விஜய் சேதுபதி வசனத்தில் “குலசாமி” ஏப்ரல் 21 ரிலீஸ்

 விஜய் சேதுபதி வசனத்தில் “குலசாமி” ஏப்ரல் 21 ரிலீஸ்

MIK Productions Private Limited தயாரிப்பில், விமல், தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம்  ‘குலசாமி’.  ஏப்ரல் 21 ஆம் தேதி  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இனிதே  நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர் சரவண சக்தி பேசியதாவது… “மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  மிகச் சிறப்பான வசனங்கள் தந்துள்ளார். அவருக்கு முதல் நன்றி. அவர் வசனம் எழுதித் தந்ததால்தான் இப்படம் மிகப் பெரிய அளவில் கவனிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் சிறப்பான காவல் அதிகாரியாக இருந்த ஜாங்கிட் அவர்கள் எங்களுக்காக இப்படத்தில்  நடித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி. அமீர் அண்ணன் எனக்காக வந்துள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நானும் ஒன்றாகச் சுற்றியவர்கள். அவருக்கு நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது… “நானும் இயக்குநர் சரவண சக்தியும் நெருங்கிய நண்பர்கள். நான் காசில்லாமல் வேலைக்காக வெளிநாடு சென்றபோதே அவர் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருந்தார். நான் இங்கு வந்தபிறகும் அவர் அதே முயற்சியில் விடாப்பிடியாக இருந்தார். பல அற்புதமான கதைகள் அவரிடம் இருக்கிறது. அவருக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்” என்றார்.
தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசியதாவது… “இந்த படத்தின் இயக்குநர் சரவணனை உங்களுக்கு நடிகராகத் தெரியும். ஆனால் அவர் நடிக்க வருவதற்கு முன்னர் இரண்டு படங்களை இயக்கும்போதே அவருடன் நான் பணிபுரிந்துள்ளேன்.

ஒரு படத்தில் சூட்டிங் துவங்குவதற்கு முதல் நாள் படத்தின் கதாநாயகர் அதிக சம்பளம் கேட்கிறார் என்று மாற்றுகின்றனர், அதன் பின் கதாநாயகர் யார் என்று கேட்டால் தயாரிப்பாளரின் தம்பி மகன் என்று சொல்லுகின்றனர், நான் இதற்கு ஒத்துப் போகவில்லை பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை நாம் வேறு படம் பண்ணிக்கொள்ளலாம் என்று கூறினேன், அதற்கு சரவணன் இந்தப் படமே எனக்கு பதினைந்து வருடம் கழித்து தான் கிடைத்திருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு நான் அந்த கதாநாயகருடன் பேசினேன். அவர் 3 லட்சதிலிருந்து 1 1/2 லட்சமாக குறைத்துக் கொண்டார், அந்த கதாநாயகர் வேறு யாருமில்லை நம் ஆர்யாதான். ஒரு வழியாக பேசி கஷ்டப்பட்டு படத்தை முடித்துவிட்டோம். படம் வெளியான பின்னர் தினத்தந்தியில் ஒரு விமர்சனம் வருகிறது, “சக்தி சரவணன் கமர்சியல் இயக்குனர்களில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குநராக வருவார்” என்று. அதன் பிறகு அரசியல் கட்சி நடத்தும் ஒருவரை வைத்துப் படம் இயக்கினார். அதில் கட்சித் தலைவரை பார்க்க வருபவர்களை எல்லாம் நடிக்க வைத்து படத்தை எடுத்தார். இது போல பல சம்பவங்கள் அவர் வாழ்வில் நடந்துள்ளது. இந்த குலசாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததும் அவருக்கு போன் செய்து வாழ்த்துகள் கூறினேன். உங்களுக்கேற்ற கதையைம் பிடித்துள்ளீர்கள் என்றேன். இன்னும் பல படங்கள் இயக்க வேண்டும்” என்றார்.

காவல்துறை அதிகாரி  ஜாங்கிட் பேசியதாவது.. “தம்பி சரவண சக்தி மற்றும் படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள், நான் ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன் என்பதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. எனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தவர் என்னுடைய டிரைவர். என் டிரைவருக்கு ஆங்கிலம் தெரியாது எனக்குத் தமிழ் தெரியாது, ஒரு நாள் அவரிடம் சீப்பு கேட்டேன். அதை நான் புரிய வைப்பதற்குள் ரொம்ப சிரமப்பட்டேன். அன்றிலிருந்து தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். படத்தில் நடிப்பது நான் சுலபமான விஷயம் என்று நினைத்தேன். ஆனால் அது மிகக் கடினம் என்பதைப் புரிந்து கொண்டேன். என்னுடைய கதாபாத்திரம் சிறியது தான். ஆனால் சமூகத்திற்குத் தேவையான கருத்தைப்  படத்தில் கூறியுள்ளேன்” என்றார்.

இயக்குநர் அமீர் பேசியதாவது… “இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர், நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும்போது சில சங்கடங்கள் இருக்கும். அதைத் தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும்தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச் சிறந்த திறமையாளர்.  இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றிச் சுற்றி புரமோசன் செய்கிறார்கள். இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும்போது, இந்தப் படத்தின் நாயகன், நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும்.  அவர்கள் வராதது  எனக்கு வருத்தமே. அந்தக் குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப் படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்” என்றார்.

விமல், தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சரவண சக்தி அவர்களின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.

வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும், ஜீ  தமிழ் ராக் ஸ்டார் பின்னணிப் பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள்.  கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அமைத்துள்ளார். ஆக் ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...