61 ஆண்டுகளுக்குப்பின் வைரலாகும் ‘பாடாத பாட்டெல்லாம்…’ பாடல்
ஓல்ட் ஈஸ் கோல்டு என்பது எவ்வளவு சரியானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூப்பித்து வருகின்றன பல விஷயங்கள். அவற்றில் ஒன்று தற்போது இளம் நெஞ்சங்களில் இடம் பிடித்து இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதுதான் 61 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்” திரைப் பாடல்.
1962 ஆம் ஆண்டு வெளிவந்த வீரத் திருமகன் என்ற திரைப்படத்தில்தான் இந்தப் பாடல் இடம்பெற்றது. இசை இரட்டையர் விசுவநாதன் இராமமூர்த்தி இசையில் உருவான அந்தப் பாடல் அந்தக் காலத்திலேயே பிரபலமானது. பி.பி.ஸ்ரீனிவாஸ்சின் இனிமையான குரலுக்கு எஸ்.ஜானகியின் அருமையான ஹமிங் குரல் மேலும் மெருகு சேர்ந்தன. இப்பாடலை இயற்றிய கவியரசர் கண்ணதாசன்.
“மேலாடை தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ம்ம் ம்ம் ம்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்…”
என்று தன் கவிதையிலேயே இசையைக் கோத்து எழுதியிருப்பார்.
ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி.எல்.ஆனந்தன் கதாநாயகனாகவும், சச்சு, ஈ.வி.சரோஜா நாயகிகளாகவும் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்தப் பாடல் 61 ஆண்டுகள் கழித்து சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ குழுவினர் ரீமிக்ஸ் செய்து பாடி வீடியோவால் இப்போது வைரலாகி இருக்கிறது. அதை ஒட்டி தற்போது இணையத்தில் அந்தப் பாடல் மேலும் வைரலாகி வருகிறது. அந்தப் பாடலைக் கேட்டு வியந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தன் ருத்ரன் படத்தில் பிரியா பவானி சங்கருடன் ஸ்டைலாக நடனமாடியிருக்கிறார். இப்பாடலை இப்படத்திற்காக இசையமைப்பாளர் தரன்குமார் மறு இசை உருவாக்கம் அமைத்து சத்யபிரகாஷ், நித்யஸ்ரீ வெங்கடரமணன், எம்.சி. டி. ஆகியோரைப் பாடவைத்தார். அதுவும் சூப்பர்ஹிட்.
அதுமட்டுமல்லாமல் இணையத்தில் பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு மயங்கி அழகாக ஆடி, பதிவிட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இணையவாசிகளும் இந்தப் பாடலை ஓடவிட்டு நடனமாடி ஷாட் வீடியோவில் அசத்தி வருகிறார்கள். ஒரு பாடலுக்கு நேர்த்தியான இசை சேர்ப்பும் கவித்துவமான வரிகளும் அமைந்துவிட்டால் ஆண்டுகள் நூறானாலும் மக்கள் மனங்களில் வாழும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று.
அன்றைய ஆக் ஷன் ஹீரோ சி.எல்.ஆனந்தன்
1960ஆம் ஆண்டு சிட்டாடல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜோசப் தளியத் இயக்கத்தில் ‘விஜயபுரி வீரன்’ என்ற படத்தில் சி.எல்.ஆனந்தன் கதாநாயகனாக அறிமுகமானார். குதிரைச் சவாரி, கத்திச்சண்டைகளில் இவர் சிறப்பாக நடித்தார். இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. ‘காட்டு மல்லிகை’ என்ற படத்தில் புலியுடன் சண்டை போடும் காட்சியில் அவரே நடித்தார். 1962ஆம் ஆண்டில்தான் ‘வீரத்திருமகன்’ படத்தில்தான் இந்தப் பாடல் அமைந்திருந்து.
கொங்கு நாட்டு தங்கம், யானை வளர்த்த வானம்பாடி மகன், நீயா நானா, நானும் மனிதன் தான், காட்டு மல்லிகை ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
எம்.ஜி.ஆருடன் இணைந்து தனிப்பிறவி, நீரும் நெருப்பும் ஆகிய படங்களில் நடித்தார்.
பிற்காலங்களில் அடுத்த வாரிசு, அந்த ஒரு நிமிடம், செந்தூரப் பூவே ஆகிய படங்களில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தினார் ஆனந்தன்.
ஆனந்தன் 1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு தனது 56வது அகவையில் காலமானார். ஆனந்தனின் மனைவி பெயர் லட்சுமி அம்மாள். 3 மகன்கள். 4 மகள்கள். பிற்காலத்தில் நடன நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி அவரது மகள்களில் ஒருவர். இன்னொரு மகள் லலிதா குமாரி லலிதாகுமாரியும் மகன் ஜெய்ராமும் திரைப்படங்களில் நடித்தனர்.