கிருஷ்ணை வந்தாள் | 9 | மாலா மாதவன்

 கிருஷ்ணை வந்தாள் | 9 | மாலா மாதவன்

கோவில் தேடி வந்தோம் – அம்மா

குறைகள் தன்னைப் போக்கு

ஆவி உள்ள வரைக்கும் – அம்மா

அல்லல் தன்னை நீக்கு

நாவில் நிலைத்து நிற்பாய் – அம்மா

நல்ல வைகள் அருள்வாய்

சேவித் தெழுந்தோம் உன்னை -அம்மா

செழிப்பை நீயும் தருவாய்

ப்போது தான் நித்திரை விடுத்து கையை தேய்த்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டவாறு எழுந்த சுந்தரவதனனைப் போன் ஒலித்து அழைத்தது.

யார் இந்த அதிகாலைல போன்? அக்கா! அக்காவுக்கு ஏதாவதோ? காலம் மாறினாலும் இந்த அதிகாலை போன் அழைப்பை இன்னும் தந்திச் செய்தி மாதிரி தான் நினைக்கத் தோன்றுகிறது.

அவசர அழைப்போ? யாருக்கும் ஏதும் உடம்பு சரியில்லையோ என மனம் பதறுகிறது. அப்படி ஒரு மனநிலையில் படுக்கையில் இருந்து எழுந்து போனை எடுத்தார் சுந்தரவதனன்.

வாசஸ்பதி தான் அழைத்திருந்தான்.

“என்னப்பா! இவ்வளவு அதிகாலைல? எல்லோரும் நல்லா இருக்கீங்க தானே.!”

அப்போது தான் சுதாரித்து தன் முன் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான் வாசஸ்பதி. மணி நான்கு அடித்து அரை மணி நேரம் கடந்திருந்தது. நாம் தான் இரவு முழுவதும் தூங்காமலேயே கிடந்தோமென்றால் இவரையும் மணியைப் பார்க்காமல் அழைத்து எழுப்பி விட்டோமே என்ற குற்ற உணர்வில்..

“சாரி மாமா.. மணியைக் கவனிக்காமப் போன் பண்ணிட்டேன். நீங்க தூங்குங்க. அப்புறம் பேசறேன்.” போனை வைக்கப் போனான்.

“அட.. இருப்பா. இது நான் எப்பவும் எழுந்துக்கற டைம் தான். சொல்லுப்பா. எல்லோரும் நன்னா இருக்காளா?”

‘ஓ. ஃபைன்… ஒண்ணுமில்ல மாமா. நீங்க இன்னும் இங்க வீட்டுக்கு வரவே இல்லயே. அம்மாவை நேர பார்க்கணும்னு சொன்னீங்களே.”

“ஆமாப்பா. கொஞ்சம் உடம்பு சரியாகட்டும்ன்னு பார்த்தேன். எத்தனை வருஷமாச்சு அக்காவைப் பார்த்து. வந்து பேசி உறவாடி.. அப்புறம்ப்பா! அக்கா கிட்ட எம் பொண்ணு கல்யாண விஷயமா அதான் நம்ம மனோவுக்கு அகல்யாவைக் கொடுக்கறதப் பத்திப் பேசச் சொன்னேனே. பேசி இருக்கியா? நான் வரதுக்கும் கல்யாணம் முடிவாறதுக்கும் சரியா இருந்துதுன்னா எனக்கும் ஒரு பாரம் குறையும். என் மனைவி போனதில் பாதி தெம்பு போச்சுன்னா இப்ப உடம்பு வந்ததில் மீதி தெம்பும் போச்சுப்பா. மீதி காலத்துக்குள்ள அகல்யாவைக் கரையேத்திடணும்னு பார்க்கறேன். அக்காவைக் கேட்டுட்டுத் தான் வெளிசம்பந்தம் பார்க்கணும். என்ன இத்தனை வருஷம் கழிச்சு உறவோட சேர்ந்திருக்கேன். உறவு விட்டுப் போக வேண்டாமேன்னு பார்க்கறேன் ப்பா!”

நீளப் பேசி முடித்தவரை நினைத்து வாசஸ்பதிக்கு ஆயாசம் ஏற்பட்டது. தான் சொல்ல வருவதை எப்படிச் சொல்வது என்ற ஆயாசம். இவர் மனோவை மாப்பிள்ளையாக வரித்திருக்கிறார். இப்போது போய் உங்க பெண்ணுக்கு மனோ செட்டாக மாட்டான் என எப்படிச் சொல்வது? சொன்னால் தன்னைத் தப்பாக நினைப்பாரோ? ம்ம்! முதலில் அம்மா சொன்னதைச் சொல்லி விடலாம். பின் கடவுள் விட்ட வழி என நினைத்த வாசஸ்பதி..

“மாமா! ஒரு விஷயம் சொல்லத்தான் போன் செஞ்சேன். ரொம்ப வருஷம் கழிச்சு வரதால முதல்ல நேர வீட்டுக்கு வர வேண்டாம்ன்னு அம்மா சொன்னாங்க. நாளைக் காலை பத்துமணிக்கு நாங்க வானமலை பெருமாள் கோவிலுக்குப் போகலாம்ன்னு இருக்கோம். நீங்களும் குடும்பத்தோட அங்க வந்துட்டீங்கன்னா பெருமாள் முன்னிலையில் குடும்பமாச் சேர்ந்துக்கலாம்.. அப்புறம் ஒண்ணா இங்க வீட்டுக்கு வரலாம்ன்னும் இங்கு கொஞ்ச நாள் தங்கிட்டுப் போகலாமுன்னும் அம்மா சொல்லச் சொன்னாங்க.”

“அப்படியா? நல்ல விஷயம் தான். மனோ மாப்பிள்ளையும் கோவிலுக்கு வருவாப்லயா?”

“வருவான் மாமா. அங்கேயே பேசிக்கலாம்.” பட்டும் படாமையும் பதில் சொன்னான் வாசஸ்பதி.

“அப்ப சரி. என் பக்கம் அகல்யாவோட இன்னும் இரண்டு பேர் வருவாங்கப்பா. என் மனைவியின் கூடப்பிறந்தவர் ஜோதியும், அவரின் கணவர் ராமனாதனும். என் நல்லது கெட்டதுகளில் எப்போதும் துணையிருப்பது அவர்கள் தான். அகல்யாவுக்கு ஒரு நல்லதுன்னா அது அவங்க இல்லாம இல்லை.”

“நல்லது மாமா. தாராளமா வரட்டும். சரி வைச்சிடவா! எல்லோரும் தங்கற மாதிரி வந்து சேருங்க!”

போனை வைத்த சுந்தரவதனன் யோசனையில் ஆழ்ந்தார். மனோவையும் அழைத்து வருவதாகச் சொன்னானே.. அந்தப் பிள்ளைக்கு சித்தப்பிரமைன்னு சொன்னது? நல்லவேளை ஓரளவு நடமாட்டம் இருக்கும் போல இருக்கு. எதுக்கும் நேரில் போய் பார்த்து முடிவு பண்ணலாம். அகல்யாவும் படித்த பெண் தான் என்றாலும் நடுவில் வந்த இந்தக் கோளாறால் கண்டபடி பேசுகிறாள். சிரிக்கிறாள். காணாமல் போகிறாள். நேற்று கூட தான் அவள் பின்னாடியே போயும் கோவிலில் என்ன நடந்தது என அறிய முடியாது திரும்ப வீட்டில் கிடந்தேனே. ம்ஹும்.. அகல்யாவை நல்லபடியாகக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் போதும். நினைத்தவர் வானமலைக்குக் கிளம்ப முடிவெடுத்தார்.

கைகால் கழுவிக் கொண்டு, சமையறைக்குச் சென்று தூக்குச்சட்டியை எடுத்து வந்தார். கோனார் இன்னேரம் பால் கறந்துருப்பான். ப்ரெஷ்ஷா பசும்பால் கிடைக்கும். வாயில் கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்.

மழை பெய்த பூமி குளிர்ச்சியாக இருந்தது. மரங்களின்று உதிர்ந்த ஈரம் தன் தலையில் பட்டதும் மரத்தை நிமிர்ந்து பார்த்தார். என்னிடம் தந்ததை நான் திரும்ப உனக்கு அளிக்கிறேன் என்றாற்போல் நின்றிருந்தது மரம். அகல்யாவும் இது போல் நன்றாய் தான் இருந்தாள். ஏதோ போதாத காலம் மழையாய் அவள் மேல் இறங்கிற்று போலும். அதை அவள் இந்த மரம் போல வெளிப்படுத்துகிறாள். அவள் மனதில் அகல்யாவைப் பற்றிய எண்ணம் எழுந்ததும் அடுத்து செய்யவேண்டிய காரியங்கள் பற்றி கவனம் எழுந்தது.

முதன் முறையாக அக்கா வீட்டுக்குப் போகப் போவதால்.. அவர்கள் அனைவருக்கும் ட்ரெஸ் வாங்க வேண்டும். பழம் பூ போகும் வழியில் வாங்கிக்கலாம். ஸ்வீட், காரம் வாங்கிக்கணும். எதற்கும் திருவாடானை போய் வாங்கிண்டு வந்துடலாம். ஜோதியிடமும், ராமனாதனிடமும் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ தெரியவில்லை. அகல்யாவுக்கு என்றால் என்னுடன் கட்டாயம் வருவார்கள்.

யோசித்துக் கொண்டே பால் கறக்கும் இடத்தைக் கடந்து விட்டார்.

“என்ன ஐயா! பால் வாங்க தூக்கோட வந்துட்டு அப்படியே கண்டுக்காமப் போறீங்க. பால் வேணாமா?” கோனார் சத்தமாய் கேட்டான்.

“அடடா.. ஏதோ யோசனைப்பா! இந்தா.. ஒரு லிட்டர் ஊத்து. அதோட இந்த மாசக் கணக்குக்கு பணம் இந்தா வைச்சுக்க.” சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

“அந்த அம்மனாட்டம் மகளை வைச்சுக்கிட்டு உங்களுக்கு என்னய்யா தன்னை மறக்கற யோசனை? அதான் அம்மனே உங்க கூட இருக்கறாப்புல நம்ம அகல்யாம்மா இருக்காங்களே. எதுக்கும் கவலைப் படாதீங்கய்யா!” தூக்கில் பாலை ஊற்றி சுந்தரவதனனிடம் நீட்டினான்.

‘அது தான்ப்பா என் கவலையேன்னு சொல்லவா முடியும்?’ வெளிக்காட்டிக் கொள்ளாது சிரித்துக் கொண்டே… “நல்லதுப்பா. எல்லாம் நல்லதாவே நடக்கட்டும்!” என்றவர் நகரப் போன போது..

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி அகல்யாம்மா எங்க வீட்டுப் பக்கம் வந்தப்ப நானு குறி கேட்டேன் ஐயா. வர்ற புரட்டாசி கழிஞ்சா உன் கஷ்டமெல்லாம் புரண்டு ஓடிடும்னாங்க. அந்த நம்பிக்கையில் தான் நான் இருக்கேன். அகல்யாம்மா தெய்வங்க!”

அகல்யா ஒருவரையும் விடவில்லை போலும். என்ன முன்பு பைத்தியம் என்று சொன்ன மக்கள் இப்போ தெய்வம்ன்னு சொல்கிறார்கள். அது ஒண்ணு தான் வித்தியாசம். ஆனா எனக்கே அவ போக்கு புரியலையே. நேத்து கோவிலில் நடந்ததப் பத்தி ஒரு தெளிவு வந்தா தான் அகல்யாவை நம்ப முடியும்.

தொடர் யோசனையில் அவர் கால்கள் தாமாக வீட்டை நெருங்கி விட்டிருந்தன. வாசலில் வீராத் தாத்தாவுடன் இன்னும் சில ஜனங்கள் அந்த அதிகாலையிலும் நின்று கொண்டிருந்தனர்.

“என்ன.. என்னாச்சு? என்னப்பா விஷயம் காலங்கார்த்தால! ஆறு மணிக்கெல்லாம் வந்திருக்கீங்க? “

“ஒண்ணுமில்லைய்யா! இவன் என் மச்சினன் பேரன். முதன்முதலா வெளிநாட்டுக்கு வேலை விஷயமா போறான்ய்யா!. அதான்.. நம்ம அம்மா கையால குங்குமம் வாங்கிட்டு போலாமுன்னு வந்தேன். கூட இவுக நமக்குத் தெரிஞ்சவுக. பாண்டுகுடில இருந்து வந்திருக்காக. கொஞ்ச நாளாக் குடும்பக் கஷ்டம். குறையத் தீர்க்குமா சாமின்னு அம்மா கையால குங்குமம் வாங்கிக்கலாமுன்னு என்கூட வந்திருக்காங்கய்யா. கொஞ்சம் அம்மாவ வரச் சொன்னீங்கன்னா..”

“யாருப்பா அந்த அம்மா? யாரை வரச் சொல்றீங்க?” தெரிந்திருந்தும் கேட்டார் சுந்தரவதனன்.

“அட.. நம்ம அகல்யாம்மா தாங்க! அம்மா கண்பட்டா எங்க குறையெல்லாம் ஓடிப் போயிடுமுல்ல!” வீராத் தாத்தா சொன்னார்.

சொன்னதோடு நிக்காமல்.. “எனக்கு எழுத்தை தந்ததே அகல்யாம்மா தான்.. அவுங்க தான் நான் கும்புடற சாமி” என்றார்.

இல்லை. இது சரி வராது. முதல்ல அகல்யாக்குக் கல்யாணத்தைப் பண்ணிடனும். சுந்தரவதனன் மனதில் உறுதி பூண்டார்.

இப்போது இவர்களுக்கு என்ன பதில் சொல்வது? நம்பி வந்து விட்டார்கள். ஆனாலும் இது தொடரக் கூடாது. என்ன செய்யலாம்? ம்ம்!

கதவைத் திறந்து உள்ளே சமையலறையில் பால் தூக்கை வைத்தவர்.. மீண்டும் வெளியில் வந்து..

“அகல்யா அசந்து தூங்கறா. ஒரு ஒன்பது மணிக்கா கோவிலுக்கு வந்துருங்களேன். அங்க குங்குமம் தரேன்.” சொல்லிப் பார்த்தார்.

“நாங்க இப்படியே உட்கார்ந்துக்கறோம்ய்யா. அகல்யாம்மா எழுந்ததும் பார்த்துட்டுப் போறோம்.” ஸ்திரமாக வாசல் திண்ணையில் உட்கார்ந்து விட்டார்கள்.

இனி அகல்யா வந்தால் தான் எழுவார்கள் எனத் தெரிந்து விடப் பெண்ணை எழுப்பச் சென்றார். அகல்யா அவளறையில் சிறு குழந்தை போல் கால் மடக்கித் தூங்கிக் கொண்டிருந்தாள்.

மெல்ல அவள் தலையை வருடி விட்டவர்..

“அம்மா! அகல்யா! எழுந்திரும்மா. மணி ஆறரை ஆச்சே.”

டக்கென்று எழுந்த அகல்யா..

“காளியம்மா காப்பாத்து” என்றபடி கண்விழித்துத் தன் கையில் முகம் பதித்தாள்.

“என்னப்பா! சீக்கிரமே எழுந்தாச்சா? பால்காரன் வந்தாச்சா?”

“பாலை நானே போய் வாங்கிட்டேம்மா. ஒரு வாக்கிங்கும் ஆச்சு. அப்புறம் உன்னைப் பார்க்கணும்ன்னு வீராத்தாத்தா அவருக்குத் தெரிஞ்சவாளோட வந்திருக்கார். பல்தேச்சுட்டு, முகம் அலம்பிண்டு போய் பாரு.”

“இதோ நொடியில் குளிச்சுட்டே வந்துடறேம்பா”

“சரி.. நான் போய் காபி போடறேன். உன் பெரியம்மா, பெரியப்பா இன்னும் தூங்கறா போல!”

“நீங்க சீக்கிரம் எழுந்துட்டு எல்லோரையும் தூங்கறா தூங்கறான்னு சொல்றீங்கப்பா!” சின்னப் பிள்ளையாய்ச் சிணுங்கினாள் அகல்யா. இவளை எந்த வகையில் சேர்ப்பது?

அகல்யா குளித்து விட்டு வருவதற்குள் பால் காய்ச்சலாம் எனப் போனவர் காபியுடன் வாசலுக்கு வந்து அனைவருக்கும் கொடுத்தார்.

அகல்யாவோடு ஜோதியும் பின்னாடியே வரவும் திண்ணையில் அமர்ந்திருந்தோர் எழுந்து அகல்யாவிடம் ஆசி பெற்றுச் சென்றனர். அவளும் தன் கிருஷ்ணையை மானசீகமாக வேண்டி அவர்கள் கையில் குங்குமம் இட்டாள்.

“இனி எல்லாம் நல்லபடியா நடக்கும். சந்தோஷந் தானே!” என்றார் வீராத் தாத்தா.

அனைவரும் சந்தோஷமாகச் சென்ற பின் உள்ளே வந்த அகல்யாவிடமும், ஜோதியிடமும்..

“நாளை அதிகாலை நாமெல்லோரும் வானமலைப் பெருமாள் கோவில் போறோம். எங்க அக்கா குடும்பமும் அங்க வராங்க ஜோதிம்மா. ரொம்ப வருஷம்.கழிச்சுப் பார்க்கறதால கோவில்ல வைச்சு சேர்ந்துக்கலாம்ன்னு சொன்னாளாம் அக்கா.”

“யாரு சுந்தர் போன் பண்ணினது?”

“வாசஸ்பதி தான் ஜோதிம்மா!”

“அப்ப அகல்யா கல்யாணம்..?”

“ஆமா! அதையும் அங்கேயே பேசி முடிச்சுடலாம்!”

கேட்ட அகல்யா முகம் மாறி கொல்லைப் பக்கம் பூஜைக்கு பூப்பறிக்கச் சென்றாள்.

இப்ப என்ன செய்வது? நான் எப்படி இந்த ஊரை விட்டுப் போவேன். என் கிருஷ்ணையை விட்டு இருப்பேன்?

“கிருஷ்ணை!” பெருமூச்சு விட்டாள்.

“என்னவாம் காலையிலேயே அழைப்பு பலமா இருக்கு? அருளாசியெல்லாம் வழங்கற போலவே!” குதித்தோடி வந்தாள் கிருஷ்ணை.

“அப்பா எனக்குக் கல்யாணம் பண்ணப் போறாளாம்!” உதடு துடித்தது அழுகையில்.

“பண்ணிக்கோ! அம்மா இல்லைன்னு அழறியா? அதான் அம்மாவா நானிருக்கேனே!”

“நான் எப்படி உன்னை விட்டு?”

“என் அகல்யா!” கிருஷ்ணை நெகிழ்வுடன் நெருங்கி வந்து அகல்யாவைத் தொட்டாள்.

–கிருஷ்ணை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...