‘தேன்’ வெற்றிப் பட இயக்குநர் கணேஷ் விநாயகமின் அடுத்த படம்
உலக அரங்கில் பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள சாதனை படைத்த படம் தேன்.
2016-ம் ஆண்டு வெளிவந்த ‘வீரசிவாஜி’, ‘தகராறு’ படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகிற்குள் அறிமுகமானவர் கணேஷ் விநாயகம்.
கார்ப்பரெட் கம்பெனிகள் மலைப்பிரதேசங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகளைக் கட்ட மலைக்கிராமத்து மக்களை வெளியேற்ற எடுக்கும் முயற்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறது தேன். இந்த கம்பெனிகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தண்ணீர் மாசுப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளாகும் சாதாரண இளைஞனின் வாழ்க்கை சின்னாபின்னமாவதை அழுத்தமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் விநாயகன்.
முதல் பாதி மலைக்கிராமத்திலும், இரண்டாம் பாதி கீழே நகரத்தில் அரசாங்க மருத்துமனையில் பயணிக்கிறது. அப்பாவி நாயகன் அரசாங்க நலத் திட்டங்களைப் பெற எடுக்கும் முயற்சிகள், சிரமங்கள் அதனால் ஏற்படும் அவமானங்கள், அலட்சியங்கள், தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யங்கள், அரசியல் சூழ்ச்சிகள், இத்தனை கஷ்டங்களையும் அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியிருந்தார் இயக்குநர் கணேஷ் விநாயகன். இவரது அடுத்த படைப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது. அது பற்றி கணேஷ் விநாயகன் பேசும்போது,
“மக்களிடம் தேன் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் எனது அடுத்த படைப்பும் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இது அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை சரியாகச் சென்றடையும்.
பலதரப்பட்ட திரைப்பட ஜூரிகளிடம் இந்தக் கதையை ஒப்படைத்தபோது அவர்கள் படித்துவிட்டு இது இந்திய மக்களிடம் மட்டுமின்றி உலக மக்களிடமும் சரியாகச் சென்றடையும் என்று பாராட்டியுள்ளார்கள்.
இதுவும் விருதை நோக்கி நகர்கிறதா என்று எனக்குத் தெரியாது கண்டிப்பாக மக்களுக்கான படமாக இது இருக்கும். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளோம். இதற்கான ஆர்டிஸ்ட் தேர்வும் நடந்து கொண்டிருக்கிறது.” என்றார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு -சுகுமார் .M, கலை இயக்குநர் – லால்குடி இளையராஜா, படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், வசனம் – யுகபாரதி, நடனம் – தினேஷ், ஆக்ஷன் – ஆக்ஷன் நூர், தயாரிப்பு மேற்பார்வை – காசிலிங்கம், தயாரிப்பு – 90 Pictures Productions Pvt Ltd (S.G.சரவணன்)