உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று
உலக நுரையீரல் புற்றுநோய் தினமின்று!
நுரையீரல் புற்றுநோய் இந்தியாவின் புற்றுநோய் நிறுவனத்தால் பெரிதும் கணக்கிடப்படாத ஒன்று. மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் பற்றி அதிகமாக பேசுவதைப் போன்று நுரையீரல் புற்றுநோய் பற்றி அதிகம் பேசுவதில்லை. நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆயுட்காலத்தை 1 வருடத்திற்குள் மருத்துவர்களும் கணிப்பதால் சிகிச்சை அளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணம்
1. புகைபிடித்தல் புற்றுநோய்க்கு முதல் காரணம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சிகரெட்டில் 4000-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே புற்றுநோய்க்கு ஆதாரம். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவருக்கு 20-25 மடங்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.
2. புகைப் பிடிக்காதவராக இருந்தாலும்கூட புகைப் பிடிப்பவரின் உடன் இருந்தால் அந்த புகையை சுவாசிக்கும் நபருக்கும் புற்றுநோய் வரும் அபாயம் மிக அதிகம்.
3. வாகனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றால் காற்று மாசுபட்டு நுரையீரல் புற்றுநோயை வரவைக்கிறது.
4. வேதியியல் வெளிப்பாடுகளான ஆஸ்பெஸ்டாஸ் அல்லது ரேடன் போன்றவற்றால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
5. காச நோய், நாட்பட்ட நுரையீரல் நோய்கள் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கின்றன. சிகரெட் பிடிக்காவிட்டாலும் இவர்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து ஆறுமடங்கு அதிகம்.
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்
இருமல்
மூச்சுவிடுவதில் சிரமம்
இருமல், எச்சிலில் ரத்தக்கசிவு
நெஞ்சு வலி
விழுங்குவதில் சிரமம்
தடுப்பது எப்படி?
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட நினைப்பவர்களுக்கு பல வழிகள் இருக்கின்றன. அவர்கள் தெரபி, நிகோட்டின் மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல யுக்திகளை கடைபிடித்து வெளிவரலாம். புகைப்பிடித்தலை விடுவது அவ்வளவு எளிதல்ல. திரும்ப திரும்ப வேண்டும் என்றே தோன்றும் என்று கூறப்படுகிறது. யு.எஸ் தடுப்பு சேவைகள் சமீபத்தில் ஸ்க்ரீனிங் என்கிற தடுப்பு முறையை பரிந்துரைக்கிறது. அதன்படி புகை பிடித்தவர்கள், பிடிப்பவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி, சி.டி ஸ்கேன் ஸ்க்ரீனிங்கிற்கு உட்படுத்தப்பட வேண்டும்.
நுரையீரல் புற்றுநோயைத் தடுப்பதும், கண்டறிவதும் நம் கையில் உள்ளது. வராமல் இருக்க நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.