பத்திரிகையாளர் பாமா கோபாலன் காலமானார்

 பத்திரிகையாளர் பாமா கோபாலன் காலமானார்

சென்னையில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார்.

பி.எஸ்ஸி. பட்டதாரி. தான் படித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப் பிரிவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணிபுரிந்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி.

1963ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்களால் ‘பிரசண்ட விகடன்’ பத்திரிகையில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகம், பின்பு அமுதசுரபியிலும் குமுதத்திலும் பத்திரிகையாளராகப் பணிபுரிந்தார்.

குமுதத்தில் 13 வருடங்கள் பணி செய்து சுமார் 4000 பேட்டிக் கட்டுரைகள், 700 சிறுகதைகள், 11 நாவல்கள் மற்றும் பொதுக் கட்டுரைகள், துணுக்குகள் மற்றும் ஜோக்குகள் எழுதினார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். நகைச்சுவையும் கிரைம் எழுத்தும் இவரின் சிறப்பம்சங்கள்.

பாமா கோபாலன், வேதா கோபாலன் இலக்கிய இணையர். வைதீகக் குடும்பத்தில் பிறந்து அந்தக் காலத்திலேயே காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். ஜோதிட எழுத்திலும் சிறந்தவர்கள். எழுத்தில் நகைச்சுவையை வைத்து எழுதுவதில் வல்லவர்கள்.

இன்றைய பத்திரிகை உலகில் தமிழின் நேர்காணல் துறையில் கொடிகட்டிப் பறக்கும் மிகச் சிலரில் இவர்கள் இருவரும் உண்டு. எந்தத் துறை சார்ந்தவர்களையும் பேட்டி காணும் சாமர்த்தியமும் இவர்களிடம் உண்டு.

பாமா கோபாலன் அமெரிக்காவில் தன் மகன் இல்லத்தில் காலமானார். பூஜை செய்து கொண்டிருந்தபோதே வைகுண்டத்தை அடைந்து விட்டார்.

இறுதி காரியங்கள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடைபெறுகின்றன.

இவர்கள் எழுதிக் குவித்த எழுத்தெல்லாம் இப்போது நூற்றாண்டு கண்ட பதிப்பக உரிமையாளர் அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் மூலம் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

பாமா கோபாலனை இழந்து வாடும் வேதா கோபாலனுக்கும் அவர் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்கல்.

மூலவன்

1 Comment

  • மிகச்சிறந்த மனிதர். வருத்தம் அளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...