ஆசையின் விலை ஆராதனா | 5 | தனுஜா ஜெயராமன்

 ஆசையின் விலை ஆராதனா | 5 | தனுஜா ஜெயராமன்

வெங்கடாச்சலம் சேரில் சாய்ந்தபடி அமர்ந்து “கேளுங்க” என்றார் அலட்சியமாக…

“ஆராதனா கல்யாண மேட்டர் பத்தி உங்க ஒய்ஃப் சொல்லியிருந்தாங்க… உங்க தங்கச்சி பையன் இப்ப என்ன செய்யறார்..?”

“அது… நடந்து பல வருஷம் ஆச்சி… இப்ப ஏன் இதெல்லாம் கேட்கறீங்க..?”

“பரவாயில்லை, சொல்லுங்க.. சின்ன விஷயங்களும் இந்த கேஸ்ல எங்களுக்கு ரொம்பவே முக்கியம்”

“ஆமா… அம்ரிதா அம்ரீஷைத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்பிடிச்சு அந்த கல்யாணத்தை நிறுத்திட்டா.. இதுனால என் தங்கச்சி குடும்பம் ரொம்ப அவமானமா பீல் பண்ணாங்க.. இப்ப வரைக்கும் கூட எங்ககிட்ட சரியா பேசுறதில்லை.. ஆனா அப்புறம் கொஞ்ச நாள்ல அவங்க விக்னேஷ்க்கு வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க.. இப்ப அவனுக்கு நாலு வயசுல பையன்கூட இருக்கான்”..

“உங்களுக்கு அம்ரிதா மேல ரொம்ப கோபம் இருந்ததாமே..?”

“கோபமில்லை அது, வருத்தம். மொதல்ல இருந்தது, இப்ப இல்லை நாளடைவில் அதெல்லாம் சரியாப் போச்சு.. ஆமா… இதையெல்லாம் ஏன் கேக்கறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?”

“சும்மா தான்… ஆமா, விக்னேஷூக்கு இது சம்பந்தமாக ஏதாவது கோபம் இருந்திச்சா..?”

” மே பி… இருந்திருக்கலாம்! ஆனா.. ஏழு வருஷம் ஆச்சி… இதை மனசுல வெச்சிக்கிட்டுக் கொலையெல்லாம் பண்ணுவானா என்ன?”

“அதை நாங்க பாத்துக்கறோம். எதுக்கும் விக்னேஷோட அட்ரஸையும், போன் நம்பரையும் குடுத்துருங்க ரவிகிட்ட.. அப்புறம் அம்ரீஷ் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்க”..

“அம்ரிஷ் தங்கமானவரு தான்… ஆராதனா, ஆத்யா இரண்டு பேரையும் அக்கறையா பாத்துப்பார். ஏன்… கல்யாணம் ஆனதிலிருந்து சொத்துக்களை வாங்கும் போதுகூட ஆராதனா பேர்ல தான் வாங்குவார்”

“ஓ… ஐசி.. ஆமா.. உங்க வீட்டு சொத்துக்கள் யார் பேர்ல இருக்கு..?”

“அது என் மனைவி பேர்லே தான் இருந்தது. கல்யாணத்திற்கு பிறகு ஆராதனா பேருக்கு மாத்திட்டோம். அவள் எங்களுக்கு ஒரே மகள். எல்லாமே அவளுக்கு தானே..?”

“கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. ஆராதனா உங்க சொந்த மகளா..?”..

“இல்லை… ஆனா அவளை அப்படித்தான் இதுவரை வளர்த்துகிட்டு வரேன்”… என்றார் சற்று கோபமாக…

“சொத்துக்காக அம்ரீஷ் உங்க மகளை…”

“ச்சே!.. ச்சே!… எங்க சொத்தை விட அம்ரீஷ் சம்பாதித்த சொத்து பலமடங்கு அதிகம்… ஏன் இப்படியெல்லாம் கேக்குறீங்க..?”

“இது எங்க டியூட்டி… அதைத்தான் நாங்க செய்யறோம். தென்… அந்த “மில்லேனியன் ஸ்டோன் ப்ளாட் யார் பேர்ல இருக்கு..?”

“அதை மட்டும் போனமுறை வந்தப்ப அவர் பேர்லதான் வாங்குனாரு மாப்பிள்ளை”

“ம்… அதோட சாவி மொத்தம் எத்தனை..? அது யார்கிட்ட இருக்கு..?”

“என்கிட்ட ரெண்டு சாவி இருக்கு… மூணாவது சாவி பரணிகிட்ட இருக்கு.”

“ப..ர…ணி?” என அனாமிகா தலையைத் தட்டி யோசிக்க…

“அவர்தான் ப்ளாட்டில் இன்டீரியர் ஒர்க் பண்றாரு. அம்ரீஷோட ப்ரண்ட் வேற. அம்ரீஷ் கொடுக்க சொன்னதால ஒரு சாவியை அவர்ட்ட கொடுத்திருக்கோம்.”

“ஓ… பரணிதரன்.. யெஸ், கரெக்ட்.. தாங்யூ மிஸ்டர் வெங்கடாச்சலம்… தேவைப்பட்டா, ஏதாவது டவுட் இருந்தா உங்ககிட்ட கேட்டுக்கறோம்… இப்பத்திக்கு இவ்ளோ தான்” என அவரையும் விஜயலட்சுமியையும் நன்றி சொல்லி அனுப்பி வைத்தாள்.

“என்ன ரவி..! ஒரே குழப்பமாக இருக்கு… வெங்கடாச்சலம் நல்லவருன்னு அவர் மனைவி சர்டிபிகேட் தராங்க… அம்ரீஷூம் நல்லவருன்னு வெங்கடாச்சலம் சர்டிபிகேட் தர்றாரு… எல்லாருமே நல்லவங்கன்னா யாரைத் தான் நாம சந்தேகப்படுறது..? ச்சை, ஒரே குழப்பமா இருக்கு”

“நாம எதையாவது மிஸ் பண்றமா மேடம்..?”

“தெரியலையே.… நாம இன்னும் விசாரிக்க வேண்டியது பரணிதரனையும், அந்த விக்னேஷையும் தான்… பார்ப்போம் அவங்ககிட்ட இருந்து ஏதாவது க்ளு கிடைக்குதான்னு…”

“மேடம்..! ஆராதனாவோட போன் லாக் ஓபன் ஆகிட்டு வந்தாச்சி. இந்தாங்க” என நீட்டினான் அலெக்ஸ்.

“ஆமால்ல… இதை மறந்தே போயிட்டேன். இதுலயாவது ஏதாவது க்ளு கிடைச்சா நல்லாயிருக்கும்” என போனை திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

போனை ஆன் செய்ய ஆராதனாவும் அம்ரீஷூம், ஆத்யாவுடன் போட்டோவில் சிரித்து கொண்டிருந்தார்கள். அழகான பொருத்தமான ஜோடி, அழகான குடும்பம், குழந்தை.. இந்த ஆராதனாவுக்கு என்ன தான் பிரச்சனை இருந்திருக்கும் என்ற கேள்வி மனதை குடைந்தது.

கான்டாக்ட் லிஸ்டை நோட்டமிட்டாள். ரீசன்ட் கால்ஸை செக் செய்தாள். இரண்டு நாளுக்கு முன்புதான் இந்திய சிம்மை மாற்றியிருக்கிறாள். அம்ரீஷ், விஜி, வெங்கடாச்சலம் மற்றும் ரியல் எஸ்டேட் மூர்த்தி என்ற நம்பர்களே இருந்தது. ஒரு புதிய நம்பரிலிருந்து கால் வந்திருந்தது… இது யாராயிருக்கும் என நம்பரை நோட் செய்தாள். அந்த நம்பரில் வாட்சாப் இருப்பதை காட்ட… உடனடியாக வாடசாப்பைத் திறந்தாள். நல்லவேளை வாட்சாப் லாக்அவுட் செய்யப்படவில்லை.

அந்த நம்பரின் வாட்சாப்பில் முகப்பு படத்தில் அழகிய இளைஞன் ஒருவன் சிரித்துக்கொண்டிருந்தான் ரித்தேஷ் என்ற பெயருடன்… நடிகர் மாதவனின் சாயல்.. வாட்சாப்பில் இரண்டு நாட்களுக்கான மெசேஜ் மட்டுமே காட்டியது. ச்சே… புது போனில் சிம்மை மாற்றியதால் பழைய மெசேஜ்கள் அழிந்துவிட்டிருக்கிறது. அடக்கடவுளே! ஹாய் மெசேஜை தொடர்ந்து வீட்டிற்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறான் மெசேஜ் மூலம்.. யாரிவன்? என்ற கேள்வி குடைந்தது அனாமிகாவிற்கு. இவனையும் லிஸ்டில் வைத்து விசாரித்துவிட வேண்டும்.

“ரவி.. நாம நாளைக்கு ஆராதனாவின் ப்ளாட்க்கு போய் ஏதாவது எவிடென்ஸ் கிடைக்குதான்னு பார்ப்போம்.. ஏற்கனவே அங்க தரோவா சர்ச் பண்ணியாச்சில்ல..”

“பண்ணியாச்சி… மொபைல், கார் சாவி எல்லாம் அங்கேயிருந்து தான் எடுத்தோம்.. சொல்லிக்கற மாதிரி எதுவும் கிடைக்கலை..”

“ம்…” என யோசித்தவள்… “அந்த டைனிங் டேபிள் மேல் ஸ்விகியில் ஆர்டர் பண்ண சாப்பாடு இருந்ததே… அப்படின்னா அந்த புட் டெலிவரி பண்ணவன் ஏதாவது பார்த்திருக்கலாம்ல… அவனைக் கண்டுபிடிக்கணும் மொதல்ல..”

ஆராதனாவின் போனை திறந்து ஸ்விகி ஆப்பிற்கு செல்ல உணவினை 12 மணிக்கு ஆர்டர் செய்திருந்தாள். டெலிவரி பர்ஸன் 12.45 விற்கு டெலிவரி செய்திருந்தான். பெயர் செல்வகுமார் கணேசன் என்று காட்டியது. ஆனால் நம்பர் காட்டவில்லை.

“ரவி, ஆர்டர் நம்பரை நோட் பண்ணி ஸ்விகியில் இந்த செல்வகுமார் கணேசன் நம்பரை வாங்கி கான்டக்ட் பண்ணி வரச்சொல்லுங்க.”

“யெஸ்… மேடம்..” என ஸ்விகியை தொடர்பு கொண்டார் ரவி.

அப்பாடா! இவ்வளவு தகவல்கள் சேகரித்தும் இன்னமும் கேஸ் ஒரு இம்மியளவு கூட நகரவில்லையே என ஆயாசமாக இருந்தது அனாமிகாவிற்கு.

–அனாமிகா வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...