சிவகங்கையின் வீரமங்கை | 26 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 26 | ஜெயஸ்ரீ அனந்த்

வமானத்தில் பயத்தில் கூனிக் குறுகி இருந்த அவனை அரசர், “எழுந்திரு சுமத்திரா” என்று அவனின் தோளைத் தொட்டுத் தூக்கினார்.  அவனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.  இருவரின் கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது.

“என்ன நடந்தது? “ என்றார் அரசர்.

“ நானும் குயிலியும் மிகவும் பாதுகாப்போடுதான் பல்லக்கைக் கவனித்து வந்தோம். ஆனால், நம் வீரனாலேயே அரசர் தாக்கப்படுவார் என்று துளியும் நான் நினைக்கவில்லை” என்றான்.  அப்பொழுது தான் அரசர் முத்து வடுகநாதர் சிவகொழுந்தை கவனித்தார். கழுத்தில் கத்திக் குத்துப்பட்டு இறந்து கிடந்தவனை “துரோகி…” என்றபடி தன் கால்களால் இடறினார். 

சற்றுத் தள்ளி மயங்கிச் சரிந்து கிடந்த குயிலியை தன் மடியில் கிடத்தி அவளை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள் சிகப்பி.

அச்சமயம் வேலு நாச்சியாரும் அவ்விடம் வந்து சேர்ந்திருந்தாள்.

“மன்னிக்கவேண்டும் அரசியே… தங்கள் வீரர்கள் சற்று கோட்டை விட்டு விட்டனர். கயவன் யாரென்று தெரிந்ததும் நான் உங்களுக்குச் செய்தி அனுப்பி இருந்தேன். அவ்வீரன் பிரான் மலை வருவதற்குள் அவன் கதையையும் முடித்து விட்டார்கள். என்னை மன்னிக்கவும்” என்றாள் சிகப்பி.

நாச்சியார் அங்கு வரும் பொழுது, குயிலியின் மேல் கோபத்துடன் தான் வந்தாள். ஆனால் அவள் உணர்வற்று கீழே கிடப்பதை பார்த்த நாச்சியாரின் மனம் கொஞ்சம் இளகியது. “என்ன ஆயிற்று இவளுக்கு, அப்பாவைப் பாதுகாக்கத் துப்பில்லை…. நினைவிழந்தவள் போல நாடகம் ஆடுகிறாளா? “ என்றாள்.

‘‘‘இல்லை அரசியே, உண்மையிலேயே நினைவிழந்து தான் இருக்கிறாள். பதற்றம் குறைந்ததும் எழுந்து விடுவார்கள்.” என்றவள், அரசியே… என்று பவானி உயிரற்று உடல் கிடந்த இடத்தை காட்டினாள்.

 கழுத்திலும் முதுகிலும் காயம்பட்டுச் சிவந்த கண்கள் திறந்தபடி இறந்து கிடந்த பவானியை அப்பொழுது தான் முதன் முறையாக பார்கிறாள் நாச்சியார். அவரின் உடல் கொண்டிருந்த முதிர்ந்த தோற்றத்தை மனம் கொண்டிருக்கவில்லை. அதே சமயம் அவரின் முகசாயல் பாட்டி உத்திரகோச மங்கையை சற்றே நியாபகப்படுத்தியது. பவானித் தேவர்,  செம்பியன் மறக்குலத்தில் பிறக்கவில்லை என்றாலும், உத்திரகோச பாட்டிக்கு இவர் சொந்த மருமகன் அல்லவா? தனக்கு ஆட்சி மறுக்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக இவர் அனைவரையும் பழிவாங்கத்துடிப்பதில் எந்த விதத்திலும் நியாயம் இருக்காது. இருந்தாலும் இவரும் சில காலம் அரியணையில் வீற்றிருந்தவர் தானே…? இப்படி யாரும் இல்லா அனாதையாக உயிர்விட்டது இவருடைய துர்லபம் என்று நினைத்தவள்.  அரசர் அருகில் வந்தாள். ”அத்தான்,  தந்தையை நாம் அரண்மனைக்கே கொண்டுசென்று விடலாம் ஏனெனில், தந்தையை இந்நிலையில் பார்பதற்கு பிரான் மலையில் யாருக்கும் துணிவு இருக்காது. “

“நீ சொல்வதும் சரிதான்” என்றவர், சசிவர்ணதேவரை அதே பல்லக்கில் சிவகங்கை கொண்டுசெல்ல ஆணையிட்டார். செய்வதறியாது திகைத்து நின்ற வீரர்கள், தங்களின் துக்கத்தை அடக்கிக்கொண்டு அரசரின் சொல்லுக்குக்கட்டுப்பட்டு, சசிவர்ணதேவரின் இறந்த உடலை மீண்டும் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு சிவகங்கை நோக்கி நகர்ந்தனர்.  சசிவர்ணத்தேவரின் இறப்புச் செய்தி கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பரவ ஆரம்பித்தது. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்த மக்களால் இந்தத் துயர சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. சிறிது சிறிதாக கூட்டம் கூட ஆரம்பித்தது. மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தனர். நாடே மெதுமெதுவாக துக்கத்தில் மூழ்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது.

குயிலி நினைவு திரும்பியதும், நாச்சியாரை அனைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளின் துக்கம் கரையட்டும் என்று காத்திருந்த நாச்சியாரும், “ தந்தையை இப்படிக் கோட்டை விட்டுவிட்டியே… உனது காதல் மோகம் தந்தையின் உயிரைப் பறித்து விட்டது…“ என்ற நாச்சியாரின் சுடுசொல் அவளின் இதயத்தைச் சுக்கு நூறாக கிழித்தது. நாச்சியாரிடமிருந்து தன்னை விடுத்துக்கொண்டவள். “அக்கா…   என்ன வார்த்தை கூறிவிட்டீர்கள்? நம் தந்தையின் இறப்பிற்கு என் காதல் காரணமாகிவிட்டதா…? நம் தந்தையின் மேல் ஆனையிட்டு கூறுகிறேன். எந்த காதல் அவரின் இறப்பிற்கு காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த காதல் இனி என் வாழ்வினில் என்றும் வராது” என்றாள் உரத்த குரலில். 

இதை கேட்ட, அரசர் முத்துவடுகநாதரும், சுமத்திரனும் அதிர்சியுற்று நின்றனர். “வேலு என்ன வார்த்தை கூறிவிட்டாய்? நம் தந்தை இறந்ததற்கு இவர்களின் காதல் எப்படிக் காரணமாக முடியும்? நம்முடனேயே இருந்த இந்தத் துரோகி சிவகொழுந்து தான் காரணம். இவன் துரோகி என்று, தெரியாமல் என் தோழன் என்று எண்ணியிருந்தேனே… நானும்தான் காரணம். என்னையல்லவா நீ தண்டித்திருக்கவேண்டும்?  வாழ்க்கையை ஆரம்பிக்கப்போகும் இவர்களைப் பழி கூறுவது தவறு.”

“இல்லை இல்லை… துரோகி இவன் என்று தெரிந்ததும் உடனடியாக இவனைப் பழி வாங்காமல், விட்டுவிட்ட… நான் தான் காரணம். என்னைதண்டியுங்கள்” என்ற சிகப்பி அவர்களின் பேச்சுக்கு நடுவில் வந்தாள்.

 “போதும்…  நடந்து முடிந்தவைகளைப் பற்றிப் பேசி இனி பயன் இல்லை. பவானி இறந்ததால் நம்மைவிட்டு முழுதுமாக ஆபத்து நீங்கிவிடவில்லை. ஆகவே இனி நாம் நடக்கப்போவதை பற்றி விவாதிக்க வேண்டும்.” என்றவள், “சிகப்பி எப்படி இந்த சம்பவம் நடந்தது… என்னவாயிற்று?”

“நானும் சலீமும் தேவிபட்டிணத்தில் மராட்டியர்களுடன் போர் புரியலாம் என்று, பல குதிரைகளை முன்னேற்பாடாக வாங்கி முதன் மந்திரி தாண்டவராயப் பிள்ளையிடத்தில் அனுப்பிய சமயம், குயிலியையும், சுமனையும் அங்கு சந்திக்க நேர்ந்தது. அச்சமயம் அவர்கள் ஜெகநாதப்பெருமாள் கோவில் பட்டாசாரியார் கண்ணன் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர்.  உதிரனுக்கு இவர்கள் இருக்கும் செய்தி தெரியவரவும் ,ஏகோஜி மன்னருக்கு உதவியாக இவர்களை தீர்த்து கட்டத் திட்டம் தீட்டி என்னை சந்திக்க அழைத்திருந்தான். நானும் சலீமும் அவனைச் சந்திக்கச் சென்றிருந்தோம்.  இத்திட்டம் சரி வராது. அவர்களைத் தீர்த்து கட்டுவது, நமது திட்டம் இல்லை என அவனிடம் எவ்வள்வோ எடுத்து கூறியும் அவன் மறுத்துவிட்டான். மாறாக இவர்களைத் தீர்த்து கட்டுவதற்காக ஏகோஜி மன்னரிடமும் சன்மானமாக பொற்காசுகள் பெற்றதையும் தெரிவித்தான். இனி அவனை விட்டு வைத்தால் ஆபத்து என்று எண்ணி அங்கேயே அவனைத் தீர்த்து கட்டி விட்டேன். அச்சமயம் அவன் ஆடைகளைச் சோதனையிட்ட போழுது, ஏகோஜி, பவானிக்கு ஓலை ஒன்றை அனுப்பியிருந்தான். அதில் தங்களின் விவாகம் அன்று, அரசரைத் தீர்த்து கட்ட நாககன்னியை அனுப்பியது தெரியவந்தது.”

–வீரமங்கை வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...