குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது எழுத்தாளர் இமையத்துக்கு அறிவிப்பு
குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கர் தேசிய விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் பல புத்தகங்களை எழுதியுள்ளார். 2020ல் செல்லாத பணம் என்ற படைப்பிற்காக சாகித்திய அகாடமி விருதும் பெற்றிருந்தார்.
தமிழ் நவீன இலக்கிய உலகில் கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்து தடம் பதித்தவர் எழுத்தாளர் இமையம். தனது நாவல்களை கதை மாந்தர்கள் போக்குடன் அணுகி, மிகக் காத்திரமாகப் பதிவு செய்தவர். இவர் எழுதிய ‘பெத்தவன்’ நாவல் சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான முக்கியமான உரையாடலைத் தொடங்கிவைத்தது. வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் குறித்து இவர் எழுதிய ‘செல்லாத பணம்’, அழுத்தமான ரணங்களைப் பதிவு செய்திருந்தது. இப்படியாகப் பல முக்கிய படைப்புகளைத் தமிழுக்குத் தந்துள்ளார். இமையம் இதுவரை 11 நாவல்களும் 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.
இலக்கியம் தொடர்பாக பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் கனவு இல்லத் திட்டம் விருதுக்கும் தேர்வானார். இந்த நிலையில் குவேம்பு விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதை வழங்கும் குழுவினர் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் இமையம் என்றும் அவருடன் பெரும்பாலான எழுத்துக்கள் பெண்ணியத்திற்கான காணிக்கையாக்க கருதலாம் எனப் பாராட்டியுள்ளனர்.
கன்னட எழுத்தாளர் குவெம்பு நினைவு அறக்கட்டளை சார்பாக, 2013ஆம் ஆண்டு முதல் குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை குவெம்பு விருது பெற்றவர்கள் சச்சிதானந்தன் – மலையாளம், நாமவர சிங் – ஹிந்தி, ஷியாம் மனோஹர் – மராத்தி, தேவனூரு மகாதேவா – கன்னடம், ஹோமென் போர்கோஹைன் மற்றும் நீலமணி ஃபுகான் – அசாமி, ஜீலானி பானு மற்றும் ரத்தன் சிங் – உருது, குருபஜன் சிங் மற்றும் அஜீத் கௌர் – பஞ்சாபி, ராஜேந்திர் கிஷோர் பாண்டா – ஒடியா, சத்யவதி – தெலுங்கு. குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது (2022) பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் இமையம் என்பது மகிழ்ச்சிக்குரியது. வெள்ளிப் பதக்கமும் ஐந்து லட்சம் ரூபாய் பணமுடிப்பும் கொண்டது இத்தேசிய விருது.
நவீனக் கன்னட இலக்கியத்தின் ஆகப்பெரும் ஆளுமை குவெம்பு என்னும் கே.வி புட்டப்பா. ஞானபீட விருது, பத்ம விருதுகளான பூஷண், விபூஷன் விருதுகளைப் பெற்றவர். அவர் பெயரில் அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றைச் சிமோகா நகரில் அமைத்துள்ளனர். கன்னடத்தில் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணியாற்றிய குவெம்பு மைசூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். அவர் பெயரால் தரப்படும் உயரிய விருதொன்று தமிழ்மொழிக்கு இமையம் மூலமாக வந்து சேர்ந்துள்ளது.
அறக்கட்டளையின் நோக்கம்
கர்நாடக கவிஞர் குவேம்புவின் எழுத்துக்களைப் பிரபலப்படுத்தவும், அவர் முன்வைத்த கொள்கைகளைப் பரப்பவும் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையான ‘ராஷ்டிரகவி குவெம்பு பிரதிஷ்டானா’வால் இந்த குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது நிறுவப்பட்டது. இது குறித்து சித்ரகலா பரிஷத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பி.எல்.சங்கர்,
“பெங்களூரில் நவம்பர் 20-ம் தேதி குவெம்பு தேசிய விருது தேர்வுக் குழு கூட்டம் நடந்தது. இதில் சென்னை கிறிஸ்துவப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணசாமி, சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்ச்செல்வி மற்றும் சாகித்ய அகாடமியின் ஓய்வுபெற்ற செயலாளர்கள் டாக்டர் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் ஹம்பனா, இணைச் செயலாளர் கடைதல் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருதுக்கு மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் மூவராக சுருக்கப்பட்டது. இறுதியாக, தனது முக்கியமான படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தின் செழுமையையும் உண்மையையும் உயர்த்திய, இன்றைய எழுத்தாளர்களில் முக்கியமானவரான இமையம் என்று அழைக்கப்படும் வி.அண்ணாமலை 2022-ம் ஆண்டுக்கான குவெம்பு தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.” எனத் தெரிவித்தனர்.
தேசியக் கவிஞர் குவேம்பூரின் பிறந்த நாளில் டிசம்பர் 29 அன்று எழுத்தாளர் இமையத்திற்கு குவெம்பு ராஷ்டிரிய புரஸ்கார் விருது வழங்கப்படும். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இந்த விருதை வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. எழுத்தாளர் இமையத்துக்கு எமது வாழ்த்துக்கள்.