2 திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம்
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
நாட்டிலேயே முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தில் இவர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தெலுங்கானாவில், மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராச்சி ரத்தோட். இவர் அடிலாபாதில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் 2015ல் மருத்துவப் படிப்பை முடித்தார். கம்மம் பகுதியைச் சேர்ந்த ரூத் ஜான்பால், 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். இருவரும் திருநங்கையர்.
பல்வேறு எதிர்ப்பு, தடைகள், அச்சுறுத்தல்கள், சவால், அவமானங்கள் போன்றவற்றைத் தாண்டி, இருவரும் சமீபத்தில் தெலங்கானா மாநில ஹைத்ராபாத்தில் உள்ள உஸ்மானியா அரசு மருத்துவமனையில் டாக்டர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதன் வாயிலாக தெலுங்கானாவில் அரசு டாக்டர்களாக நியமிக்கப்பட்ட முதல் திருநங்கையர் என்ற பெருமை இவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இது குறித்து டாக்டர் ருத் ஜான்பால் கொய்யலா கூறும்போது, “நான் கடந்த 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தேன். ஆனால், திருநங்கை என்பதால், சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நடந்த பணிக்கான நேர்காணலில் திருப்பி அனுப்பப்பட்டேன். ஆனால், ஜெனரல் பிரிவில் நான் தற்போது அரசு மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
பிராச்சி ராதோர் கூறுகையில், “அடிலாபாத்தைச் சேர்ந்த நான், ரிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். நான் திருநங்கை என்பதால், அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வரத் தயங்கினார்கள் என்று கூறி, பணியிலிருந்து என்னை நீக்கிவிட்டனர். நல்ல வேளையாக இந்த அரசு வேலை கிடைத்தது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் எங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்” என்றார்.
தெலங்கானா மாநிலத் தலைமைக்கு வாழ்த்துக்கள்.