‘போர் தொழில்’ || திரை விமர்சனம்
இந்தப் படம் ஒரு அருமையான க்ரைம் த்ரில்லர் என்டர்டெய்னர். கதை, திரைக்கதை, படம் நகரும் வேகம், நடிப்பு எல்லாமே நன்றாக இருக்கிறது.
பிரம்மாண்டமான படம் இல்லை. ஆனால் பெரிய பட்ஜெட் படங்களை விட பல மடங்கு கவனத்தைப் பெற்றிருக்கிறது.
தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் க்ரைம் த்ரில்லர் படங்கள் அதிகம் வந்தன. ஆனால் பெரும்பாலான படங்கள் மிகவும் ஏமாற்றத்தை அளித்தன. காரணம் லாஜிக்கை பற்றிக் கவலைப்படாமல் எடுப்பது அல்லது கிளைமாக்ஸ் திருப்திகரமாக அமையாதது. ஆனால் போர் தொழில் எங்கும் நழுவவில்லை. பாடல்கள், தேவையற்ற காதல் அல்லது பஞ்ச் டயலாக் காட்சிகள் இல்லை. எடிட்டிங் மற்றும் படத்தின் நீளம் சரியாக உள்ளது என்பதுதான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
திருச்சியில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் ஒரே மாதிரி கொலை செய்யப்படுகிறார்கள். காவல்துறையினருக்கு கொலை குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து சீனியர் காவல்துறை அதிகாரியான சரத்குமார் மற்றும் புதிதாக பணிக்கு சேர்ந்த அசோக் செல்வன் இந்த கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்படுகிறார்கள். அனுபவ அறிவுடன் சரத்குமாரும் புத்தக அறிவுடன் அசோக் செல்வனும் அந்த கொலையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை.
சில வருடங்களுக்கு முன் வெளியான அருண் விஜய்யின் க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் குற்றம் 23, தடம், விசால் விஜய் நடித்த ராட்சசன், உதயநிதி நடித்த சைக்கோ வரிசையில் போர் தொழில் சிறந்த க்ரைம் த்ரில்லர் என்கிற இடத்தைப் பிடித்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கம், Attention to details மிகவும் நன்றாக அமைந்திருந்தது. ஒரு சிறிய சறுக்கல் அல்லது தெளிவின்மை திரைப்படத்தை சேதப்படுத்தியிருக்கலாம். ஆனால் இயக்குநரின் பணி அபாரம்.
வழக்கமாக தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட மர்டர் மிஸ்ட்ரி கதை தான். அதை சொன்ன விதத்தில் வித்தியாசப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் ஆல்ஃப்ரெட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா கூட்டணி.
அசோக் செல்வன், சரத் குமார், சரத்பாபு நடிப்பு மற்றும் உடல் மொழிகள் அருமை. குறிப்பாக கடைசியாக வரும் ஒரு நபரின் நடிப்பு பிரமாதம். சரத்குமார் கதாபாத்திரத்திற்கு நன்றாகப் பொருந்துகிறார். சரத்பாபு மறைவுக்குப் பிறகு வெளியான அவரது கடைசிப் படம் இது.
ஜழக்ஸ் பிஜாய் பின்னணி இசை சிறப்பாக இருந்தது. அது சிலிர்ப்பான அனுபவத்தை உயர்த்தி, பார்வையாளர்களை அடுத்து என்ன நடக்கும் என்பதில் கவனத்தை ஏற்படுத்துகிறது. அதிக ட்ரோன் காட்சிகள் மற்றும் இரவுக் காட்சிகளுடன் கூடிய ஒளிப்பதிவு விருந்தளித்தது.
திரைக்கதையின் சிறப்பு என்னவென்றால், அங்கும் இங்கும் சில உணர்வுபூர்வமான வசனங்கள் வேகமான விசாரணைக்கு இடையே நம்மை மேலும் இணைக்க வைக்கிறது. அந்த வசனங்கள் யதார்த்தத்துடன் தொடர்புடையவை. இந்தப் படத்தில் வசனம் எழுதியவர் பற்றி ஒரு பெரிய குறிப்பு தேவை.
சரத்குமாருக்கு மீண்டும் ஒரு கதாநாயக பாத்திரம் அமைந்து வெற்றி பெற்றிருப்பது நல்ல விஷயம். இதன் மூலம் மீண்டும் கதாநாயக வேடம் அமையலாம்.
அசோக் செல்வன் தனது வித்தியாசமான தேர்வின் மூலம் எதிர்காலத்தில் நல்ல நடிகராக வருவார். இவர் நடிப்பில் தெகிடி, சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படங்கள் பேசப்பட்டவை. அந்தப் பட்டியலில் இந்தப் படமும் இணைகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வந்த ஒரு நல்ல திரில்லர் திரைப்படம் போர் தொழில். நம்பி தியேட்டருக்குப் போய் பார்க்கலாம்.