்தில் கவனத்தை செலுத்த முயன்ற கோதையை அழைத்தான் குமணன்.

“கோதை.. அவன் பக்கம் திரும்பினாள். அவன் தலையைப்பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

“என்ன? ரொம்ப தலையை வலிக்குதா?”

“கோதை”

“சொல்லுங்க.”

“எனக்குள்ள ஏதேதோ ஃபிலிங்க்ஸ்”

அவனை புரியாமல் பார்த்தாள்.

“எ…னக்கு குடிக்கனும் போலிருக்கு”

“இங்க உங்களைத்தவிர எல்லாரும் குடிக்கிறாங்க. அதனால உங்களுக்கும் ஆசை வருது. ஆசையாயிருந்தா..கொஞ்சமா குடிங்களேன். இதிலென்ன தப்பு”

“எனக்குள்ள உண்டாகறது ஆசையில்லை. வெறி”

அவனை புரியாமல் பார்த்தாள்.

“உனக்கு புரியலை இல்லை? எனக்கும் புரியலை. ஏன் இப்படின்னு. எனக்கு….எனக்கு….நிறைய நிறைய குடிக்கனும் போலிருக்கு. எனக்கு தொண்டையை  என்னவோ செய்யுது. அப்படியே..அப்படியே…அந்த பார்ல இருக்கற அத்தனை பாட்டிலையும் எடுத்து மொட மொடன்னு குடிக்கனும் போலிருக்கு.”

அவனை பயமாகப் பார்த்தாள்.

“உங்களுக்கு குடிக்கற பழக்கமே இல்லைன்னு சொன்னிங்க”

“ஆமா..எனக்கு குடிக்கற பழக்கம் இல்லை. தொட்டது கூட இல்லை. அதோட டேஸ்ட் எப்படி இருக்கும்னு கூட எனக்குத் தெரியாது’

“அப்பறம் எப்படி இப்படியாகுது? குடிச்சே பழக்கம் இல்லாதவங்களுக்கு குடிக்கனும்னு ஆசை வரலாம். ஆனா…இப்படி வெறித்தனம் எப்படி வரும்?”

“அதான் எனக்குத் தெரியலை கோதை. நான் குடிச்சதே இல்லை. அந்த டேஸ்ட் எப்படி இருக்கும்னு கூட எனக்குத் தெரியாது. ஆனர என் நாக்குல..இங்க இருக்கற எல்லா மது பானங்களையும் டேஸ்ட் பண்ணின மாதிரியிருக்கு.”

கோதை கொல்லென சிரித்தாள்.

“நீங்க எதுக்காக பொய் சொல்றிங்க?”

“பொய் சொல்றேனா?”

“பின்னே? கல்யாணம் ஆன புதுசுல எல்லா ஆம்பளைங்களும் பொண்டாட்டிக்கிட்ட பொய் சொல்லுவாங்கத்தான். ஆனா…நீங்க சொல்ற பொய் அண்ட புளுகு ஆகாச புளுகா இருக்கே. பெரிய தொழிலதிபர். குடிப்பழக்கம் இல்லாமலா இருக்கும்?. எதுக்கு என் முன்னாடி இப்படி நடிக்கனும்? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா? விருப்பப்பட்டா குடிங்களேன் ஒரு லிமிட்டோட”

அவன் அவளை எரித்துவிடுவதைப்போல் பார்த்தான். இப்பொழுது அவனுடைய கண்கள் அளவுக்கு மீறி குடித்ததைப்போல் இன்னும் நெருப்பாய் சிவந்து ஜொலித்தது. அந்தக் கண்களைப் பார்க்கவே அவளுக்கு சக்தி இல்லை.

அவன் சட்டென்று எழுந்தான். விறு விறுவென அங்கிருந்த மினி பாரை நோக்கி சென்றான். மேசை மீதிருந்த பாட்டில்களில் ஒன்றை எடுத்தான். மடக் மடக்கென குடிக்கத் தொடங்கினான். அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள் கோதை. குடிப்பழக்கமே இல்லை என்றவன் இப்படிக் குடிப்பானா? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே…

அவன் இரண்டாவது பாட்டிலை கையில் எடுத்து இரத்தவெறி பிடித்த காட்டேரியைப் போல் குடித்துக்கொண்டிருந்தான். அடுத்து…அடுத்து…என அவன் பாட்டுக்கு பாட்டில்களைக் கையில் எடுக்க பயந்துபோன கோதை எழுந்து அவனிடம் ஓடினாள்.

கையிலிருந்த பாட்டிலை பிடுங்கி மேசையில் வீசியவள் “ என்ன பண்றீங்க நீங்க…” என கத்தினாள்.

“விடு என்னை! விடு என்னை! நான் குடிக்கனும் நான் குடிக்கனும் “ பெரிதாக கத்தியவனின் கண்களும் முகமும் அவனுடைய வெறித்தனமும் அவளை பயமுறுத்தின.

-(தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...