கண்ணே, கொல்லாதே | 5 | சாய்ரேணு

 கண்ணே, கொல்லாதே | 5 | சாய்ரேணு

5. பேசுகிறான்!

“எதிராஜு! இனி நீ தப்ப முடியாது. உனக்கு யார் இரண்டு லட்ச ரூபாய்ப் பணம் கொடுத்தது, சொல்லிடு” என்று மிரட்டினான் போஸ்.

“வந்து… மாசிலாமணி ஐயாதான் கொடுத்தாங்க பொண்ணு கல்யாணத்துக்காக…”

“எப்படி… கல்யாணத்துக்காக, கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கொடுத்தாரா?” என்று கேட்டான் போஸ் லட்டியைச் சுழற்றியவாறே.

“இல்லை, முன்னாடியே கொடுத்துட்டாரு” என்ற எதிராஜு, லட்டி சுரீரென்று முதுகில் பட்டதும் துடித்துப் போனான்.

“மாசிலாமணி அப்படியெல்லாம் தர்மம் பண்றவரே இல்லை. உன்னால் அவருக்கு ஏதேனும் வேலை ஆனா, அதுக்குக் கூலி கொடுப்பார், அவ்வளவுதான். உண்மையைச் சொல்லிடு, எதிராஜு. தேவையில்லாம என்னை உன் முதுகுத் தோலை உரிக்க வைக்காதே” என்றான் போஸ்.

ஒரு பத்து நிமிஷம் போஸின் லட்டி சுறுசுறுப்பாக இயங்கிய பின்னால், எதிராஜு “அடிக்காதீங்க சார், சொல்லிடறேன், சொல்லிடறேன்!” என்று அலறினான்.

“என் மக கல்யாணம் முடிஞ்சு புருஷன் வீட்டுக்குப் போயிட்டா. என்னால் வீட்டில் தனியா இருக்க முடியல. என் பொண்டாட்டி ஞாபகம் வந்து மனசு கஷ்டப்பட்டுப் போச்சு. இந்த மாதிரி நேரத்தில் நான் கொஞ்சமா ஊத்திக்கறது வழக்கம். ஆனா கையில் காசு இல்லை. என்ன செய்யலாம்னு யோசிச்சபோதுதான், பெரிய வீட்டில் என் அறையில நான் சிறுகச்சிறுகச் சேர்த்து வெச்சிருந்த பணம் ஐநூறு ரூபாய் வரை இருக்கறது ஞாபகம் வந்தது. நான் தங்கியிருந்த அறையோட வெளிவாசல் சாவி எங்கிட்டத்தான் இருந்தது…”

“…ஒரு நிமிஷம்” என்று இடைமறித்தாள் தர்ஷினி. “அந்தக் கதவுக்கு உள்ளே பேட்லாக் அடிச்சிருக்கறதா இல்ல அம்மா சொன்னாங்க?” என்று கேட்டாள்.

“அந்தக் கதவில் எப்போதுமே ஒரு பேட்லாக் தொங்கும், ஆனா நான் வேலையில் இருந்தமட்டும் அதைப் பூட்டறதில்லை. நான் பத்து நாள் லீவு போட்டப்போ, அந்தக் கதவைப் பூட்டிச் சாவியை மகாவீர் ஐயாகிட்டக் கொடுக்கச் சொல்லி அம்மா சொன்னாங்க. நான் மறந்திட்டேன். நான் வேலையைவிட்டு நின்னப்புறம் சின்னய்யா பேட்லாக்கைப் பூட்டிட்டதா தெரிஞ்சுக்கிட்டேன்” என்றான் எதிராஜு. அவன் பொய் சொல்வதாகத் தெரியவில்லை.

“சரி, உன்னிடம் சாவி இருந்தது, நீ அன்றைக்கு ராத்திரி பெரிய வீட்டுக்குப் போனே. மேலே சொல்லு” என்றாள் தர்ஷினி.

“அங்கே போய் நான் பணத்தை எடுத்துட்டிருந்தபோது, எதிரே ஐயாவோட அறைக் கதவு திறந்திருந்தது. லேசா நடமாட்டம் தெரிஞ்ச மாதிரியும் இருந்தது. இந்த வேளைக்கு ஐயா முழிச்சிட்டிருக்காரான்னு ஆச்சரியப்பட்டுக்கிட்டே திரும்பிப் பார்க்கறேன், காரிடார் வெளிச்சம் லேசா உள்ளே தெரியுது. அங்கே ஒரு உருவம் ஐயாவோட மருந்து பாட்டிலை எடுத்து, வேறு ஒரு புட்டிலேர்ந்து அதில் எதையோ கலந்ததை நான் நல்லா பார்த்தேன். என்ன நடக்குதுன்னு புரியாம முழிச்சுட்டு நின்னப்ப, அந்த உருவம் வெளியே வருது. நான் நல்லா பார்த்தேன் – அது கௌதம் ஐயா!”

எல்லோருடைய பார்வையும் எதிராஜுவின்மீதே நிலைத்திருந்தது. போஸின் முகம் பளீரென்று மலர்ந்தது.

“நான் பார்த்தது என்னன்னு எனக்குப் புரியல, பணத்தை எடுத்துட்டுப் போயிட்டேன். மறுநாள் என்ன நடந்ததுன்னே மறந்துட்டேன்.”

“அப்புறம் எப்போ நினைவு வந்தது?” பாதி கிண்டலாகக் கேட்டான் போஸ்.

“ஐயா இறந்துட்டாங்கன்னு அதுக்கடுத்தநாள் மதியம் கேள்விப்பட்டு, அங்கே ஓடினேன். அப்போதான் ஐயா விஷம் வெச்சுக் கொல்லப்பட்டிருக்கறதா கேள்விப்பட்டேன். கௌதம் ஐயா மருந்து பாட்டிலில் ஏதோ கலந்தது ஞாபகம் வந்தது. அவர்கிட்டப் போய் அன்றைக்கு ராத்திரி நான் பார்த்ததைச் சொன்னேன். அவர் ஒரேடியா பயந்துபோய், இந்த விஷயத்தை வெளியே சொல்லிடாதேன்னு கேட்டுக்கிட்டார். சரிங்கன்னு சொல்லிட்டு வெளியே வந்துட்டேன்.

“அன்றைக்கு மகாவீர் ஐயாவோட அறை திறந்திருக்கதைப் பார்த்தேன். அதைச் சார்த்தப் போனவன், உள்ளே கட்டுக்கட்டா பணம் இருக்கறதைப் பார்த்துட்டேன். என் மகளுக்குக் கல்யாணத்தும்போது தகப்பனா நான் எதுவுமே செய்யல. கொடுத்த பத்தாயிரம் ரூபாயும் கடன். ஒரு நிமிஷம் சபலப்பட்டுட்டேன். அதைத் திருடப் பார்த்தபோது மகாவீர் ஐயா என்னைப் பிடிச்சுட்டாரு, வேலையை விட்டும் அனுபிட்டாரு. அந்த வீட்டுப் பொருள், என் அறைச் சாவி எல்லாம் ஒப்படைச்சுட்டு, என் சாமான்களை எடுத்துக்கிட்டு வெளியேறிட்டேன்.

“கௌதமைக் காட்டிக் கொடுக்கணும்னு நான் நினைக்கவேயில்லை. நான் தூக்கி வளர்த்த பிள்ளை அவரு. ஆனா பணத்தைக் கண்ணால பார்த்துட்ட என் மனசு தவிச்சுக்கிட்டே இருந்தது. மறுநாள் கௌதமை ரகசியமாகச் சந்திச்சேன். அன்று ராத்திரி நான் பார்த்ததைப் பற்றிப் பேச ஆரம்பிச்சதுமே கௌதம் பயந்துட்டாரு, எனக்குப் பணம் கொடுத்துடறதாகவும் இந்த விஷயம் பற்றி வெளியே சொல்லிடக் கூடாதுன்னும் கேட்டுக்கிட்டு, ரெண்டு லட்ச ரூபாய் கொடுத்தாரு.

“நான் அவரைக் காட்டிக் கொடுக்கறதாகவே இல்லை. ஏதோ என் பணத்தேவையின் காரணமா அவரைக் கொஞ்சம் மிரட்டற மாதிரிப் பேசிட்டேனே தவிர…” எதிராஜுவின் குரல் தேய்ந்து நின்றது.

போஸ் எழுந்தான். “தேங்க்ஸ், கேர்ள்ஸ்! கௌதம்முடைய வழக்கு இப்போ பூரணமாயிட்டது. முக்கியமா உனக்குத்தான் நன்றி சொல்லணும், தர்மா! நீதான் இந்தக் கேஸை எடுத்துக்கறோம்னு ஒத்துக்கிட்ட” என்றான்.

தர்மா அவன் சொல்வதை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இல்லை. அமைதியாக அமர்ந்திருந்தான்.

தன்யாவும் தர்ஷினியும் அவனைப் பார்த்த பார்வையில் குழப்பம் கலந்திருந்தது.

6.சாந்தி?

மாசிலாமணியின் அறை.

“கௌதம், இந்த வீட்டில் உன்னுடைய குறுகியகால ஸ்டே முடிஞ்சது. இன்றைக்கு நீ லாக்கப் திரும்பற. இன்னும் ஒரே வாரத்தில் உன் வழக்கு கோர்ட்டுக்கு வந்துடும்” என்றான் போஸ்.

“என்ன சார் சொல்றீங்க? எனக்குச் சாதகமா ஒண்ணும் கிடைக்கலியா? சதுரா டிடக்டிவ்ஸ் ஒண்ணும் கண்டுபிடிக்கலியா?” என்று பதறியவாறே கேட்டான் கௌதம்.

“ஓ, கண்டுபிடிச்சுருக்காங்களே, ஒரு ஐ-விட்னஸை! உன் அப்பாவோட மருந்து பாட்டிலில் நீ விஷத்தைக் கலந்ததைக் கண்ணால் பார்த்த சாட்சி – உங்க வேலைக்காரன் எதிராஜு! நீ சாமர்த்தியமா அவன் வாயை அடைக்க முயற்சி பண்ணினாலும் எங்களால் அவனைப் பேச வைக்க முடிஞ்சுருச்சு. அவன் உணமையைக் கக்கிட்டான்” என்றான் போஸ், குரலில் வெற்றிப் பெருமிதம் ததும்ப.

“நோ! நான் விஷத்தைக் கலக்கலை, சார்! எதிராஜு பொய் சொல்றான் சார்” என்று கதறி அழுதவன், அறையில் அவனைப் பார்த்த பார்வைகளில் கொஞ்சம் பரிதாபம் கலந்திருந்த ஒரே பார்வைக்குச் சொந்தக்காரனான தர்மாவிடம் ஓடினான். “ஏதாவது பண்ணுங்க, ப்ளீஸ்! என்னைக் காப்பாற்றுங்க” என்று கத்தினான்.

“ஐ ஆம் சாரி, கௌதம். வேலைக்காரனுக்கு உன் எதிரிகள் – அதாவது அண்டர்வேர்ல்ட்டைச் சேர்ந்தவங்களைப் பற்றி ஏதாவது தெரியுமா, அவங்க இந்தக் கொலையைச் செய்திருக்கச் சான்ஸ் இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான் அவனோடு பேசினோம். அவன்…” நிறுத்தினான் தர்மா.

கௌதமின் கதறல் அதிகமானது.

“சரிசரி, கிளம்பு. என்னை இழுத்துட்டுப் போக வைக்காதே” என்றான் போஸ் நிர்த்தாக்ஷண்யமாக.

கௌதம் வேறு வழியின்றி எழுந்தான். இரண்டு கான்ஸ்டபிள்கள் உடனே அவனுக்கு இருமருங்கும் புடைசூழ்ந்தார்கள்.

“நில்லுங்க, இன்ஸ்பெக்டர்!” என்ற சப்தம் கேட்டு எல்லோருமே நின்றார்கள்.

“அம்மா?” என்றான் போஸ்.

ஆம், அழைத்தவள் கௌதமின் அம்மா சாந்தி.

“என் பிள்ளை இந்தக் கொலையைச் செய்யலை இன்ஸ்பெக்டர்! தயவுசெய்து நான் சொல்றதை நம்புங்க” என்று மீண்டும் மீண்டும் புலம்பினாள் சாந்தி.

“அம்மா, புரிஞ்சுக்கோங்க. நீங்க ஒரு பெண் என்பதாலும் உங்க வயசை முன்னிட்டும்தான் நான் பொறுமையா இருக்கேன். எங்களைப் போகவிடுங்க! உங்க பிள்ளைதான் இந்தக் கொலையைச் செய்திருக்கான்ங்கறதுக்கு அசைக்க முடியாத சாட்சி இருக்கு” என்றான் போஸ் அதிகாரமும் மரியாதையும் இணைந்த குரலில்.

“இல்லை, இருக்காது. அப்படியே இருந்தாலும் அது பொய் சாட்சிதான்!” என்றாள் சாந்தி உறுதியான குரலில்.

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?”

“ஏன்னா, இந்தக் கொலையைச் செய்ததே நான் தான்!”

“மகனைக் காப்பத்தறதுக்காக இப்படிச் சொல்றீங்களாம்மா?” என்று இரக்கம் ததும்பக் கேட்டாள் தன்யா.

“இல்லைம்மா! ஐயோ, உங்களுக்கு எப்படிப் புரிய வைக்கப் போறேன்? உண்மையிலயே என் கணவரைக் கொன்னது நாந்தான்!”

“விளையாடாதீங்கம்மா! எங்களை எங்க வேலையைச் செய்ய விடுங்க!” என்று ஆத்திரத்தோடு சொன்னான் போஸ்.

“இருங்க போஸ்” என்றாள் தர்ஷினி. “அவங்க சொல்ல வந்ததைச் சொல்லட்டும்.”

“வேற வேலை இல்லை உங்களுக்கு! உங்களுக்காக இந்த அம்மா சொல்றதைக் கேட்கறேன். ஆனா என்னைப் பொறுத்தவரையில் கேஸ் முடிஞ்சு போச்சு. இவங்க சொல்றதை நான் பொய்யாத்தான் பாவிப்பேனே தவிர, வாக்குமூலமா எடுத்துக்க மாட்டேன், புரிஞ்சுதா? பேசுங்க, அம்மா. சொல்ல வந்ததைச் சொல்லிடுங்க!” என்று கோபம் கொப்பளிக்கப் போஸ் சொல்வதைச் சின்னப் புன்னகையோடு கேட்டுக் கொண்டிருந்த சாந்தி, “சரி, சொல்றேன். நான் சொல்றதை நீங்க கண்டிப்பா வாக்குமூலமா எடுத்துப்பீங்க” என்று சொல்லிவிட்டு, பேச ஆரம்பித்தாள்.

கௌதமோட குணத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியும். என் கணவர் குணத்தைப் பற்றி உங்களுக்கு முழுவதுமா தெரியாது. அவரைப் பொறுத்தவரை இந்த வாழ்க்கை என்பது ஒரு வியாபாரம். நட்பு, படிப்பு, கலைகள், உறவுகள், ஏன், கணவன்-மனைவி உறவுகூட, ஏதாவது ஒரு விதத்தில் வியாபாரம்தான் என்பது அவருடைய கண்டுபிடிப்பு. எந்த விதமான வியாபாரத்திற்கும் செல்லுபடியாகிய யுனிவர்சல் கரன்சி பணம் என்பதும் அவருடைய முடிவு.

கல்யாணம் ஆன முதல் மாசம், எனக்கு முந்நூறு ரூபாய்ச் சம்பளம் கொடுத்துட்டு, அவரோட அறை சரியா தூசி தட்டலைன்னு சொல்லி அதில் ஐம்பது ரூபாய்ப் பிடிச்சுக்கிட்டார். சமையலுக்குத் தனியா நூறு ரூபாய். அதில்தான் நான் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கிக்கணும். எனக்குக் கொடுத்த முந்நூறு ரூபாயில்தான் எனக்கு வேண்டிய புடவை, சோப்பு, சீப்பு எல்லாம் வாங்கணும். இப்படி அவர் எனக்குச் சம்பளம் கொடுத்துட்டிருந்த காலத்தில் அவருடைய வருமானம் மாசம் மூவாயிரம் ரூபாய்க்குக் குறையாது!

குழந்தைகளுக்குக் கொடுக்கிற பணம் ஒரு காசு குறையாமக் கணக்கு வெச்சுப்பார். நான் கேட்டா “இதெல்லாம் இன்வெஸ்ட்மெண்ட்” என்பார்.

அவர் நினைச்சபடியெல்லாம் நடந்துப்பார், ஆனா சம்பளமும் பாக்கெட் மணியும் கொடுத்திடற ஒரே காரணத்துக்காக நானும் குழந்தைகளும் அவருக்கு அடிமை! ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கோம், சார்!

என் பிள்ளைங்க அவர் ராக்ஷஸக் குணத்தை ரொம்பச் சீக்கிரமே புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரிலும் ஏற்பட்ட பின்விளைவுகள் வேறுவேறு மாதிரி இருந்தது! கௌதம் “நீ நான்-கன்ஃபர்மிஸ்ட் என்றால், நானும் அதேதான்” என்று காட்டிக் கொண்டான். மகாவீர் “நீங்க எவ்வளவு நான்-கன்ஃபர்மிஸ்டோ, நான் அந்த அளவு கன்வென்ஷனல், கன்ஃபர்மிஸ்ட்” என்று உறுதி செய்துகொண்டான்.

என் இளைய மகன் குணத்தில் தங்கமா, படிப்பாளியா வளர்றதைப் பார்க்கற ஆனந்தத்தை என் கண்கள் அடைஞ்சது. அதே நேரம் என் மூத்த மகன் ஒரு ரௌடியா, க்ரிமினலா வளர்றதையும் பார்க்கிற துர்ப்பாக்கியம் அதுக்கு இருந்தது.

காந்தியின் குரங்குகள் மாதிரி எதையும் பார்க்காமல், எதையும் கேட்காமல், எதிர்த்துப் பேசாமல், அப்பப்போ அடி, உதைன்னு அவர் அன்பா கொடுக்கறதையெல்லாம் நல்லா வாங்கிக்கிட்டு, முப்பது வருஷங்களைக் கழிச்சுட்டேன்.

சமீபத்தில் மகாவீர்க்குக் கல்யாணம் நிச்சயமாச்சு. பெரிய இடம். என் கணவரோட குணம் தெரிஞ்சும், மகாவீர் நல்லவன், நல்லா வருவான் என்ற நம்பிக்கையில் அவங்க பெண் தர ஒத்துக்கிட்டாங்க.

அந்த நேரத்தில் மகாவீர்க்கு ஒரு அவசரத் தேவைக்காகப் பணம் தேவைப்பட்டது – ஏதோ கொடுக்கல் வாங்கல் விஷயம். நான் முதல்முறையா என் கணவர்கிட்ட இதைப் பற்றிப் பேசிப் பணம் வாங்க முடியுமான்னு பார்க்கறேன்னேன். என் பிள்ளை வேண்டாம்னு சொல்லிட்டான். அவனுக்குக் கிடைக்காதுன்னு தெரியும்.

இதுக்கிடையில் கௌதம் வீட்டுக்குத் திரும்ப வந்தான். ஏதோ ஆபத்தில் சிக்கிக்கிட்டதா சொல்லிப் பணம் கேட்டான். எங்கேர்ந்து கொடுக்கிறது? என் கல்யாணத்தில் எங்கப்பா போட்ட நகைகூட அவர் கஸ்டடியில் இருந்தது.

இப்படிக் கையாலாகாமக் கடவுள் என்னைப் படைச்சுட்டானேன்னு அழுகை அழுகையா வந்தது. அப்போ அந்த கடவுளே கொடுத்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது. சாதாரணக் கண் மருந்து உள்ளுக்குச் சாப்பிட்டா விஷம் என்ற விஷயம் தெரிஞ்சது. எல்லா ராக்ஷஸனும் தன் யமனைத் தனக்குள்ளேயே கொண்டு வருவான்ங்கற மாதிரி, இந்த விஷயத்தை அவரே விளக்கமா, பாடம் சொல்ற மாதிரி எடுத்துச் சொல்லிட்டாரு. அதைப் பயன்படுத்திக்க முடிவுசெய்தேன். மகாவீர் கல்கத்தா போயிருக்கற சமயமா பார்த்து, அவருடைய டானிக்கில் கண் மருந்தைக் கொட்டிக் கலந்து வெச்சுட்டேன். அன்றைக்கு இராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி மருந்தைக் குடிச்சார், அப்புறம் எழுந்திருக்கவேயில்லை.

இதுதான் உண்மை. இதுதான் நடந்தது. என்னை என்ன வேணா செய்துக்குங்க. என் பிள்ளையை உபத்திரவிக்காதீங்க! பாவம், அவனுக்கு ஒண்ணும் தெரியாது.

சாந்தி பேசி முடித்ததும் நீண்ட மௌனம் நிலவியது.

“இதை நான் நம்பணும்னு எப்படி எதிர்பார்க்கறீங்க அம்மா? உங்க பிள்ளை டானிக்கில் விஷத்தைக் கலந்ததைக் கண்ணால் பார்த்த சாட்சி இருக்கே?” என்றான் போஸ். சாந்தியின் கதை அவன் மனத்தை அசைத்துப் பார்த்திருக்க வேண்டும். தணிவாகவே பேசினான்.

“யாரைச் சொல்றீங்க?” என்று கேட்டாள் சாந்தி.

“எதிராஜு” என்றான் போஸ்.

சாந்தி சிரித்தாள். “அவனுக்கும் கௌதமுக்கும் சண்டை வந்திருச்சு. கௌதமைப் பழிவாங்க அவன் ரொம்ப நாளா முயற்சி பண்ணிட்டிருக்கான். அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டாள். ஏதோ சொல்லவந்த தர்ஷினியை “ப்ளீஸ், என்னைப் பேச விடுங்க. மிக முக்கியமான ஒரு விஷயம் நான் இன்ஸ்பெக்டர்கிட்டச் சொல்லணும்” என்று அடக்கிவிட்டாள்.

“இன்னும் என்னம்மா பேசணும்? நீங்க சொல்றதை நான் கேட்டாச்சு. முன்னமே சொன்ன மாதிரி நான் அதை நம்பலை. கௌதமுக்கும் எதிராஜுக்கும் ஏதாவது பிரச்சனை இருக்காங்கறதெல்லாம் அவன் லாயர் சொல்ல வேண்டியது. எப்படி இருந்தாலும் அவன் சாட்சியத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. இனிமே நாங்க போலாமா?” என்று கேட்டான் போஸ்.

“இன்ஸ்பெக்டர், என் பேச்சை நீங்க வாக்குமூலமா எடுத்துப்பீங்கன்னு நான் சொன்னேன். இப்பவும் அதையேதான் சொல்றேன்” என்றவாறே இடையில் மறைத்து வைத்திருந்த சிறு புட்டியை எடுத்தாள். “இதுவும் விஷம்தான்! ரெண்டு வருஷம் முன்னாடி வாங்கியது. அது பயன்பட இப்போதான் நேரம் வாய்ச்சது” என்றவள் புட்டியை வேகமாகத் திறந்து கடகடவென்று வாயில் வார்த்துக் கொண்டாள். போஸ் தடுக்க முயல்வதற்குள் நீலம் பாரித்துக் கீழே விழுந்தாள். போஸைப் பார்த்துச் சிரிக்க முயன்றாள். “இனி நான் சொன்னதை ஏத்துப்பீங்க. இது மரண வாக்குமூலம்! நாந்தான் என் கணவரைக் கொன்றேன். இதுக்கு நீங்க எல்லோரும் சாட்சி. என் மகனைக் காப்பாற்றுங்க. அப்பதான் என் ஆத்மா சாந்தியடையும்” -அவளுடைய நடுங்கும் விரல் தன்யா, தர்ஷினி, தர்மா, போஸ் எல்லோரையும் சுற்றி வட்டமிட்டுவிட்டுக் கீழே விழுந்தது.

–அடுத்து வருவது நிறைவு…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...