ஆசையின் விலை ஆராதனா | 6 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 6 | தனுஜா ஜெயராமன்

ராதனாவின் ப்ளாட்டில் அனாமிகா இன்ச் இன்ச்சாக அலசிக் கொண்டிருந்தாள். கூடவே ரவி மற்றும் அலெக்ஸூம் வேறு எதாவது கிடைக்குமா? என ஒருபுறம் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“ரவி.. ஆராதனா பத்து மணிக்கு இங்க வந்தாங்கன்னு சொல்றாங்க.. அவங்க வரும்போது செக்யூரிட்டி பாத்திருக்காங்க. அப்புறம் மூர்த்தி வேற போன் பண்ணி பேசியிருக்கார். நடுவில் அந்த ரித்தேஷ் வேற போன் பண்ணி பேசியிருக்கான். அவனையும் விசாரிக்கணும். கார்ல வரும்போது ஒரு முறை அம்ரிஷ் பேசியிருக்கார். நடுவில் கீழே போய் செகரெட்டரியை வேற பாத்திருக்காங்க ஆராதனா. பன்னிரண்டு மணிக்கு ஸ்விகியில் ஃபுட் ஆர்டர் பண்ணியிருக்காங்க. அவன் 12.45 க்கு டெலிவரி பண்ணியிருக்கான்.. அப்ப வரை உயிரோடு இருந்திருக்காங்க. டீபாயில் டீ குடித்த இரண்டு காலி டீ கப் இருந்தது நாம வரும்போது… அப்ப யாரோ வந்திருக்காங்க வீட்டுக்கு. அதுவும் ஆராதனாவுக்கு தெரிந்தவங்க… அதனால்தான் ஆராதனா டீ போட்டு குடுத்திருக்கணும். அந்த எக்ஸ் எப்ப வந்து எப்ப போனார்னு தெரியல”…

“ஆனா… மேடம்.. CCTV யில அந்த நேரத்தில் டெலிவரி ஆட்களை தவிர வேற யாரும் புதுசா வரலைன்னு காட்டுது. செக்யூரிட்டி சர்வீஸ் லெட்ஜரில் கூட யாரும் வந்ததுக்கான அடையாளம் இல்லையே”…என்றார் ரவி

“ம்… டெத் ஒரு மணியிலிருந்து 2 மணிக்குள் நடந்திருக்கறதா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது.. எந்தப் பொருளும் கலைந்து போகலை.. எதுவும் காணாமலும் போகலை… எந்தப் போராட்டமும் நடந்ததுக்கான அறிகுறி தெரியலை. இரண்டு மணிக்கு மேல மூர்த்தி வந்து பார்த்தபோது… ஆராதனாவோட பாடி பெட்ரூம்ல இருந்தது. இந்த இடைபட்ட நேரத்தில் ஆராதனா ஏன் கையை அறுத்துக்கணும்”..

“அதுக்கும் வாய்ப்பில்லைன்னு கிடைத்த தகவல்கள் சொல்லுது… அதுக்கான மோட்டிவ் கூட ஏதும் இல்லைன்னு தோணுதே மேடம்”…என்றான் அலெக்ஸ்.

“கரெக்ட்… அப்படின்னா வந்த அந்த எக்ஸ் யாரு? அவன் ஏன் ஆராதனாவைக் கொல்லணும்? அதுக்கு என்ன மோட்டிவ்னு நாம கண்டுபிடிக்கணும்.”

“யெஸ் மேடம்”….

“ரவி… அந்த ஸ்விகி டெலிவரி பையனை வரச்சொன்னீங்களா?”

“சொல்லிட்டேன்… வந்துகிட்டிருக்கேன்னு போன் பண்ணான்… இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான்”…

“ம்… அப்படியே அந்த இன்டீரியர் டெக்ரேஷன் பண்ண பரணிதரனையும் கூப்பிடுங்க… அவர்கிட்டயும் பேசிடலாம்”.

“ஹலோ, மிஸ்டர் பரணிதரனா? நாங்க ஆராதனா டெத் விஷயமா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பேசுறோம்”…

“சொல்லுங்க?”

“நீங்க இப்ப கொஞ்சம் ஆராதனாவோட ப்ளாட்டிற்கு வரமுடியுமா? இன்ஸ்பெக்டர் மேடம் பேசணும்னாங்க?”

“நான் இப்ப பாண்டிச்சேரியில் இருக்கேன்.. நைட்தான் வருவேன். நாளைக்கு வரட்டுமா?”

“இந்தா ஒரு நிமிஷம் இருங்க… மேடம் அவர் பாண்டியில இருக்காராம்.. நாளைக்கு வரச்சொல்லட்டா?”

“ஸ்டேஷனுக்கு வந்துர முடியுமான்னு கேளுங்க”…

“நீங்க நாளைக்கு R1 ஸ்டேஷனுக்கு வந்துருங்க”…என போனை வைத்த ரவி “வர்றேன்னிருக்காரு” என்றார்…

அதற்குள், “அந்தப் பையன் வந்திருக்கான்.. மேம்” என அலெக்ஸ் வந்து சொல்ல…

“எந்தப் பையன்?”

“ஸ்விகி டெலிவரி பாய் செல்வகுமார்.. ”

“ஓ….வரச்சொல்லுங்க…”

பவ்யத்துடன் வந்து நின்றான் செல்வகுமார்… முகத்தில் சற்று பயரேகை.. வயது இருபதிலிருந்து இருபத்திரெண்டு இருக்கலாம்… மருண்ட விழிகளுடன் படபடப்பாக இருந்தான்…

“நீ தான் இந்த ப்ளாட்ல ஃபுட் டெலிவரி பண்ணியா?”

“ஆமாம் மேம்…”

“எத்தனை மணிக்கு வந்தே இங்க..?”

“பனிரண்டே முக்கால் இருக்கும் மேம்..”

“சரி.. நீ வரும்போது ஏதாவது வித்தியாசமா பாத்தியா?”

“இல்லை மேம்…”

“யார் கதவை திறந்து உன்கிட்ட பார்சலை வாங்கியது?”

“ஒரு மேடம் தான் வந்து கதவை திறந்து வாங்குனாங்க.”

“அவங்க எப்படி இருந்தாங்க?”

அவன் சொன்ன அடையாளங்கள் ஆராதனாவிற்கு நன்றாகவே ஒத்துப் போனது.

“சரி.… ஃபுட்க்கு பணம் கொடுத்தாங்களா? ”

“இல்லை… அது ஆன்லைன் பேமெண்ட்.. ஏற்கனவே பண்ணியிருந்தாங்க… வெறும் டெலிவரி மட்டும் தான் பண்ணேன்..”

“அப்ப ஏதாவது உள்ள கவனிச்சயா?”

“நான் காலிங்பெல் அடித்ததும் கதவை திறந்தாங்க கொடுத்துவிட்டு அப்படியே ‘டக்‘குனு கெளம்பிட்டேனே…”


“கொஞ்சம் நல்லா யோசிச்சி சொல்லு.”

கொஞ்ச நேரம் யோசித்தவன்… “கதவை திறந்தப்ப சோபாவில் முதுகை காட்டியபடி ஒருத்தர் உக்கார்ந்திருந்தது தெரிஞ்சது.”

“அடையாளம் ஏதாவது?”

“இல்லை மேம்… ஒரு நிமிஷத்திற்கும் குறைவா தான் பார்த்தேன்… முகத்தைப் பார்க்கவேயில்லை…”

“வேற ஏதாவது இருந்தா கொஞ்சம் நல்லா யோசித்து சொல்லு… நீ தான் அவங்களை கடைசியா உயிரோட பாத்தது…”

“இல்லை மேம். வேற எதுவுமே ஞாபகத்திற்கு வரலை.”

“கீழே பார்க்கிங்ல… படிக்கட்டில், இல்லை லிப்டில், காரிடரில்னு எங்கியாவது ஏதாவது? யாரையாவது… பார்த்திருந்தா ஞாபகபடுத்தி சொல்லு.”

“என்னை போலவே டெலிவரி குடுக்க வந்தவங்களை தவிர வேற யாரும் என் கண்ணில் படவில்லை மேம்…”

“சரி… எப்ப எது ஞாபகம் வந்தாலும் இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லு… இப்ப நீ கிளம்பலாம்…” என்றாள் அனாமிகா.

“சரி…” என்று தலையாட்டியபடி கிளம்பினான் செல்வகுமார்.

“யாரோ ஒருத்தன் வந்து ஆராதனாவை சந்திச்சிருக்கான் அந்த நேரத்தில்.. அவன் யார் என்னன்னு கண்டுபிடிச்சா தான் கேஸ் கொஞ்சமாச்சும் நகரும்… அவன் நிச்சயமாக ஆராதனாவிற்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவன்.. தட்சால்….”

யாராயிருக்கும்? என மண்டையைக் குடைந்து யோசித்தனர் மூவரும்…

“அந்த காபிக் கப்பில் கைரேகை எதுவும் கிடைச்சுதா ரவி..?”

“இல்லை… ஆராதனாவோட ரேகை மட்டும் தான் இருந்தது… வேற ரேகை எதுவும் கிடைக்கலை.… ஒருவேளை சுத்தமா துடைத்து வைச்சிருக்கலாம் அவன்..”

“ம்… சரி, வாங்க கிளம்பலாம்…” என்று ப்ளாட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினர்..

எதிரில் வித்யா வந்துகொண்டிருந்தாள். வித்யாவை பார்த்து ஸ்நேகமாகச் சிரித்துக்கொண்டே இறங்கினாள் அனாமிகா.

“மேடம்… ஒரு நிமிஷம்…” என வித்யா கத்த..

“சொல்லுங்க…”

“மேம்… அன்னைக்கு ஏதாவது ஞாபகம் வந்தா சொல்லச் சொன்னீங்க இல்லை…”

“ஆமாம்…”

“அன்னைக்கு… நான் பார்க்கிங்ல வண்டியை எடுக்கும் போது… ஒரு ஆள் உயரமா சிகப்பா அழகா இருந்தான்.. கையில் ஒரு சின்ன பார்சலோடு லிப்டுக்காக வெயிட் பண்ணிகிட்டிருந்தான். அவன் கையில் அமேசான் டெலிவரி பேக் ஒன்னு வைச்சிருந்தான்.”

“எந்த மாடிக்குப் போனான்னு தெரியுமா?”

“அது தெரியாது.… நான் கவனிக்கலை…”

“இட்ஸ் ஓக்கே.… நாங்க பாத்துக்கறோம்… எனிவே, தேங்ஸ் வித்யா… நீங்க ஞாபகபடுத்தி தகவலைச் சொன்னதுக்கு…” என்று நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

“அலெக்ஸ் நீங்க எல்லா வீட்லையும் விசாரிங்க… வேற வழியில்லை… அன்னைக்கு யார்ல்லாம் அமேசான்ல ஆர்டர் பண்ணாங்க… என்ற தகவலை கலெக்ட் பண்ணுங்க…”

“ரவி… நீங்க ஆராதனா போன்லேயிருந்து அமேசானுக்கு ஏதாவது ஆர்டர் போயிருக்கான்னு செக் பண்ணிடுங்க…”

“நான் ஸ்டேஷனுக்கு போய் CCTV புட்டேஜ்ல ஆள் சிக்குறானா ன்னு மறுபடியும் தேடுறேன்…” என்று கிளம்பினாள் அனாமிகா..

‘ஏதோ இந்த தகவலாவது கிடைத்ததே… கண்டுபிடித்து விடலாம்’ என்ற நம்பிக்கை சற்று உற்சாகத்தை தந்தது அனாமிகாவிற்கு. சற்று ரிலாக்ஸ்டாக ஜீப்பைச் செலுத்தினாள் ஸ்டேஷனுக்கு.

–அனாமிகா வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...