காத்து வாக்குல ரெண்டு காதல் – 3 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 3 | மணிபாரதி

அத்தியாயம் – 3

 பாஸ்கரன், ஒரு ஸ்வீட் ஸ்டாலிலிருந்து, கையில் ஸ்வீட் பாக்கெட்டுடன் வெளியே வந்து, ரோட்டின் ஓரமாக நடந்து போய் கொண்டிருந்தார். ஏதோ சந்தேகம் வர, போனை எடுத்து வாட்சப்பில் அட்ரஸை பார்த்தார். பின் ரோட்டில் போகிறவர்களை கவனித்தார். அந்தப் பக்கம் ராகவ் பைக்கில் வந்து கொண்டிருந்தான். அவர் கையைக் காட்டி அவனை நிறுத்தினார். அவன் “என்ன சார்..“ எனக்கேட்டான். அவர் போனை அவனிடம் காட்டி “இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா..“ எனக்கேட்டார். அவன் அவரை ஒரு தடவை மேலும் கீழும் பார்த்தான். பின் “உக்காருங்க.. நானே கொண்டு போய் விடுறேன்..“ என்றான்.

“உங்களுக்கு எதுக்கு தம்பி சிரமம்..“

“ஒரு சிரமமும் இல்ல.. உக்காருங்க..“

அவர் தயக்கத்துடன் ஏறி உட்கார்ந்தார். அவன் பைக்கை ஓட்ட ஆரம்பித்தான்.

“அட்ரஸ்ல இருக்குற வெங்கடாச்சலம் உங்க ஃபிரண்ட்டா சார்..“

“ஆமாம்.. ஃபிரண்ட்டுன்னா 35 வருஷத்துக்கு முந்தைய ஃபிரண்ட்.. அதாவது நானும் அவனும் ஒண்ணா காலேஜ்ல படிச்சோம்.. அப்புறம் தொடர்பு விட்டுப் போச்சு.. ஆனா, மனசுல அவனை என்னைக்கும் நினைச்சுகிட்டேதான் இருப்பேன்.. இப்பதான் ஃபேஸ்புக் வந்து அங்கங்க சிதறி கிடக்குறவங்களை ஒண்ணு சேத்து வைக்க ஆரம்பிச்சுடுச்சே.. என் பொண்ணுதான் ஃபேஸ்புக்க துழாவி அவனோட அட்ரஸையும் போன் நம்பரையும் கண்டு புடிச்சு கொடுத்தா..“

“சூப்பர் சார்..“

இரண்டு தெருக்கள் திரும்பி, ஒரு வீட்டின் முன்னால் பைக்கை நிறுத்தினான். காம்பவுண்ட் சுவற்றில் K S வெங்கடாச்சலம் – ரிட்டையர்ட் தாசில்தார் என்கிற போர்ட் தொங்கிக் கொண்டிருந்தது. அதை கவனித்ததும் பாஸ்கரனின் கண்களில் ஆனந்தம் பொங்கியது. “இந்தப்பைய அவ்வளவு பெரிய ஆளா ஆயிட்டானா..“ என மனசு துள்ளியது.

“இந்த வீடுதான்.. இறங்கிக்குங்க..“

அவர் இறங்கினார். அவனும் பைக்கை ஸ்டேண்ட் போட்டு நிறுத்தினான்.

“ரொம்ப தாங்ஸ் தம்பி..“

“அதுக்கெல்லாம் அவசியமில்ல சார்.. நா வெங்கடாச்சலத்தோட பையன்தான்..“

அவர் ஆச்சரியமாக பார்த்தார். “என்ன சொல்றிங்க..“

“ஆமாம் சார்.. அங்கயே சொல்லி இருப்பேன்.. உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான் இங்க வந்து சொன்னேன்..“

“எல்லாம் இறைவனோட சித்தம்..“

“உள்ள வாங்க..“

அவன் கேட்டை திறந்து உள்ளே அழைத்து வந்தான். வாசலில் செருப்பை கழட்டி விட்டு ஹாலுக்கு வந்தார்கள். ராகவ் “அப்பா.. அப்பா..“ என குரல் கொடுத்தான். ஒரு ரூமிலிருந்து வெங்கடாச்சலம் மிடுக்காக வெளியே வந்தார். பாஸ்கரனை முதலில் யார் என்று அவருக்கு புரியவில்லை. பின் அடையாளம் கண்டு கொண்டு “டேய் பாஸ்கரா..“  என கத்தி, ஓடி வந்து அவரை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

“எத்தனை வருஷம் ஆச்சுடா உன்னைப் பார்த்து..“

“அது இருக்கும் 35 வருஷம்..“

“இப்ப மாதிரி அப்ப கம்யூனிகேசன் இல்ல.. இல்லன்னா தொடர்புல இருந்துருக்கலாம்.. எனிவே, இப்பவாவது தேடி வந்தியே.. ரொம்ப சந்தோஷமா இருக்குடா.. முதல்ல உக்காரு..“

இருவரும் அங்கு கிடந்த சோபாவில் உட்கார்ந்தார்கள். ராகவ் நின்று கொண்டே இருந்தான். வெங்கடாச்சலம் “மாலதி..“ என குரல் கொடுத்தார். மாலதி ஒரு ரூமிலிருந்து வெளியே வந்தாள். அவளும் பாஸ்கரனை யார் என தெரியாமல் தயங்கி நின்றாள். வெங்கடாச்சலம் “என்ன பாக்குற.. நா அடிக்கடி சொல்வனே பாஸ்கர்.. அது இவன்தான்..“ என அறிமுகப்படுத்தினார். அவளது முகத்தில் ஆச்சரியம் பளிச் என தென்பட்டது. “வாங்கண்ண..“ என வரவேற்று, “வீட்ல தினமும் உங்க பல்லவிதான் ஓடிகிட்டு இருக்கும்..“ என்றாள். வெங்கடாச்சலம் “பின்ன.. நாம என்ன சாதாரன ஃபிரண்ட்டாவா பழகுனோம்.. உயிர் நண்பர்கள் இல்லையா..“ என்றார் பெருமையாக. அதைக் கேட்க பாஸ்கரனுக்கும் பெருமையாக இருந்தது.

“சரி, என்னடா சாப்புடுற..“

“ஒரு டம்ளர் தண்ணி குடுக்க சொல்லு, போதும்..“

“நல்லாருக்கே.. இவ்வளவு நாள் கழிச்சு வந்துருக்க.. தண்ணி மட்டும் போதுமாம்..“ என்று கூறி மாலதியிடம் “நல்ல காபி போட்டு எடுத்துட்டு வா.. இவன் சரியான காபி பைத்தியம்..“ என்றார்.

மாலதி உள்ளே போனாள். பாஸ்கரன் தான் வாங்கி வந்த ஸ்வீட் பாக்கெட்டை ராகவ்விடம் கொடுத்தார். அவன் வாங்கி டீப்பாயின் மேல் வைத்து விட்டு “நீங்க பேசிட்டு இருங்க.. நா ஃபிரஷ் ஆயிட்டு வந்துடுறேன்..“ என்று கூறி உள்ளே போனான். வெங்கடாச்சலம் “அப்புறம் இத்தனை வருஷமா எங்கடா இருந்த.. என்ன பண்ணின..“ எனக்கேட்டார்.

“கோயம்புத்தூர்ல இருந்தேன்..  அங்க இருக்குற ஒரு துணி மில்லுல வேலை.. முதல்ல சூப்பர்வைஸரா ஜாய்ன்ட் பண்ணேன்.. ரிட்டையர்ட் ஆகும் போது மேனேஜரா புரமோஷனாகி ரிட்டையர் ஆனேன்..“

“சந்தோஷம்.. ஒய்ஃப் வரலையா.. கல்யாணத்துக்கு கூட என்னை கூப்பிடல..“

“இல்ல.. அவ என்னை விட்டு போய் பதினாறு வருஷமாவுது.. வீசிங் ட்ரபுள்..“

வெங்கடாச்சலம் கவலை அடைந்தார்.

“யார் யாருக்கு எது நடக்கனுமோ அது நடந்துதான தீரும்..“

“ஆறுதல் படுத்திக்குற.. ஆனா, எனக்கு கஷ்டமாதான் இருக்கு..“ என்று கூறி “குழந்தைங்க..“ எனக்கேட்டார்.

“ஒரு பொண்ணு.. பேரு நந்தினி.. இங்க சென்னையிலதான் ஒர்க் பண்றா.. அவளுக்காகதான் கோயம்புத்தூர் வீட்டை வாடகைக்கு போட்டுட்டு, இங்க ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துட்டு வந்து உக்காந்துருக்கேன்..“

“அப்புறம், பண்ணிதான ஆகனும்….“

“நீ தாசில்தாருங்குறத வாசல்ல இருக்குற போர்டை பாத்து தெரிஞ்சுகிட்டேன்.. உனக்கு எத்தனை குழந்தைங்க..“

“எனக்கும் ஒரு பையன்தான்.. இப்ப உன்னை கூட்டிகிட்டு வந்தானே.. அவன்தான்.. பேரு ராகவ்.. ஓ எம் ஆர்ல இருக்குற ஒரு ஐ டி கம்பெனில வேலை பாக்குறான்..“

அப்போது மாலதி காபி எடுத்து வந்து பாஸ்கரனிடம் கொடுத்தாள். அவர் அதை வாங்கி ரசித்து குடித்தார். பின் வெங்கடாச்சலத்துடன் சேர்ந்து பழைய நினைவுகளை பேசி சிரித்தார்.  ஒருநாள் குடும்பத்துடன் சந்திக்க வேண்டும் என இருவரும் வேண்டு கோள் வைத்துக் கொண்டார்கள். பின், பாஸ்கரன் அவர்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட, மாலதி, ஒரு பையில் முறுக்கு, சீடை, தட்டடைஆகிய தின் பண்டங்களை போட்டு அவரிடம் கொடுத்தாள்.

“இது வீட்டுல பண்ணது.. சாப்பிடுறதுக்கு ருசியா இருக்கும்..“

“எதுக்கும்மா இதெல்லாம்..“

“நல்லாருக்கே.. நீங்க வந்ததும் அவர் முகத்துல எவ்வளவு சந்தோஷம்ங்குறத நா பார்த்தனே.. அவரோட கூட பொறந்தவங்க வந்துருந்தா கூட இவ்வளவு சந்தோஷப்பட்டுருக்க மாட்டார்.. எடுத்துட்டு போங்க.. இது மாத்திரம் இல்ல.. இனி ஒண்ணு ஒண்ணா வந்து சேரும்..“

“சரிம்மா..“

வெங்கடாச்சலம் “அவ்வளவுதான் இனி மாலதிய நிறுத்த முடியாது.. நா சும்மா இருந்தா கூட அவ சும்மா இருக்க மாட்டா.. என்னண்ண எப்படி இருக்கிங்கன்னு அவளே போனை போட்டு பேச ஆரம்பிச்சுடுவா..“ என்றார்.

“பேசட்டும்.. பேசட்டும்.. பேசுனா சந்தோஷம்தான..“

வெங்கடாச்சலம் ராகவ்விடம் “பாஸ்கரனை அவன் வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு வா..“ என்றார். அனைவரும் வாசலுக்கு வந்தார்கள். ராகவ் காரை எடுத்து வந்து அவர்கள் முன்னால் நிறுத்தினான். “ஏறிக்கங்க அங்கிள்.“ என்றான். அவர் முன் பக்கம் ஏறி உட்கார்ந்தார். வெங்கடாச்சலமும், மாலதியும் அவருக்கு கையசைத்து விடை கொடுக்க, ராகவ் காரை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பித்தான்.

ஏனோ தெரிய வில்லை, பாஸ்கரனுக்கு ராகவ்வை நிரம்ப பிடித்துப் போயிற்று. இந்த காலத்தில் இப்படி ஒரு பொறுப்பான பிள்ளையா? அதிலும் தனது நண்பனின் மகன் என்பது அவருக்கு கூடுதல் சந்தோஷத்தை தந்தது.

“ராகவ் படிச்சதெல்லாம் எங்க..“

“அண்ணா யுனிவர்சிட்டில..“

“நல்லா படிப்பியா..“

“ஆமாம் அங்கிள்.. யுனிவர்சிட்டில ஃபோர்த் ராங்க்ல பாஸ் பண்ணேன்.. காம்பஸ்லதான் இந்த ஜாப் கிடைச்சுது..“

“அப்படியா சூப்பர்..“

அப்போது அவரது போன் ஒலித்தது. எடுத்து ஆன் பண்ணி “ஆன் தி வேம்மா..“ என்றார். போனை கட் பண்ணி விட்டு “என் பொண்ணு..“ என்றார்.

“அவங்க என்ன பண்றாங்க..“

“உன்னை மாதிரியே ஒரு ஐ டி கம்பெனிலதான் வேலை பாக்குறா..“

“அப்படியா..“

“ம்..“

அப்போது அவரது வீடு இருக்கும் தெரு வந்தது.

“இந்த தெருதான்..“

அவன் அந்த தெருவிற்குள் காரை திருப்பினான். ஐந்தாறு வீடுகளை கடந்த பின் “இந்த வீடுதான்..“ என்றார்.

அந்த வீட்டின் முன்னால் அவன் காரை நிறுத்தினான். அவர் “வீட்டுக்கு வந்துட்டு போப்பா..“ என்றார்.

“இல்ல அங்கிள்.. எனக்கு வெளில கொஞ்சம் ஒர்க் இருக்கு.. இன்னொரு நாள் அப்பா அம்மா கூட வரேன்.“ என்று சொல்லி காரை ஓட்டி சென்றான். அவர் அவன் போவதையே பார்த்து விட்டு, நெகிழ்ச்சியாக வீட்டிற்குள் நுழைந்தார்.
– (காற்று வீசும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...